வே.கல்யாண்குமார்

  1. துண்டுகள் பலவிதம்.! ஒவ்வொன்றும் ஒருவிதம்.!

துண்டுப்பட்டு கிடந்தாலும்..
தமிழன் தோளில்..
துண்டுகளைப் பாருங்கள்!
துண்டின் கதை கேளுங்கள்!

உழவர்களின் மேனியிலே..
கிழிசல் துண்டு! உள்ளவனின் மேனியிலே சரிகைத் துண்டு!
காதிபவனில் விற்காத கதர்த் துண்டு!
கடைத்தெருவில் கலர்கலராய் தொங்குது துண்டு!
கடவுள் இல்லை என்பவனுக்கு கறுப்புத் துண்டாம்!
சபரிமலை சாமிதோளில் காவித் துண்டாம்!
அதிஷ்டத்தை தருவதுவோ மஞ்சள் துண்டாம்!
ஆளுக்காளு போடுவது இங்கே துண்டாம்!
காமராஜர் அணிந்திருந்தார் வெள்ளைத் துண்டாம்!
கறைபடியா ஜீவா தோளில் சிவப்புத் துண்டாம்!
விவசாய தோழர் தோளில் பச்சைத் துண்டாம்!
வசதிப்படி அணிகின்றார் இங்கே துண்டாம்!

கோமணமே சிலருக்கு மேனி மறைக்கும்..
கோடியிலே புரள்வோர்க்கு பட்டாடை மறைக்கும்!
ஒற்றையாடை துண்டு அதில் ஓட்டைகள் இருக்கும்..
ஊசி ஒன்று போதாது! எது ஏழ்மையை மறைக்கும்?

மேடையிலே கவிஞனுக்கோர் கைத்தறித் துண்டு!
அவனை மேவிவரும் வறுமையினை தீர்க்க யார் உண்டு?
பாலகனாய் பிறக்கயிலேஏந்தவரும் ஒருதுண்டு!
அவன் பாடையிலே படுக்கும்போது கோடித் துண்டு!
இடம் கொடுத்தால் மடம் பிடிக்கப் போடுகிறார் துண்டு!
இருக்கும் வரை எடுத்துக்கொண்டு
ருவதுவே தலையிலே ஒரு துண்டு!

துண்டில்லை என்றாலே தமிழனில்லை!
துண்டு நிலம் கூட அவனின் உரிமை இல்லை!
கண்டுகொள்ள எவருக்குமே நேரமில்லை!
துண்டைக்காணோம் துணியைக் காணோம்
இது துண்டின் கதை! பாவம்!

  1. எழுத்தாளன் பெண்டாட்டி.!

எழுத்தாளன் பெண்டாட்டி என்பது தான் பெருமை
என்று நகைச்சுவை படவசனம் எனக்கும் பிடிக்கும்! ஏன்
உங்களுக்கும் பிடிக்கும்!

கொல்லனுக்கு வாக்கப்பட்டால் குண்டுமணி தங்கமுண்டு!
புண்ணாக்கு வியாபாரி புருஷனாக இருந்தாலும்
தன் நாக்கு ருசிக்கிங்கு தவிடாவது கிடைக்குமிங்கு!

அரசு அதிகாரி ஆத்துக்காரராயிவிட்டால்..
புறநகரில் துண்டுமனை வாங்கிப்போட யோகமுண்டு!

எழுத்தாளன் பெண்டாட்டி என்ன செய்ய முடியும்?
எழுத்தெண்ணி தலை எழுத்தையெண்ணி
கூப்பாடு போடத்தான் முடியும்!

அடுக்கடுக்காய் நோட்டு இருந்தால்
பூட்டி வைத்து செலவிடலாம்..
அச்சடித்து விற்காமல் அடுக்கி வைத்த
புத்தகத்தை என்ன செய்ய முடியும்.?

கையெழுத்து சுத்தம்.. கருத்துக்களோ யுத்தம்..
மெயெழுத்து உயிரெழுத்து மேதினிமேல் சுத்தும்!
உய்யக்கொண்டான் வாய்கால் போல
வெய்யக்காலம் வந்தாற்போல் வறட்சியிலே கத்தும்!

அடுப்படியில் வெந்த உலை அடிவயிற்றில் கொதிக்கும்..
இவர் எழுதி எழுதி எந்த உலகம் தான் வெடிக்கும்!
கட்டையிலே வேகும்வரை எழுதும் அந்த விரல்கள்…
கடைசிவரை போராட்டம்
எழுத்தாளன் பெண்டாட்டி வாழ்க்கை!

பொன்னாடை பொங்க ஒரு படிஅரிசி தருமோ!
மலர்மாலை மடிநிறைய பசிப்போக்கி விடுமா?

புத்தகத்தை எடுத்து எடுத்து
புசித்திடத்தான் கூடுமோ..
எழுத்தாளன் பெண்டாட்டி
ஆனது இறைவன் தந்த வரமோ!

  1. பாகற்காய்..

ஆகா நான்தான் பாகற்காய்!
அறுசுவைக்குள்ளே கசப்புக்காய்!
ஓகோ.. அதனால் ஒதுக்காதே..
உண்மையை சொன்னால் கசக்கிறதா?

உப்பு உறப்பு உவப்பு இனிப்பு புளிப்பு
அப்பு என்பெயர் கசப்பு! தப்பு!
கசப்பை கண்டால் ஏன்தான் வெறுப்பு?

இனிப்பு கசப்பு இரண்டும் கலந்தது
பூமியிலே உன் பிறப்பு!
அப்பு.. என்பெயர் கசப்பு! ஆகா..
நான்தான் பாகற்காய்!

குழம்பில் போடு.. குடல் நோய்ப் போகும்.!
ஊறுகாய்ப் போடு..
உற்றசுவை நல்கும்.!
வத்தலாய் வெய்யிலில் காயப் போடு..
காயமே பொய் என்ற மாயம் விலகும்!
பூச்சிகள் ஒழியும்.. புதுமைகள் நிகழும்!
ஆச்சி மிளகாய் சேர்த்து அரைத்து..
இலுப்பைச் சட்டியில் இடித்துப் போடு.!
இதயத்துடிப்பு சீராய்த் துடிக்கும்!

அப்பு.. இன்னொரு முக்கியச் செய்தி.!
பெற்றவர் சொல்லும்.. கற்றவர் சொல்லும்..
முதலில் கசக்கும்! முடிவில் இனிக்கும்!
அனுபவம் உனக்கு சொல்லிக் கொடுக்கும்!

பாகற்காயை வெறுக்காதே!
உணர்ந்தால் வாழ்வும் கசக்காதே!