
100 வார்த்தைக்கதை
சிகப்பு கார், இரு இளைஞர்கள். அழகான பெண்
அந்தப்பெண் அழகாக இருந்தாள். இருவத்திரெண்டு வயதுதான் இருக்கும். கூட வந்த அம்மாவுக்கே வாளிப்பான உடல்வாகு. நல்ல நிறம். வசதியான மேல்தட்டுப்பெண்கள். இருவர் காலிலும் அடிடாஸ் ஷூ. வாக்கிங் போக மெயின் ரோடைத்தாண்டிய மரங்களடர்ந்த பாதை ரோடில் வேகு வேகுவென நடந்தார்கள்.
அமைதியைக்குலைப்பது போல விர்ரென ஒரு சிகப்பு கார் அவர்களை இடிக்கும் தூரத்தில் வந்து நிற்க, இறங்கினவர்கள் இரு இளைஞர்கள். உடையிலும் உடம்பிலும் பணத்திமிர் தெரிந்த இளைஞர்கள்.
அவசரவசரமாக இறங்கி பாய்ந்து சின்னப்பெண்ணை வாயைப்பொத்தினான் ஒருவன். இன்னொருவன் அவளை அப்படியே கால்களைப்பிடித்து தூக்கினான். மளமளவென காரின் பின்பக்கம் வந்து டிக்கியைத் திறந்து பெண்ணை அதில் செலுத்தினார்கள்.
அவள் முரண்டுபிடிக்க ஒருவன் அவள் கையைப்பிடித்து உடம்போடு அழுத்த இன்னொருத்தன் டிக்கியின் உட்பகுதிக்கு தள்ளி தடாரென டிக்கியை மூடி விட்டு நிமிர்ந்தபோதுதான் கவனித்தார்கள்.
அம்மாவைக்காணோம். இளைஞர்கள் சுற்று முற்றும் பார்த்தார்கள்.
சர்ரென்று ஒரு சப்தம். ஒரு குலுக்கலுடன் சிகப்பு கார் போயே போய்விட்டது.
அம்மாக்கள் கார் ஓட்டக்கற்றுக்கொண்டுவிட்டார்கள்
