எஸ்ஸார்சி

கானல் நீர்

எழுதினால் என்ன
எழுதாவிட்டால் என்ன
நீ எழுதியதை யாரும்
படிக்கப் போவதில்லை
படித்தவர்கள் விமர்சிக்கப்
போவதில்லை
சும்மா இருக்கலாம் தான்
சுழி விடமாட்டேன் என்கிறது
தனக்கு மட்டுமே ஏதோ
தெரிந்த மாதிரிக்கு
கானல் நீர்
அடிக்கடி காட்சியாவது ஓய்ந்தால்
நலமாக இருக்கும்
அதுதான் நடக்கமாட்டேன்
என்கிறது
அடம்பிடிக்கிறது எப்போதும்.

பம்மாத்து

நன்றாக எழுதுவதற்கும்
மனம் நன்றாக இருப்பதற்கும் துளிக்கூட
சம்பந்தமே கிடையாதா
வக்கிரமாய்ச் சிந்திப்பவர்கள்
வக்கணையாய் எழுதி
ஆகா ஓகோ என்று
மேடையில் கைதட்டல்
வாங்குகிறார்கள்
பார்த்திருக்கிறேன்
மனம் எத்தனை கோணலாய்‌ இருந்தால் என்ன
எழுத்து மட்டுமே நேராக
வருகிறதே
அது எப்படியோ
அதில் என்னதான் சூட்சுமமோ
உள்ளத்தில் உண்மை
அதுவே வாக்கினில் ஒளியாகி….
இதுகள் எல்லாம்
பம்மாத்தோ
பழங்கதையோ
அறிவார் யார்.

மனமானி

உடல் வெப்பம் எத்தனை
உங்கள் எடை என்ன
உயிர்வளி எத்தனை சதவீதம்
ரத்த அழுத்தம்
ரத்த சர்க்கரை
உடனுக்குடன் பார்க்கலாம்
பளிச்சென்று கணினித் திரையில்
மனசு எப்படி நமக்கு
அறியத் தான் மனமீட்டர் மனமானி
எதுவும் தயாராகவில்லை
அவை உலா வருங்காலை
உலகம் திருந்திடலாமோ
பொறுத்துத்தான்
பார்ப்போமே.