ப.மதியழகன்

இன்று சொல்புதிது கவியரங்கில் வாசித்த கவிதைகள்

1
கும்மாளம்

குழந்தைகளின் கண்கள்
ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடன்
பார்க்கின்றது
அவர்களுடைய பாடப்புத்தகத்தின்
நடுவில் மயிலிறகு இருக்கிறது
அவர்களுடைய பேச்சில்
மழலை தெரிகிறது
அவர்களுடைய உலகத்தில்
சோட்டா பீமையும்,
லிட்டில் கிருஷ்ணாவையும் தவிர
வேறு யாரையும்
அவர்கள் அனுமதிப்பதில்லை
அவர்களை தேவதைகள்தான்
பூமிக்கு அழைத்து வருகின்றார்கள்
அவர்கள் ‘அ’ ‘ஆ’வன்னா
சொல்ல ஆரம்பித்தவுடன்
உயிர் எழுத்துகளுக்கும்
மெய் எழுத்துகளுக்கும்
றெக்கை முளைத்து
பரதேவதைகளாக
வகுப்பறையிலே வலம்வருகிறார்கள்
டீச்சர் கன்னத்தில் கிள்ளியதை
அம்மாவிடம் சொல்லவில்லையென்றால்
அவர்களுக்கு தலையே வெடித்துவிடும்
குழந்தைகள் தான்
வாழ்க்கையை திருவிழாவாக்குகிறார்கள்
பண்டிகைகள் ஒவ்வொன்றும்
குழந்தைகளுக்காகவே கொண்டாடப்படுகிறது
ஓடிக்கொண்டே இருக்கும்
உலகத்தை தனது புன்னகையால்
ஒருநொடி ஸ்தம்பிக்கச் செய்துவிடுகிறார்கள்
இந்தக் குட்டிதேவதைகள்
‘கடவுளின் ராஜ்ஜியத்துக்குள்
நுழைய மீண்டும் குழந்தையாகுங்கள்’
என்ற இயேசுவின் வார்த்தையை
மெய்யாக்குகிறார்கள்
கள்ளம் கபடமற்ற
அவர்களின் சிரிப்பே
ஒவ்வொரு விடியலையும்
புனிதமாக்குகிறது
அவர்களின் புன்னகை மட்டுமே
வாழ்வின் துயரங்களை
மறக்கச் செய்கிறது
இந்த அழகான மலர்வனத்தில்
உங்களுடைய பேயின் கரங்களால்
பூக்களைப் பறிக்காதீர்கள்
அவைகள் செடிகளோடு இருக்கட்டும்
அதுதான் கொள்ளை அழகு
இயற்கையின் ஒழுங்கமைப்பை
தயவுசெய்து சிதைக்காதீர்கள்
பால்யத்தில் மட்டுமே
குழந்தைகளின் கைகளில்
கடவுளின் ரேகைகள் தென்படும்!

2
யார்?

திரும்பவும் அதே கனவு
என்னை உறங்கவிடாமல் செய்தது
நள்ளிரவில் எழுந்து
திருநீறு அணிந்து கொண்டேன்
இறை நாமங்களை
உச்சரித்தேன்
தலையணைக்கு அடியில்
முருகன் படத்தை
வைத்துக் கொண்டேன்
கந்தசஷ்டிகவசத்தை முணுமுணுத்தேன்
இருட்டாக இருக்கிறதென்று
மின்விளக்கை ஒளிரவிட்டேன்
கனவு மீண்டும்
ஞாபகம் வந்தது
என்னையே ஏன்
துரத்துகிறது என்ற
கேள்வி எனக்குள் எழுந்தது
சீக்கிரம் விடியவேண்டும் என்று
கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டேன்
கடிகார முட்கள்
நத்தை போல் நகர்ந்தது
கண்களை மூடினால்
ஏதேதோ நிழலுருவங்கள்
தென்பட்டன
தெருவில் இறங்கி
ஓடவேண்டும் போல் தோன்றியது
காதுகளில் யாரோ சிரிக்கும்
சத்தம் கேட்டது
அது எனக்கு பரிச்சயமான
குரல் தான்
எப்படித் தப்பிப்பது என்று
எனக்குத் தெரியவில்லை
சுவரில் அறைந்து
கொள்ளத் தொடங்கினேன்
பொழுது நடுநிசியைக் கடந்து
கொண்டிருந்தது
கொஞ்சம் கொஞ்சமாக
மனம் பேதலித்தது
நான் பைத்தியமாகிக் கொண்டிருந்தேன்!

3
பிதா

கடவுளால் தனிமையைப்
பொறுத்துக் கொள்ள முடியவில்லை
மனுஷனை மண்ணினாலே
உருவாக்கினார்
மனுஷனின் விலாஎழும்பிலிருந்து
மனுஷியை உருவாக்கி
அவளை மனுஷனிடத்தில்
கொண்டு வந்தார்
ஆதாம் அறிவுக்கனியை
உண்டதால் சுவர்க்கத்திலிருந்து
வெளியேற்றப்பட்டான்
கடவுள் மனிதனுக்கு
சிந்திக்கும் திறனை அளித்ததற்காக
தன்னைத் தானே நொந்து கொண்டார்
ஆதாமின் சந்ததிகள் சிலபேர்
கடவுளை மறுத்தனர்
கடவுள் பூசாரிகளின்
கற்பனைப் படைப்பு என்றனர்
மதகுருமார்கள் மனிதர்களை
முட்டாளாக்குகிறார்கள் என்றனர்
கடவுள் பெயரால்
இட்டுக்கட்டப்படும் கதைகளை
நம்பாதீர்கள் என்றனர்
மதமென்பது அடிமைகளின்
கூடாரம் என்றனர்
கடவுள் யோசித்தார்
தன் தவறினை உணர்ந்தார்
தனிமையைப் போக்க
ஒரு பெண்ணைப் மட்டும்
படைத்திருக்கலாம் என்ற
முடிவுக்கு வந்தார்
அதற்குள் காலம்
கடந்துவிட்டிருந்தது
அவருடைய மணிமகுடம்
பறிக்கப்பட்டிருந்தது
ஆதாமின் சந்ததியினரால்
அவர் கொல்லப்பட்டிருந்தார்!