
ராமகிருஷ்ண பரமஹம்சர் ஸித்தி தினம்: ஆகஸ்ட் 16
……………………………..
……………………………..
*ராமகிருஷ்ண பரமஹம்சர் ஓதாது உணர்ந்த உத்தமர். அவர் பள்ளியில் சென்று அதிகம் படித்ததில்லை. அவர் அடைந்ததெல்லாம் கேள்வி ஞானமும் வாழ்க்கையில் பெற்ற அனுபவ ஞானமும் மட்டுமே.
எண்ணற்ற ஆன்மிக சாதனைகள் செய்து கடவுளை நேரில் தரிசிக்கும் பேறு பெற்றவர் அவர். கடவுளாகவே மாறியவர்.
காளிதேவி கங்கை நதியில் நீராடிவிட்டு தன் ஈரக் கூந்தலைக் கோயில் கோபுரத்தின் மேல் ஏறிநின்று காற்றில் உலர்த்தும் காட்சியை அவர் பார்த்திருக்கிறார்.
விவேகானந்தர் கடவுளை நேரில் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டபோது நான் பார்த்திருக்கிறேன், நீயும் காண முடியும் என உறுதியளித்தவர்.
தூய அன்னை சாரதாதேவியின் கணவர். மனைவியையே தெய்வமாகக் கண்டு மனைவியை பூஜித்தவர். இல்லற வாழ்விலும் முழுமையான துறவறம் காத்தவர்.
மெத்தப் படித்த மேதாவியான விவேகானந்தருக்கு அதிகம் படிக்காத பரமஹம்சர் குருவானது எப்படி என ஆச்சரியம் எழலாம். பள்ளிப் படிப்பால் நாம் பெறும் வெற்றுத் தகவலறிவு ஞானமல்ல. அனுபவ ஞானமே உண்மையான ஞானம்.
அனுபவத்தின் மூலம் பரமஹம்சர் அடைந்த ஞானம் கடலை விடப் பெரிது. ஆகாயத்தை விடப் பரந்தது. பூமியை விட விரிந்தது. அவர் செய்த எண்ணற்ற ஆன்மிக சாதனைகள் அவருக்கு ஏராளமான அனுபவ ஞானத்தைத் தந்தன.
மரத்தடியில் அமர்ந்து மக்களுக்கு நிறையப் போதனைகள் செய்தார் பரமஹம்சர். அன்பர்கள் அவரது போதனைகளைக் கேட்க மரத்தடியில் கூடினார்கள். கேட்டு மெய்சிலிர்த்தார்கள்.
பூவைத் தேடி வரும் வண்டுகளைப் போல் மக்கள் கூட்டம் அவரின் வாழ்நாள் முழுதும் அவரை மொய்த்துக் கொண்டிருந்தது.
எத்தனை பேர் வந்தாலும் எந்த நேரத்தில் வந்தாலும் அவர்களுக்கான தேவையறிந்து அவர்களின் சந்தேகங்களுக்கு விடைசொன்னார் அவர். தன்னை நாடி வந்த அன்பர்களது வாழ்க்கையை ஒரு தந்தைக்கே உரிய கனிவோடு அருளுரைகள் சொல்லி நெறிப்படுத்தினார்.
காமினி (புலன்நுகர்வு ஆசை), காஞ்சனம் (பொன்னாசை) இரண்டையும் தவிர்த்தால்தான் நிம்மதி கிடைக்கும் என ஓயாது வலியுறுத்தினார்.
இல்லறத்தில் இருந்தவாறே இறைவனை வழிபடலாம் என்றும் காலப் போக்கில் மனைவியை சகோதரியாக நினைக்கும் மனநிலையை ஒவ்வொருவரும் அடையவேண்டும் என்றும் போதித்தார்.
அவரது உபதேசங்களின் இடையிடையே சுவாரஸ்யமான குட்டிக் கதைகள் இடம்பெறும். அந்தக் கதைகள் அவரே உருவாக்கியவை. அதைக் கேட்கும் அன்பர்கள் ரசிப்பார்கள். சிரித்து மகிழ்வார்கள்.
கசப்பு மருந்தைத் தேனில் குழைத்துச் சாப்பிடுவது போல, கடினமான ஆன்மிகத் தத்துவங்களைக் கதைகள் என்னும் தேனில் கலந்து போதித்தார் அவர்.
அந்தக் கதைகள் அழியாத இலக்கியச் சிறப்புப் பெற்றவை. கடினமான கருத்துகளைக் கூட எளிதாகப் புரியவைப்பவை.
*உண்மைத் துறவின் மேன்மையைச் சொல்லவந்த பரமஹம்சர், போலித் துறவின் தன்மையை ஓர் அழகிய கதை மூலம் கூறியிருக்கிறார்.
திடீரென்று அந்தக் கணவன் தன் மனைவியிடம் தான் துறவியாகி, வனம் சென்று தவத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்தான்.
கணவனுக்கு அத்தகைய பக்குவம் இல்லை என்பதை மனைவி அறிவாள். ஆனாலும் அவள் கணவனை மறுத்துப் பேச விரும்பவில்லை.
சரி. புறப்படுங்கள். நானும் உங்களுடன் வருகிறேன்! என்றாள் அவள்!
துறவியான ஒருவருடன் அவன் மனைவி எப்படி உடன் வர முடியும்? என்று வியப்புடன் கேட்டான் கணவன்.
மனைவி சொன்னாள்:
நாதா! நீரோ துறவியாகப் போகிறீர். மனத்தளவில் துறவியாகி விட்டால் மனைவியைப் பற்றி உமக்கென்ன கவலை? நான் உடன் வந்தால் உமக்கென்ன? வராவிட்டால் உமக்கென்ன? நீர் முன்னே நடந்து செல்லும். நானும் துறவினியாக உம்மைப் பின் தொடர்கிறேன்!
கணவனால் பதில் பேச இயலவில்லை. மனைவியும் துறவியாகத் தானே வருகிறாள் என்றெண்ணி சமாதானம் செய்துகொண்டான்.
ஆற்றைக் கடந்துதான் கானகம் செல்ல வேண்டும். எனவே கானகம் நோக்கி ஆற்று மணலில் நடக்கலானான். அவன் பின்னால் மனைவி நடக்கலானாள்.
மணலில் ஒரு வைரக்கல் பளபளவென மினுமினுத்தது. கணவன் அதைப் பார்த்தான். பின்னால் வரும் மனைவியும் அதைப் பார்த்தாள் என்பதை அவன் அறியவில்லை.
வைரத்தைப் பார்த்தால் பெண்களுக்கு ஆசை வருவது இயல்பு. அப்படி மனைவிக்கு ஆசை வந்தால் அவளது துறவு நிலை பாழ்படுமே?
எனவே மனைவி பார்க்காதவாறு வைரக்கல்லை மறைப்போம் என நினைத்த அவன் மணலைக் காலால் திலாவி, வைரக் கல்லின்மேல் போட்டு அதை மறைக்க முயன்றான்.
கணவனின் மனப்போக்கை உணர்ந்த மனைவி, நாதா! என அவனை அழைத்தாள்.
வைரக்கல் எது, மண்ணாங்கட்டி எது என உமக்கு வித்தியாசம் தெரிகிறபோது உமக்குத் துறவு எதற்கு? பேசாமல் வீட்டிற்கு வாரும்! என்றாள் அவள்!
இப்படிப்பட்ட கதைகளைக் கேட்ட மக்கள் ரசித்துச் சிரித்தார்கள். உண்மைத் துறவு எத்தகையது என்பதைப் புரிந்துகொண்டார்கள். தங்கள் மனத்தைப் பக்குவப் படுத்திக் கொண்டார்கள்.
*பரமஹம்சர் சொன்ன இன்னொரு கதை உண்மையான ஆன்மிகம் சித்து வேலைகளைக் கடந்தது என்பதை உணர்த்துகிறது.
ஓர் அண்ணன் தம்பி. இருவருக்குமே ஆன்மிகத்தில் நாட்டம் அதிகம். அண்ணன் துறவியாகி ஆன்மிகத்தில் அதிகம் ஈடுபட்டு வாழ எண்ணம் கொண்டான். எனவே வனம் தேடிச் சென்றுவிட்டான்.
தம்பி இல்லறத்திலிருந்து கடவுளை வழிபட்டு இயன்றவரை ஆன்மிகத்தில் தோய்ந்து வாழ்ந்து கொண்டிருந்தான்.
சில ஆண்டுகள் சென்றன. ஒருநாள் கங்கைக் கரையில் தம்பி தியானம் செய்து கொண்டிருந்தபோது வனத்திற்குச் சென்ற அண்ணன் திரும்பி வந்தான்.
தம்பீ, நான் ஆன்மிகத்தில் மிகவும் முன்னேறிவிட்டேன். இதோபார். என்னால் தரையில் நடப்பதுபோல் தண்ணீரின் மேலும் நடக்க முடியும்! என்றான்.
தம்பி எதுவும் பேசவில்லை.
நீ நம்பவில்லை போலிருக்கிறது. இதோ நான் நடந்து காண்பிக்கிறேன்! என்ற அண்ணன் கங்கை நீர்மேல் கடகடவெனத் தரைமேல் நடப்பதுபோல் நடந்து அக்கரை சென்று தண்ணீர்மேல் நடந்தே திரும்பி வந்தான்.
தம்பி கலகலவெனச் சிரித்தான். அண்ணா! நீ அடைந்துள்ள ஆன்மிக முன்னேற்றம் வெறும் நாலணா பெறும் என்றான்.
அண்ணனுக்குப் புரியவில்லை. தம்பி விளக்கினான்:
`நீ நதிமேல் நடந்து திரும்பி வந்தாய். என்னால் அது முடியாது. நான் ஓடக்காரனுக்கு நாலணா கொடுத்து ஓடத்தில் போய்த் திரும்பி வந்திருப்பேன்.
ஆக அந்த நாலணா அளவுதான் உன் ஆன்மிகம் மதிப்புடையது! மற்றபடி இதனால் என்ன பயன்?` என்று தம்பி வினவியபோது அண்ணன் மனம் திகைப்படைந்தது என்பார் பரமஹம்சர்.
ஓயாமல் அலைபாயும் மனத்தை அதட்டி ஓய்ந்திருக்கச் சொல்வதல்லவா ஆன்மிகம்? மனத்துக் கண் மாசிலன் ஆதல் அல்லவா ஆன்மிகம்? சினமடக்கக் கற்றாலும் ஸித்தியெலாம் பெற்றாலும் மனமடக்கக் கல்லார்க்கு வாய்ஏன் பரபரமே? என்ற தாயுமானவர் பாடல் சொல்வதும் இதே கருத்தைத் தானே?
தேவையற்ற ஸித்திகளை அடைவதில் கவனம் செலுத்தாதீர்கள். மனத்தை இறைவன்பால் திருப்புங்கள், அதுவே ஆன்மிகத்தின் அடிப்படை! என அறைகூவினார் பரமஹம்சர்.
*நாம் நம் மனத்தில் என்னவாக வேண்டும் என நினைக்கிறோமோ அதுவாகவே ஆவோம் என்று அடிக்கடி வலியுறுத்துவார் அவர். எனவே மனத்தைக் கண்காணித்து நல்ல நினைவுகளை மட்டுமே நினைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துவார்.
தீய நினைவுகள் மனத்தில் தோன்றினால் மனத்தை அதட்டி அதை இறைவன்பால் திருப்ப வேண்டும் எனக் கூறுவார்.
அதற்கு அவர் உதாரணமாகச் சொல்வது வண்ணத்துப் பூச்சியின் கதை.
வண்ணத்துப் பூச்சி முதலில் பறக்கும் ஆற்றல் பெற்ற பூச்சியாக இருக்கவில்லை. மண்ணில் ஊர்ந்துசெல்லும் ஒரு புழுவாகத் தான் இருந்தது. கூட்டுப் புழுதான் வண்ணத்துப் பூச்சியாகப் பரிணாம வளர்ச்சி எய்துகிறது.
ஊர்கிற கூட்டுப்புழு நடக்க வேண்டும் எனக் கனவு கண்டால் அதுவே கடினம். ஆனால் அதுவோ நடந்து செல்வதையும் தாண்டிப் பறக்க வேண்டும் என்றல்லவோ கனவு காண்கிறது!
தான் வண்ணத்துப் பூச்சியாக மாற வேண்டி இரண்டு செயல்களைச் செய்கிறது அது. ஒன்று தான் கூட்டுப்புழு அல்ல, வண்ணத்துப் பூச்சி என்று ஓயாமல் நினைக்கத் தொடங்குகிறது. அந்த நினைப்பே அதை வண்ணத்துப் பூச்சியாக மாற்றுகிறது.
இன்னொன்று தன் நினைப்பை யாரும் தகர்த்து விடாமல் இருக்க அது தன்னைச் சுற்றி ஒரு கூட்டை அமைத்துக் கொண்டு, தன் நினைப்பில் ஆழமாகவும் தீவிரமாகவும் மூழ்குகிறது.
கடைசியில் என்ன நடக்கிறது? கொஞ்ச காலம் கழித்துக் கூட்டைக் கிழித்துக் கொண்டு வெளியே பறந்து செல்வது கூட்டுப் புழு அல்ல, வண்ணத்துப் பூச்சி!
பந்த பாசங்களில் சிக்குண்டு கூட்டுப் புழுக்களாக இருக்கும் நாம், நம்மை வண்ணத்துப் பூச்சி என உணர்ந்து இந்த பந்த பாசக் கூட்டை உடைத்துக் கொண்டு ஆன்மிக வானில் பறக்க வேண்டும் என்கிறார் பரமஹம்சர்.
*நிறையப் படித்து ஏராளமான தகவல்களை அறிந்துகொண்டு ஆன்மிகம் பேசுவதால் என்ன பயன்? ஆன்மிகத்தைப் பேசிப் பயனில்லை. பின்பற்ற வேண்டும்.
ஆன்மிக நெறிப்படி வாழ்வதல்லவா முக்கியம்? ஆன்மிகத்தைப் பின்பற்றாமல் வெறுமே தகவல்களைக் கொட்டுபவர்களைப் பார்த்துப் பரமஹம்சர் நகைப்பதுண்டு.
பஞ்சாங்கத்தில் மழை என்று வரும் எனப் போட்டிருக்கும். ஆனால் பஞ்சாங்கத்தைப் பிழிந்தால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராது! என்று சிரிப்பார் அவர்.
பரமஹம்சரின் இலக்கியச் சிறப்பு வாய்ந்ததும் என்றும் அழியாத உயர்ந்த கருத்துகளை உணர்த்துவதுமான குட்டிக் கதைகள் நம் ஆன்மிகத்திற்குக் கிடைத்த பொக்கிஷம்.
இன்றும் அந்தக் குட்டிக் கதைகளைப் பயில்பவர்களின் மனம் ஆன்மிகத் தெளிவை அடைகிறது.
(நன்றி: மாலை மலர்)
……………………………..
