
சொல் புதிது நிகழ்வில் வாசித்த கவிதைகள்
சாலைக்கொரு சோகம்
கான்க்ரீட் சாலையில் வழுக்கும் கார்களே
கண்ணீர்க் கதையொன்றைக் கேட்டுப் போங்களே
மண்ரோடாய் நானிருந்த அந்தக் காலம்
மழையோடு மகிழ்ந்திருந்த சகதிக் கோலம்
சேற்று மண்ணில் மீன்குஞ்சு நீந்தி ஆடும்
சிறுகுருவி ஓரத்தில் பாடி ஓடும்
காற்று வர மண் பறந்து விளையாடும்
காலத்தில் செடிகளில் பூக்கள் ஆடும்
ஓரத்தில் வளர்ந்திருந்த புல் செடியும்
ஒத்தாசைப் பேச்சுக்கு உடன் படியும்
காலடியும் கால்நடையும் வண்டிகளும்
மிதிக்கையிலே வலி தாங்கி மண் இளகும்
காலத்தின் மாற்றத்தால் தார் ஆனேன்
கல்லாகி மண்ணாகி கருப் பானேன்
வானத்து நீரோடு வாழ்க்கை இல்லை
வாய்த்துணைக்கு வாய்த்திருந்த புல்லும் இல்லை
இப்போது சிமெண்டாகி இறுகும் தேகம்
விறைப்பான சாலையிலே உங்கள் வேகம்
எப்போதும் எனக்குள்ளே ஏக்கச் சோகம்
எனக்குள்ளே துடிக்கின்ற மண்ணின் தாகம்
தொலைந்து போனவை
அடுப்புச் சுவற்றில்
சமையல் புகையின்
கறுப்புக் கோலம்
மரக் கதவில்
கீறிச் செதுக்கிய
மனித உருவம்
மாடப் பிறையில்
சிந்திக் கிடந்த
சித்த நாதன் விபூதி
திண்ணைச் சிமெண்டைத்
தேய்த்துக் கிடந்த
கோரைப் பாய்கள்
கோடி ரூபாய்க்கு
விற்ற வீட்டோடு
தொலைந்து போயின
ஆசை
காலைத் தூக்கத்தைக்
கட்டிப் பிடித்துக் கொண்டு
போர்வைச் சுமையை
இழுத்துப் போர்த்திக் கொண்டு
விட்ட கனவை
விடாமல் பிடித்தபடி
சோம்பேறி சுகத்தில்
சொக்கிக் கிடந்தபடி
உடற் பயிற்சி செய்ய
ஆசையாக இருக்கிறது
–
