தங்கேஸ்

  1. பொழுது

வாசற் கோலத்தை
இழுத்துச் செல்லும்
சிற்றெறும்புகளை
வேடிக்கை பார்க்க
தொடங்கியதிலிருந்து
ஆரம்பித்து விட்டது
இன்றைய பொழுது

இன்னும் கட்டி முடிக்கப்படாத
மதில் சுவரின் மீது
குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி
சோம்பல் முறிக்கும்
வெள்ளை பூனைக்கு
எந்த எலி உணவாகப் போகிறதோ
இன்று

சற்று ஆசுவாசமாய்
புரண்டு படுத்திருந்த
தெருக்களெல்லாம்
கயமையின் காலடிகளை சுமக்க
தங்கள் முதுகுகளை
தயார்படுத்திக் கொள்கின்றன

சற்று முன் அவள்
நின்ற பால்கனி
காலியாகி விட்டது
இனி நீ போகலாம் மனமே!

மனிதனை மனிதன்
கையகப்படுத்தும்
விளையாட்டுத் திடல்களெல்லாம்
அதிகாலையிலேயே
ஒவ்வொன்றாய்
திறக்கப் படுகின்றன
இந்த நகரத்தில்

ரொட்டித் துண்டுகள்
என்ன வடிவத்தில்
வீசப்படும் என்பதை
சந்தை கடவுள்கள் தான்
தீர்மானிப்பார்கள்
இன்று

உலகமே நாடக மேடை
என்று சொன்ன
ஷேக்ஸ்பியர்
இப்போது
எந்த நாடகக் கொட்டகையில்
டிக்கெட் கிழித்துக்
கொண்டிருக்கிறானோ
யார் கண்டது ?

2. தாரகைகள்

தாரகைகள் எப்போதும்
என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன

கருமையான இரவுகள்
என் விழிகளில்
சிவப்பு தீற்றலை விட்டு விட்டே
விடிகின்றன

நான் வானத்தை எப்போதும் விழிகளில்
சுமந்து கொண்டு அலைபவன்
பூமி என் கால்களை வேர்களாக்கி
எனக்குள்ளிருக்கும் வானத்தை உறிஞ்சிக் கொள்கிறது

சமயங்களில் நான் நட்சத்திரங்களை
பூப்பது போல கனவு காணும் போது
வானமும் பூமியும்
முகத்தோடு முகம் உரச
அருகருகே இருக்கின்றன

நம்மை சுமக்கும் பூமியை
யார் சுமக்கிறார்கள் என்ற
சதா துன்புறுத்தும் கேள்வி
அப்போது எனக்குள்
எழுவதேயில்லை

3. பிடித்திருப்பது

என்னை நினைப்பாயா என்று கேட்காதே
என்னை நானே எப்படி நினைக்க முடியும்?

அன்பே எனக்கு
அதிகம் பிடித்திருப்பது
உன் உரையாடல் அல்ல
ஆனால்
அதை நீ முடிக்கும் போது
உச்சரிக்கும்
இரண்டு ம் ம் க்களுக்கும் பின்னால்
எப்போதும் தாவி வந்து கொண்டிருக்கும்
அந்த இரண்டு
முயல்குட்டிகள் தான்

.