திருப்பூர் கிருஷ்ணன்/அருளைப் பொழியும் திருமகள்!

வரலட்சுமி விரதம்: 16. 8. 2024:
……………
*
……………
*சரஸ்வதிக்கென்று சரஸ்வதி பூஜை என ஒரு பண்டிகை இருப்பது மாதிரி லட்சுமி தேவிக்கென்றும் ஒரு தனிப் பண்டிகை இருக்கிறது. அதுதான் வரலட்சுமி விரதம்.

லட்சுமியை வரலட்சுமி விரத நாளன்று வழிபடுபவர்கள் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஆன்மிகவாதிகளின் நம்பிக்கை.

லட்சுமிதேவி பொருட்செல்வத்தை மட்டும்தான் அருள்வாள் என்பதில்லை. எல்லாப் பேறுகளுமே செல்வம்தான். கல்விச் செல்வத்தை அருளும் லட்சுமியை வித்யா லட்சுமி என்கிறோம்.

லட்சுமிதேவி அஷ்ட லட்சுமியாக எட்டு வடிவில் எட்டு பாக்கியங்களை அருள்கிறாள். அஷ்ட லட்சுமிகளின் வடிவத்தையும் உள்ளடக்கி சென்னை பெசன்ட் நகரில் அஷ்ட லட்சுமி ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

அஷ்ட லட்சுமிகளுக்கு சம்ஸ்க்ருத நாமங்களும் அவற்றிற்கிணையான அழகிய தமிழ்ப் பெயர்களும் உள்ளன.

ஆதிலட்சுமி (முந்து திரு), தான்ய லட்சுமி (தானியத் திரு), வீர லட்சுமி (திறல் திரு) , கஜலட்சுமி (வேழத் திரு), சந்தானலட்சுமி (அன்னைத் திரு), விஜயலட்சுமி (வெற்றித் திரு), வித்யாலட்சுமி (கல்வித் திரு), தனலட்சுமி (செல்வத் திரு).

லட்சுமியின் வாகனம் ஆந்தை. இரவில் கண்விழித்திருக்கும் ஆந்தை, இரவிலும் கடினமாய் உழைத்துப் பணிசெய்பவர்களுக்குச் செல்வம் சேரும் என்பதை உணர்த்துகிறதோ?

லட்சுமி பாற்கடலில் தோன்றியவள். தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி, பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது அமுதத்திற்கும் முன்னால் காமதேனு, உச்சைசிரவஸ் என்ற குதிரை, ஐராவதம் என்ற யானை, கற்பக விருட்சம் என ஏராளமானவை தோன்றின.

கொடுமையான ஆலகால விஷமும் அதில்தான் தோன்றியது. அதை அள்ளிப் பருகி உலகம் விஷத்தால் பாதிக்கப்படாமல் கருணையோடு காத்தான் சிவபெருமான்.

பாற்டலிலிருந்துதான் லட்சுமியும் தோன்றினாள். பேரழகியான அவள் யாரை மணக்கப் போகிறாள் என்றறிய தேவர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருந்தனர்.

நாணத்தோடும் கையில் மாலையோடும் நடந்த அவள் திருமாலின் திருமார்பில் மலர்மாலையை அணிவித்து அவரையே மணாளனாக ஏற்றாள்.

திருமால் அவளைத் தன் இதயத்தில் ஏற்றுப் பெருமைப்படுத்தினார். இப்போதும் வெங்கடாசலபதியின் திருமார்பில் லட்சுமிதேவி குடிகொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

லட்சுமி, செந்தாமரை மலரில் வீற்றிருப்பவள். லட்சுமிதேவியின் அழகிய தோற்றத்தை ஒரு கவிதையில் பாரதியார் சொல்லோவியமாகத் தீட்டியுள்ளார்:

`பாற்கடலிடைப் பிறந்தாள் – அது
பயந்த நல் அமுதத்தின் பான்மைகொண்டாள்
ஏற்குமோர் தாமரைப்பூ – அதில்
இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்

நாற்கரந் தானுடையாள் – அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்!
வேற்கரு விழியுடையாள் – செய்ய
மேனியள் பசுமையை விரும்பிடுவாள்!`

லட்சுமியைத் திடமான மனத்தோடு தியானம் செய்தால் செல்வ வளம் பெறலாம் என்கிறார் பாரதியார்.

செல்வத் திருமகளைத் திடம்கொண்டு சிந்தனை செய்திடுவோம்! செல்வமெல்லாம் தருவாள் - நமதொளி திக்கனைத்தும் பரவும்!

அலைமகள், கலைமகள், மலைமகள் என முப்பெருந்தேவியரைக் குறிப்பிடுவதுண்டு. அலைமகள், பாற்கடலின் அலைகளின் இடையே உதித்த லட்சுமி. கலைமகள், எல்லாக் கலைகளுக்கும் அதிபதியான சரஸ்வதி. மலைமகள், இமய மலையில் குடியிருக்கும் சிவனின் மனைவி பார்வதி.

லட்சுமிதேவியை அலைமகள் எனக் குறிப்பிடுவது இன்னொரு வகையிலும் பொருத்தம்தான். ஓர் இடத்தில் நில்லாமல் அலைபவள் அவள். பணம் ஓரிடத்தில் நிரந்தரமாய்த் தங்காமல் இடம் விட்டு இடம் ஓடிக் கொண்டே இருக்கிற தன்மை உடையது என்பது உண்மைதானே?

செய்யாள், செய்யவள், தாமரையினாள், திரு என்றெல்லாம் பல பெயர்களில் திருவள்ளுவர் திருக்குறளில் லட்சுமியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

லட்சுமி தேவி வழிபாடு திருக்குறள் எழுதப்பட்ட மிகப் பழைய காலத்திலேயே தமிழர்களிடையே இருந்திருக்கிறது என்பதை இதனால் புரிந்துகொள்ள முடிகிறது.

லட்சுமியின் தமக்கை மூதேவி. அவள் வறுமையைத் தருபவள். ஒருமுறை இவ்விரு சகோதரிகளுக்கும் இடையே ஒரு சச்சரவு வந்தது. இருவரில் யார் அதிக அழகு என்பதுதான் சச்சரவின் காரணம். தங்களில் யார் அதிக அழகு என்பதை அறிய அவர்கள் இருவரும் பல தேவர்களிடம் சென்று வினவினார்கள்.

அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல எல்லோருமே தயங்கினார்கள்.

காரணம் லட்சுமி அழகு என்றால் மூதேவி கோபித்துக்கொண்டு தங்கள் இல்லத்திற்கு வந்து பழிவாங்கும் வகையில் உட்கார்ந்துவிட்டால் என்ன செய்வது? வறுமை பீடிக்கும்.

மூதேவி அழகு என்றாலோ லட்சுமிக்குக் கோபம் வரும். அவள் தங்களை விட்டுப் போய்விட்டால் அதுவும் சங்கடம்தான்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் மற்ற தேவர்களும் இந்தக் கடினமான கேள்விக்கு பதில் சொல்லும் ஆற்றல் தங்களுக்கில்லை எனச் சொல்லி நழுவிவிட்டார்கள். இறுதியில் நாரதரிடம் சென்று கேட்டார்கள் லட்சுமியும் மூதேவியும்.

பார்த்தார் நாரதர். உங்கள் இருவரின் தோற்றத்தை வைத்துத் தீர்ப்புச் சொல்வது கடினம், கொஞ்சம் நடந்து காட்டுங்கள், நடையழகை வைத்து யார் அதிக அழகு எனச் சொல்கிறேன்! என்றார்.

இருவரும் சற்று தூரம் நடந்து திரும்பிவந்தார்கள். அவர்கள் இருவரின் நடையையும் கூர்மையாகப் பார்த்துவிட்டு நாரதர் சொன்னார்:

லட்சுமி வரும்போது அழகு, மூதேவி போகும்போது அழகு! செல்வம் வந்தால் அழகு, வறுமை போனால் அழகு என்பது உண்மைதானே!

*சீதாதேவியை சீதாலட்சுமி என்கிறோம். அவள் லட்சுமியின் அவதாரம். ராமாயணத்தில் பாதுகை பெறுவதற்காக பரதன் வந்தபோது, தான் கொண்டுவந்த ரத்தினங்கள் பதித்த பாதுகையில் ராமனை ஒருமுறை கால்வைத்து நின்று பின் பாதுகையைத் தனக்கு வழங்குமாறு வேண்டுகிறான் பரதன்.

ராமன் சீதாதேவியை அழைத்து பாதுகையின் அழகைக் குனிந்து பார்த்து ரசிக்கும்படிக் கூறுகிறான். பாதுகையை சீதை ரசிக்கவேண்டும் என்பதல்ல ராமனின் நோக்கம். சீதை லட்சுமி அல்லவா? அவள் அயோத்தியை விட்டுக் கானகம் வந்துவிட்டதால் அயோத்தியின் செல்வவளம் குன்றுமே?

சீதை பாதுகையைப் பார்த்ததால் பாதுகை லட்சுமி கடாட்சம் பெற்றதாக மாறிவிடுகிறது. அந்த லட்சுமி கடாட்சம் பெற்ற பாதுகை அரியணையில் ஏறி ஆட்சி செய்யும்போது அயோத்தியின் செல்வ வளம் குன்றாது. அதன்பொருட்டு ராமன் செய்த சூட்சுமமே அது.

இதுபோன்றதொரு சூட்சுமத்தைப் பின்னாளிலும் ராமன் நிகழ்த்துவதாக ஓர் அபூர்வ ராமாயணம் சொல்கிறது. சீதை சுந்தரகாண்டத்தில் அசோக வனத்தில் இருக்கிறாள். போர் முடிந்து, ராமன் வெற்றி பெற்றுவிட்டான். சீதையை அழைத்துவர விபீஷணனை அனுப்புகிறான் ராமன்.

விபீஷணன் சென்றபின் லட்சுமணன் ராமனைக் கேள்வி கேட்கிறான். அனுமனை அனுப்பாமல் அண்ணியை அழைத்துவர விபீஷணனை அனுப்பியது ஏன் என்பதே அவன் கேள்வி. அதற்கு ராமபிரான் ஒரு காரணத்தைக் கூறுகிறான்.

போரால் மாபெரும் இழப்பு நேர்ந்து இலங்கை செல்வ வளத்தையெல்லாம் இழந்துள்ளது. சீதை லட்சுமி அல்லவா? அவள் பார்வை, மன்னன் விபீஷணன் மேல் பட்டால் இலங்கை மறுபடி செல்வ வளம் அடையும் என்பதே ராமன் சொன்ன காரணம்.

ராம பட்டாபிஷேகத்திற்குப் பிறகும் சீதை லட்சுமிதேவியே தான் என்பது பற்றிய குறிப்பு ஓர் அபூர்வ ராமாயணக் கதையில் வருகிறது. துணிவெளுப்பவன் சொன்ன அபவாதத்தினால் சீதாலட்சுமி கானகத்திற்கு அனுப்பப் படுகிறாள்.

லட்சுமி நாட்டை விட்டுப் போனதால் அயோத்தியில் கடும் பஞ்சம் ஏற்படுகிறது. அதனாலேயே அஸ்வமேத யாகம் செய்ய வேண்டிய சூழலும் நேர்கிறது.

இந்தக் கதைப் பகுதி மூலம் ராமாயணம் இன்னொரு நீதிக் கருத்தையும் வலியுறுத்துகிறது. பெண்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுகளைப் பரப்புபவர்கள் வாழும் நாட்டில் செல்வ வளம் இருக்காது என்பதே அந்த நீதி.

*ஆதிசங்கரர் எழுதிய முதல் சுலோகமே லட்சுமியைப் பற்றியதுதான். அவர் இளம்வயதில் பிட்சை கேட்டு அயாசகன் என்பவன் வீட்டுக்குச் சென்றார். அயாசகன் நீராடுவதற்காகச் சென்றிருந்தான்.

அன்று ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசி. அவன் நீராடிவிட்டு உண்பதற்காக ஒரே ஒரு வாடிய நெல்லிக்கனி வைத்திருந்தான். வறுமை தாண்டவமாடும் வீடு அது. அந்த நெல்லிக்கனியைத் தவிர அந்த வீட்டில் உண்பதற்கு வேறெதுவும் இல்லை.

ஆதிசங்கரரின் பவதி பிட்சாம் தேஹி என்ற இனிய குரலைக் கேட்டாள் அயாசகனின் மனைவி. அவள் உள்ளம் உருகியது. இந்த தெய்வீகக் குழந்தைக்கு ஏதாவது பிட்சை இடவேண்டும் என அவள் மனம் பரபரத்தது.

இருந்ததோ ஒரே ஒரு வாடிய நெல்லிக்கனி. அதைக் கூச்சத்தோடு கொண்டுவந்து ஆதிசங்கரரின் பிட்சைப் பாத்திரத்தல் போட்டுவிட்டுக் கண்ணீர் மல்க உள்ளே ஓடிவிட்டாள் அவள்.

அவளது செயலைக் கண்ட சங்கரரின் மனத்தில் கருணை பெருகியது. இவர்களுக்குச் செல்வத்தை அருளக் கூடாதா எனக் கேட்டு லட்சுமி தேவிமேல் ஒரு சுலோகம் பாடினார் அவர்.

அங்கம் ஹரே எனத் தொடங்கும் அந்த சுலோகத்தை அவர் பாடி முடித்ததும் லட்சுமிதேவி அந்த இல்லத்திற்குக் கருணையைப் பொழிந்தாள். ஒரு வாடிய நெல்லிக்கனிக்கு பதிலாக ஆயிரக்கணக்கான தங்க நெல்லிக் கனிகள் அந்த இல்லத்தில் ஒன்றே முக்கால் மணிநேரம் மழையாகப் பொழிந்தன.

கனகம் என்றால் தங்கம். தாரை என்றால் மழை. தங்க மழை பொழிய வைத்த சுலோகம் கனகதாரா சுலோகம் என்றே பெயர் பெற்றுவிட்டது.

இந்த சம்பவம் நடந்த வீடு இப்போதும் கேரள மாநிலத்தில் ஆதிசங்கரர் அவதரித்த காலடி என்ற திருத்தலத்தில் உள்ளது. இன்றும் அன்பர்கள் கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து லட்சுமி கடாட்சம் பெறலாம்.

லட்சுமிதேவியை மன ஒருமைப்பாட்டோடு வழிபடுவோம். செல்வ வளத்தை மட்டுமல்ல, அஷ்ட லட்சுமிகளின் அருளால் அனைத்து மங்கலங்களையும் பெற்று ஆனந்தமாக வாழ்வோம்.

(நன்றி: மாலைமலர்)
…………………………