
வந்தேன் நான் நமது
பாரதத்தைப் பார்ப்பதற்கே!
அந்தோ! அதிசயமே..
அகிம்சை உண்டோ காண்பதற்கே!
ஹே… ராம்! ஹே..ராம்!
சாலையில் போதையிலே..
இளைஞர் உருளக் கண்டேனே!
சகலரும் இலஞ்ச ஆற்றில்
மூழ்கிக் குளிக்க கண்டேனே!
ஓலைக் குடிசையிலே..
ஒதுக்குப்புறத்தில் பலர் இருக்க..
பாலோடு பழரசத்தை
சிலர் சுவைக்கக் கண்டேனே.!
வெள்ளையர்கள் சென்ற பின்னே.. கொள்ளையர்கள் வந்தனரே..
நல்லவர்கள் மூலையிலே.. நடைதளரந்து சென்றனரே!
வாயிருந்தும் மௌனமாக
வாழுகின்ற மாந்தர்களே..
தேய்கின்ற செருப்பு போல உழைத்து இளைத்த தோழர்களே!
நான் இன்று வந்தபோதும் கடந்துபோகும் பாரதமே..
ஏனென்று பதறுகின்றேன்.. எனைமறந்தது ஏன் உலகே.?
கருணையை விதைத்து சென்றும் முட்ச் செடிகள் மண்டியதே. கடமைக்கு இன்றொருநாள் சுதந்திர நாள் கொண்டாடியதே.!
தாழ்பணிந்து வேண்டுகிறேன்.. சத்தியமாய் வாழுங்களே! மேல் உலகு அழைக்கிறதே செல்கின்றேன் நான் உலகே.!
