ஆர் வத்ஸலா கவிதைகள்

17/8/24 அன்று சொல் புதிது கவியரங்கத்தில் வாசித்த கவிதை 1

  1. அப்படியா?

அவன் அழகாய் இருப்பதாக எனக்குத் தோன்றியதில்லை
ஆனால்
அவன் தோற்றம்
எனக்குப் பிடித்திருந்தது

அவனுடைய சில குணங்கள் எனக்குப் பிடிக்கவில்லை
ஆனால்
அவற்றை வேறொருவர் விமர்சித்தால்
எனக்கு கோபம் வரும்

சுய மதிப்பு மிகுந்தவள் நான்
ஆனால்
சில சமயம் அவனுடைய காரணமற்ற கோபங்களை
சிறுபிள்ளைத்தனம் என பொறுத்துப் போவேன்

அவன் போன பிறகு
ஒரு சந்தேகம் எழுகிறது
நான் அவனை
காதலித்தேனோ?

  1. மௌனம்

உன்னுடன் இருக்கையில்
இனித்தது
நீ அருகில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்

நீ போனபின்
பல ஆண்டுகள்
கொத்திப் பிடுங்கியது

இப்போதெல்லாம்
என் மனமடியில்
படுத்துறங்குகிறது
அவ்வப்பொழுது எழும்
விசும்பலை
உள்ளடக்கிக் கொண்டு

  1. காரணம்

நேற்று
நாள் முழுவதும்
நீ என்னுடன் இருந்த நாட்களின் நினைவுகள்
சிரித்தும்
புன்னகைத்தும்
தொண்டையில் சிக்கிய அழுகையை முழுங்கியும்
கழிந்தது

வெகு நேரம் புரண்டு
தூங்கி எழுந்து
பல் துலக்கும் முன்
கதவு தட்டப்பட..
நீ!

உன் பாணியில்
மென்மையாய்
மன்னிப்பு கோரினாய்
என்னை விட்டு பிரிந்து போனதற்கு
காரணம் கூற இயலாது என்று கூறி விட்டு
சொன்னாய்
“தயவு செய்து புரிந்து கொள்”

ஒரு கணத்தில்
நான் சோகமற்றுப் போனேன்

விடுதலை தந்த
உற்சாகத்தில் சட்டென்று எழுந்து நின்றேன்
கண் விழித்தேன்
கனத்த கண்களுடன்