
17.08.24 விருட்சம் இணைய கவியரங்கில் வாசித்த எனது 3 கவிதைகள் கீழே.
- காத்திருத்தல் இனிது?
“என்ன ஆச்சு ?”எனக்
கேள்வி அனுப்பினால்
“காத்திருத்தல் இனிது” என
குறுஞ்செய்தி அனுப்புகிறாய்.
இதமான கடற்காற்று
இளசான மாலைவெயில்
காத்திருக்க வசதியான
பேருந்து நிறுத்தம்.
ஆனால்,, பார்வைகளின் சூடு
தாங்க முடியவில்லை,
பார்வைகளின் பின்னால்
கேள்விகளும் , திட்டங்களும்
புரிந்து இன்னும்
இறுக்கத்தைக் கூட்டுகிறது.
மூச்சிறைக்க வந்து
நூறு முறை மன்னிப்பு
கேட்பாய்.
புரிந்து கொள்!
காத்திருத்தல் அல்ல,
வார்த்தை தவறாமல்
சொன்ன நேரத்தில்
வருதல் இனிமை!!!.
- தூவல்
மௌன மொழி
புரியாத போது
சிறிது சொற்களைத்
தூவுகிறாய்.
அதன் வாசமும்
வண்ணமும்
மனதை ஈர்த்து
புரிதலின் மாயத்தை
நிகழ்த்துகின்றன.
- காற்றிலாடும் தீபம்.
நெய் ஊற்றி
திரி சேர்த்து
தீபம் ஏற்றி
காற்றில் அணையாமல்
காத்த கரங்கள்
ஒவ்வொன்றாய் விலகிட
காற்றிலாடும் தீபம்.
காத்திட
பிஞ்சுக் கரங்களோ
கொஞ்சம் முற்றிய கரங்களோ
வந்திடுமென நம்பிக்கையில்
ஒளிர்கிறது தீபம்.
