மா. காளிதாஸ் கவிதை

ஒரு பொம்மை உடைவதற்கு முன்னும்
உடைந்த பின்னும்
அதைப் பொம்மையென
ஒப்புக்கொள்ள மறுக்கிறாள் அம்மு.

மழைநாளில்
பொம்மையின் நிறங்களை
வானத்தின் மீது வீசியவளைக்
கையும் களவுமாகப் பிடிப்பேன் எனச் சூளுரைக்கிறாள்.

பொம்மையுடன் விளையாடிய தெருவுக்குப்
பொம்மைத் தெருவெனப் பெயர் சூட்டுகிறாள்.

பொம்மைக்கான உணவு
பொம்மைக்கான உடை
பொம்மைக்கான விளையாட்டுப் பொருள் இல்லாத.
அவ்வளவு பெரிய கடையை முட்டுச்சந்தைப் போல வெறிக்கிறாள்.

தனக்கும் பொம்மைக்கும் நிகழும்
உரையாடல்களைச் சேகரிக்கும் வெளியை
ஒரு கூண்டுக்குள் அடைப்பது தான்
அவள் இலக்கே.

இன்னும் கொஞ்ச நேரம்
பொம்மையோடு கழிக்கலாம்
எனும்போது தான்
அவளுக்குப் பசிக்கிறது
தூக்கம் கண்ணைக் கட்டுகிறது
சீக்கிரமே விடுமுறை முடிகிறது.

கைகோர்த்தபடி நடந்து நடந்து
கனவுக்குள் வெகுதூரம் போய்விட்ட
அவளை வலுக்கட்டாயமாக
இழுத்து வரும்போது தான்
இரண்டு பொம்மைகளும் உடைந்தன.

எந்த பொம்மை
எந்த பொம்மையை
ஒட்ட வைக்கப் போகிறது அல்லது
தூக்கிப் போடப் போகிறது என்பதை
எட்டி எட்டிப் பார்க்கிறது
இரண்டு பொம்மைகளையும் விடாமல்

கவனிக்கும் பொம்மையொன்று.