மோகன் ஜி/லொட்டாங்கை

இன்று உலக இடதுகை பழக்கக்காரர்கள் தினம்.
எல்லா இடங்கை இனியவர்களுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும் .

நானும் ஒரு ‘பீச்சாங்கை பிளாட்டோ’ தான். இடதுகை பழக்கம் உடையவர்களுக்கு பால்யத்தில் விளையும் குழப்பங்கள் சற்றே அதிகம்.

இடதுகையால் எழுதுவது, சாப்பிடுவது என்று துவங்கிய என் வாழ்க்கையில், சில கேள்விகளை அடிக்கடி எதிர்கொள்ள நேர்ந்தது.

‘இடது கையால சாப்பிடுறயே… அப்ப சோத்துக்கையாலயா அலம்புவ? கருமம்..’

மிக அவமானமாக உணர்வேன்.

யாருக்கும் எதையும் கொடுக்கும் போதோ, வாங்கும் போதோ தன்னால் இடதுகை நீளும்.
‘கையை மாத்துடா’ என்ற அம்மாவின் கடிந்துகொள்ளலோ, புருவ நெரிப்போ என் குற்ற உணர்வைத் தூண்டும். கைகளை உபயோகிக்கும்முன், எந்தக்கையை நீட்டுவது என்ற ஜாக்கிரதை உணர்வோடு செயல்படுவது சிறிது அழுத்தத்தைத் தந்தது.

இரண்டாம் வகுப்பு முழுப்பரிட்சை விடுமுறையில், என் சாவித்திரி சித்தியும் அக்காவும் என் இடது கை பழக்கத்தை மாற்றும் முயற்சி மேற்கொண்டார்கள். அதாவது ஒரு மாதம் இரண்டு கைகளுக்கும் ‘ஓவர்ஹாலிங் ஷட் டவுன்’ அறிவிக்கப்பட்டது. உணவு ஊட்டிவிடப்பட்டது. அலம்பி அழகு பார்க்கப் பட்டது!

தொடர்ந்து வலதுகையால் எழுத வைக்கப் பட்டேன். கண்டிப்பாக இடதுகையால் எழுதக்கூடாது என்று கண்காணிக்கப் பட்டேன். எனக்கும் இடதுகை மானப்பிரச்னையாகத் தோன்றியதால் விடாமுயற்சியுடன் மாற்றத்திற்கு ஒத்துழைத்தேன். பிறகு வலதுகையால் சாப்பிடவும் பழகினேன்.

வலதுக் கையில் காசி ரட்சைக்கயிறு ஒன்றைக் கட்டிவிட்டு, கயிறு உள்ள கை வலதுகை; அதைதான் வாங்கவோ கொடுக்கவோ உபயோகப்படுத்த வேண்டும் என்று வழிகண்டாள் என் அக்கா இந்த மோகனுக்கு….

ஆனாலும், இன்றுவரை கோடு போடுதல், வரைதல், பல் துலக்குதல், விளையாடுதல் யாவும் இடதுகையால் தான். இன்றும்கூட இடது கையால் அதிகக் கோணல் இன்றி என்னால் எழுதமுடியும்.

சில வருடங்களுக்குமுன், இடது கை பழக்கமுள்ள குழந்தைகளை வலதுகைக்கு மாற்ற யத்தனிப்பது தவறு என்ற மருத்துவ ஆய்வு வெளியானது. அப்படி மாற்றத்திற்கு உள்ளாகும் குழந்தைகள், உளச்சிக்கல்களுக்கு ஆளாவார்கள் என்றும், தாறுமாறான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு உண்டு என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.

அப்படி ஏதும் கொஞ்சம் கிறுக்குபோல்
நடந்து கொள்கிறேனோ என்று
மனைவியிடமும் கேட்டேன்.
‘ நமக்கு கல்யாணமானபோதே நீங்க ‘கிறுக்கு’ங்கிறது தெரிஞ்சது தானே. இதற்கு ஆய்வெல்லாம் தேவையா என்ன?’ என்றாள்.

வங்கிக்கல்லூரியில் பணிபுரிந்தபோது, கல்லூரி வளாகத்தினுள் ஒரு மாலை டேபிள்டென்னிஸ் ஆடப் போயிருந்தேன்.
பயிற்சிக்கு வந்திருந்த ஒரு இளம் பெண் அதிகாரியுடன் ஆடத்துவங்கினேன்.

”என்ன சார்? இடதுகையில பேட்டை பிடிச்சிருக்கீங்க?” என்றாள்.

” உன்னை ஜெயிக்க இடதுகையே போதும்” என்று கெத்தாகச் சொல்லி ஜெயித்தும் விட்டேன். நான் வலதுகையில் விளையாடியிருந்தால், பந்து சுவற்றில் தான் பாய்ந்திருக்கும்.

அடுத்தநாள் மேலாண்மை வகுப்பின்போது என் ஆட்டத்தை புகழ்ச்சியுடன் அந்த பெண் அதிகாரி பிரஸ்தாபிக்கவும் செய்தார்.

‘தனது பலத்தையும் பலவீனத்தையும் எதிராளிக்கு பகிரங்கப் படுத்தாமல் செயல்படுவதே நல்ல தலைமைத் திறம்’ என்று என் இடதுகை ஆட்டத்தை, என் திறன்போலும் கையாண்ட விதத்தை, நடந்த விவாதத்தின் போது உதாரணமாகச் சொன்னேன்.

கையிலும் நேயத்திலும்
இடதென்ன? வலதென்ன?
இரண்டு கைகளும் ஒருசேர இணைந்தால்தான் பகவானைக் கும்பிடுவதும், பாரம் சுமப்பதும் சாத்தியம் அல்லவா?

எந்தக்கை வருடிக்கொடுத்தாலும் ஆதரவையும் ஆறுதலையும் மனம் உணரும் தானே?

லொட்டாங்கை மாஸ்டர்களுக்கு என் வாழ்த்துகள்

(மீள் பதிவு)