அதிரன்/மூன்று கவிதைகள்

17/08/24 இன்றைய கவிதை அரங்கில் வாசித்த கவிதை


முதலாம் கவிதை

நீள் இரவு

பேசியவை யாவும் பேசியும்
கேட்டவை யாவும் கேட்டபின்
தொடர்ந்த நீள் மெளனத்தின்
கடைப்பொழுதில்
மெல்ல அவள் கரம் பற்றுகிறேன்
இன்னும் அடங்காத நடுக்கம்
அவள் உடல் எங்கும்.
தாளாது ஆரத்தழுவுகிறேன்
வந்து தவழ்கின்றன ஒரு ஜோடி
கண்ணிர் துளிகள
என் தோள்களில்…..
தொடங்கியது இன்னொரு நீள் இரவு

  • இரண்டாம் கவிதை

எட்டி எட்டி பார்க்கிறாள்
தண்டவாளத்தை
இன்னும் வரவில்லை.

இந்த முறை வந்துவிட்டது அவள் செவியை கிழிக்கும் ஓசையுடன்
ஒரு விஸ்வரூபமாய்.

மெல்ல அது நடைமேடையை
கடக்கையில்
கண்களை இறுக மூடிக் கொண்டு
அம்மாவின் கால்களை
பற்றிக் கொள்கிறாள்
படபடக்கும் நெஞ்சோடு

மீண்டும் புறப்பட்டது அது
பெரும் நிசப்தத்தை
இறக்கிவிட்டப்படி

இன்னமும் எட்டி எட்டி பார்ககிறாள்
தண்டவாளத்தை
அவள் பார்க்க நினைத்த முதல்
ரயிலுக்காக……


மூன்றாம் கவிதை

  • : எப்போதோ இட்ட
    ஒரு ரொட்டித்துண்டுக்காக
    பார்க்கும் போதெல்லாம்
    வாலாட்டிக்கொண்டிருக்கிறது
    ஒரு நன்றி

One Comment on “அதிரன்/மூன்று கவிதைகள்”

Comments are closed.