கலீல் ஜிப்ரான்/முறிந்த சிறகுகள்

தமிழில் : தஙகேஸ்

கலீல் ஜிப்ரானின் உலகப் புகழ் பெற்ற
காவியமான

                   

         அத்தியாயம் : 5

(முதல் பாகம் )

                       **       புயல்  **

ஒரு நாள் பாரிஸ் எபாண்டி என்னை
வீட்டுக்கு விருந்துண்ண அழைத்தார்.
உடனே நான் ஒத்துக்கொண்டேன்.
சொர்க்கமே செல்மாவின் கரங்களில் அளித்திடும்
அந்த ஆன்மீக ரொட்டிக்காகவே

அந்த ஆன்மீக உணவு எவ்வளவு உட்கொள்கிறமோ
அவ்வளவு பசியை அது அதிகரிக்கும்
அரேபியக் கவிஞன் கயாஸ் ,
தாந்தோ மற்றும் சாப்போ
ஆகிய அனைவருமே லயித்து
உண்ட உணவு தான் அது
அவர்களின் இதயத்தில் ஒளியை
உண்டாக்கியதும்
அந்த ஆன்ம உணவுதான்

அந்த ரொட்டித்துண்டுகளோ காதலின் தேவதை
தனது முத்தத்தின் தித்திப்பாலும்
கண்ணீரின் துவர்ப்பாலும் கலந்து செய்தவைகளாம்

நான் பாரிஸ் எபாண்டியின் வீட்டிற்குச் சென்றபோது
தோட்டத்திலேயே என் செல்மாவை கண்டு கொண்டேன்.

விண்ணை நோக்கிய வண்ணம்
ஒரு மரத்தில் தலைசாய்த்து அமர்ந்திருந்தாள்
வெந்நிறப்பட்டாடையில் ஒரு மணமகள் போல
அந்த இடத்தின் காவல்தேவதையே போல

ஆழ்ந்த அமைதி கலந்த மரியாதையுடன் நான்
அவளுக்கு அருகில் சென்று அமர்ந்தேன்
பேச நா எழவில்லை
அமைதியில் அமிழ்ந்துவிட்டேன்
அமைதி மட்டும் தானே என்றும் இதயத்தின் ஒரே மொழி ?

எனது செல்மாவோ வார்த்தைகளற்ற எனது வார்த்தைகளை
உணர்ந்து கொண்டுதானிருந்தாள் என
கண்டு கொண்டேன்

என் ஆன்மாவின் உருவை
என்கண்களின் வழியே அவள்
தன் கண்களில் கண்டு கொண்டாள்.

சிறிது நேரத்தில் முதியவர் வெளியே வந்து
என்னை உச்சி முகர்ந்து வரவேற்றார்
அன்புடன் அவர் கரங்களை நீட்டிய நேசத்தில்
எனக்கும் செல்மாவுக்கும் இடையில் பூத்திருந்த புதிய நேசத்தை
அவர் புரிந்து கொண்டிருந்ததை நானும் இரகசியமாய் உணர்ந்தேன்

‘’ விருந்து தயாராக இருக்கிறது குழந்தைகளே
வாருங்கள் உண்ணலாம்
என்று உரிமையாக அழைத்தார் ‘’
நாங்கள் எழுந்து அவரைப் பின் தொடர்ந்தோம்

செல்மாவின் கண்களோ பூரிப்பில் பிரகாசித்தன
எங்களிருவரையும் குழந்தைகளே
என்று தன் தந்தை அழைத்தது தான் காரணம்
.
எங்களது காதலை அவர் அங்கீகரித்து விட்டார்
உள் உணர்வு சொல்லியது.

நாங்கள் உணவு மேசை முன்பு அமர்ந்து
உணவருந்திக்கொண்டிருந்தோம்
ரொட்டிகளையும் பழைய ஒயினையும்
சுவைத்துக்கொண்டிருந்தோம்

ஆனாலும் எங்கள் ஆன்மாவோ
வெகுதொலைவில்
அலைந்து கொண்டிருந்தது
நாங்களோ
எதிர்கால கசப்புகளை நாங்கள்
கனவு கண்டு கொண்டிருந்தோம்

மூன்று மனிதர்கள்
சிந்தனையால் பிரிக்கப்பட்டவர்கன்
ஆன்மாவால் இணைக்கப்பட்டவர்கள்
மூன்று களங்கமற்ற ஜீவன்கள்
உணர்வுகள் மிகுதி கொண்டவர்கள்ஆனால்
உலக அனுபவம் அற்றவர்கள்

தன் மகளை அளவற்று நேசிக்கும் ஒரு முதியவர்
அவளின் மகிழ்ச்சிக்காகவே வாழ்ந்து வருபவர்
அங்கே ஒரு நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருந்தார்.

இருபது வயது நிரம்பிய இளமங்கை ஒருவள்
தன் எதிர்காலத்தை பத பதைப்புடன் பரவசத்துடன்
பார்த்துக்கொண்டிருந்தாள்

அடுத்து அந்த இளைஞன்
கவலைப்படுவதும் கனவுகாண்பதுமே
அவன் உலகமாயிருக்கிறது

வாழ்க்கை மதுவை அவன் அருந்தி முடிக்கவுமில்லை
அதனுடைய புளிப்புச் சுவையையும் இன்னும்
முற்றாக சுவைத்து முடிக்கவுமில்லை
காதலின் உயரத்தை தொட்டுவிடத்துடித்துக்கொண்டிருக்கிறான்
அவனால் அது முடியவில்லை.

நாங்கள் மூவரும் அந்த மங்கிய வெளிச்சத்தில்
உணவருந்திக் கொண்டே
ஒயினைப்பருகிக் கொண்டிருந்தோம்
தூரத்திலிருந்தாலும் சொர்க்கத்தின் கண்கள்
எங்கள் மீதே பதிந்திருந்தன

எங்கள் கண்ணாடி குடுவையின் அடிப்பகுதியிலோ
கசப்பும் வேதனையும் கலந்த கலவை
அடர்த்தியாய் மறைந்திருந்தது.

நாங்கள் உணவருந்தி முடித்த போது
பணிப்பெண் வந்து
ஒரு மனிதரின் வருகையை அறிவித்தாள்
அவன் அவரை சந்திப்பதற்கு கதவருகே
காத்திருப்பதாகவும் தெரிவித்தாள்.

அந்த முதியவர் தன் மகளின் முகத்தை
ஒரு நொடி உற்றுப்பார்த்தார்.
ஒரு தெய்வீக தீர்க்க தரிசி
விண்ணின் இரகசியத்தை அறிய
அண்ணாந்து பார்ப்பது போல் ஒரு பார்வை
பிறகு அந்த மனிதனை உள்ளே வர அனுமதித்தார்.

சிறிது நேரத்தில் அங்கே ஒரு மனிதன் பிரசன்னமானான்
கிழக்கத்திய சீருடை
மேற்புறம் முறுக்கி விடப்பட்ட மீசை

முதியவரை வணங்கிய பின்
** மேன்மை தங்கிய பாதிரி உங்களை
உடனே அழைத்து வரச் சொல்லியிருக்கிறார்.
தனது பிரத்யேக கோச் வண்டியை அதற்காகவே அனுப்பியிருக்கிறார். என்றான்.

முதியவரின் முகத்தில் தோன்றியிருந்த புன்னகை
மறைந்தது
அங்கே இருள் படர்ந்தது.
ஒரு ஆழ்ந்த சிந்தனையில் வீழ்ந்து பின்பு
மீண்டு எழுந்து என்னிடம் வந்து சேர்ந்தார்.

அன்பான குரலில்
‘ இளைஞனே நான் மீண்டும் இவ்விடம்
திரும்பி வரும் வரையிலும்
நீ செல்மாவுடன் இருப்பாய் தானே ?

இந்த தனிமையில் செல்மாவுக்கு
உன் அருகாமை
அதிகம் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
பிறகு ஒப்புதலை எதிர்பார்த்து செல்மாவிடம் திரும்பினார்,.

அவளது கன்னங்களோ வெட்கத்தில் சிவந்தேவிட்டன
சம்மதமாய் தலையசைத்து வைத்தாள்.

பின்பு யாழை விட இனிமையான தன் குரலில்
‘’ நம்முடைய விருந்தாளியை மகிழ்விக்க
என்னால் இயன்றதை செய்கிறேன் தந்தையே ‘’ என்றாள்

தந்தையை ஏற்றிச் சென்ற கோச் வண்டி
பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவள்
என் எதிரில் வந்து பச்சைப் பட்டாடை போர்த்தியிருந்த
திவான் சோபாவில் அமர்ந்தாள்.

ஒரு அல்லி மலர் விடியல் தென்றலில்
சற்று முன்புறம் வளைந்து
பச்சைப்புல் வெளியை முத்தமிடப்போகிறதா?

இந்த இரவில் நானும் செல்மாவும் தனித்திருக்க வேண்டுமென்பது
சொர்க்கத்தின் ஆணைதான்போல..
வேறு என்ன ?

அழகான மரங்கள் சூழ்ந்த வீடு
அழகு அமைதி ஆனந்தம் மற்றும்
தூய்மை அங்கே நிரம்பி வழிந்தது.

நாங்கள் இருவருமே அமைதியாக இருந்தோம்
ஒருவர் மற்றவர் பேசட்டும் என்று எதிர்பார்த்தபடி
அதனால் என்ன இரண்டு கண்கள்
ஒன்றை ஒன்று புரிந்து கொள்ள
பேச்சு ஒன்றும் பிரதான மொழியில்லையே ?

இதயங்களை இணைக்கும் சொற்கள் எப்போதும்
உதடுகளிலிருந்து உற்பத்தியாவதில்லையே ? ..
வாய்வார்த்தைகளைக் காட்டிலும் மகத்துவம் வாய்ந்தது
வேறொன்று உள்ளது
அமைதி அமைதி அமைதியே அது

ஆன்மாக்களில் ஒளி பாய்ச்சி
இதயங்களிடம் இரகசியம் கிசு கிசுத்து
அவைகளை இணைத்துவிடும் அமைதியே அது

அதுவே தான்இப்போது
எங்களது ஆன்மாக்களை
எங்களிடமிருந்து பிரித்து
விண்வெளி ஓடையில்
நன்றாக நீந்தவைத்துக்கொண்டிருந்தது.

உடல் என்பது தான் என்ன
ஒரு சிறையைத்தவிர வேறில்லை
என்று எங்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்ததோ?

என் செல்மா என்னை
அப்படி ஒரு பார்வை பார்த்தாள்
அவளது கண்களே அவளது இதயத்தை திறந்து காட்டின

‘’ நாம் தோட்டத்திற்கு செல்லலாம்
மரங்களின் கீழமர்ந்து மலையின் மீது நிலவு உதிப்பதை
காணலாம் தானே என்றாள்’’

அனிச்சையாய் நானும் எழுந்து விட்டேன்
ஆனாலும் சிறிய தயக்கம்

நிலவு உதித்து ஒளியைப் பாய்ச்சிய பின்பு
நாம் தோட்டத்திற்குள் சென்றாலென்ன ?
அதுவரையிலும் நாம் இங்கேயே
அமர்ந்திருக்கலாம்என்றேன்.

‘’ இருள் மரங்களையும் மலர்களையும்
நம் கண்களிலிலிருந்து
மறைத்துவிடுமல்லவா
நாம் எதையும் காணமுடியாதல்லவா ?
என்றேன்

செல்மாவோ
** இந்த இருள் மரங்களையும் மலர்களையும் மட்டும் தான்
நம் கண்களிலிலிருந்து மறைக்க கூடும்
ஆனால் நம் கண்களில் ஒளிரும் காதலை
ஒரு போதும் அதனால் மறைக்க முடியாது ‘’ என்றாள்

ஈர்ப்பின் மயக்கத்தில் இந்த வார்த்தைகளை உதிர்த்தவள்
சன்னல் வழியாக பார்வையைத் திருப்பினாள்
நான் அமைதியிலாழ்ந்தேன்

அவளது சொற்களின் ஒவ்வொரு அசையையும் அசைபோட்டவண்ணமிருந்தேன்
அவள் என்னை நோக்கித் திரும்பினாள்
சற்று நேரத்திற்கு முன்பு கூறிய வார்த்தைகளை
அதன் மந்திரக்கிரகணங்களால்
கடத்திக் கொண்டு போய்விடுபவள் போல
என்ன ஒரு பார்வை !

ஆனால் அவள் கண்களோ
அவள் கூறியதை கடத்திப்போவதற்குப் பதிலாக
அதன் அர்த்தத்தை என் இதயத்தின் அடியாழத்திற்கு
இழுத்துச் சென்றுவிட்டன

இந்த உலகத்தில் ஒவ்வொரு அழகும் மகத்துவமும்
ஒரு தனிமனிதனின் சிந்தனையில்
உதித்தது தானே ?

ஒரு தனிமனிதனின் உணர்ச்சியில் உதித்தது தானே
இன்று நாம் காணும் ஒவ்வொன்றும்

அவை தோன்றிய கடந்த காலத்தில்
அந்த தலைமுறையில்
ஒரு தனி மனிதனின் சிந்தனை தானே ?
அல்லது அவனது உள்ளுணர்வில் உதித்தது தானே

புரட்சி இரத்தம் சிந்திய புரட்சி
மனிதர்களின் மனதில்
ஊற்றெடுத்த சுதந்திர தாகம்
யாவும் யாவும்
கூடி வாழ்ந்த மனிதர்களுக்கு மத்தியில் வாழ்ந்த
ஒரு தனி மனிதனின் மனதில் உதித்தது தானே ?

சாம்ராஜ்யங்களையே அழித்த போர்
அதுவும் முதலில் ஒரு தனி மனிதனின் மனதில்
உதித்தது தானே ?

மனித குலத்திற்கு கிடைத்த மகத்தான போதனைகள்
எங்கிருந்து வந்தவை ?

இதே சுற்றுச்சூழலில் வசித்த
ஒரு தனி மனிதனின் மனதில்
முதலில்உ தித்தவை தானே ?

ஒரு தனி மனிதனின் சிந்தனை தானே
பிரமிடுகளைக் கட்டியது
புகழ்மிக்க இஸ்லாம் மார்க்கத்தை தோற்றுவித்தது ?

இரவில் உன்னிடம் தோன்றும் ஒரே ஒரு எண்ணம்
உன்னைப் புகழின் உச்சிக்கு உயர்த்திவிடக்கூடும்
அல்லது மனநல மருத்துவமனைக்கே கூட
அனுப்பிவிடக்கூடும்
யார் கண்டது?

ஒரு பெண்ணின் கண்களிலிலிருந்து தோன்றும்
ஒரே ஒரு பார்வை
உன்னை உலகிலேயே மகிழ்ச்சியான மனிதனாக
மாற்றிவிடக்கூடும்
அல்லது…
ஒரு மனிதனின் உதட்டிலிருந்து வரும் வார்த்தைகள்கூட
உன்னை ஒரு செல்வந்தனாகவவோ அல்லது ஏழையாகவோ உடனடியாக
மாற்றிவிடவும் கூடும்..
யார் கண்டது?

அன்று என் செல்மா உதிர்த்த
அந்த வார்த்தைகள் நடுக்கடலில்
நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில்
நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்ட
படகுபோல என்னை நிறுத்திப்போய்விட்டன..

அந்த ஒரே ஒரு வார்த்தையே
ஆழ்ந்த தூக்கத்தில் லயித்திருந்த
என் இளமையை
துயிலெழுப்பி
வாழ்வும் சாவும் சந்தித்துக்கொள்ளும் மேடையில்
ஏற்றிவிட்டுச் சென்றுவிட்டது…..

(தொடரும் )