கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்/சித்தர்களைப் பிடிக்குமா? ……



ஆசிரியர் கலைமகள்………………

ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு மேடையை விட்டு இறங்கியதும், பல மேடைகளில் பேசுகிறீர்கள் பல விஷயங்களைச் சுருங்கச் சொல்லி நிறைவாக விளக்குகிறீர்கள்.நீங்கள் ஏன் சித்தர்களைப் பற்றி பேசுவதே இல்லை! உங்களுக்கு சித்தர்களைக் கண்டால் பிடிக்காதா?என்று ஒரு கேள்வியை வைத்தார் திருமதி மங்களம் சம்பத் என்கிற பெண்மணி. நான் சிரித்துக் கொண்டேன் அவ்வளவுதான்!!

சித்தர்கள் பற்றி எனது இனிய நண்பரும் பிரபல எழுத்தாளருமான இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களுடைய நூல்களை நான் படித்திருக்கிறேன். போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக இருக்கும் திருமதி சாமுண்டீஸ்வரி ஐபிஎஸ் அவர்களுடைய நூலையும் நான் படித்திருக்கிறேன். கலைமகள் வெளியீடான நித்யா அவர்கள் எழுதிய சித்தர்கள் பற்றிய நூலையும் நான் படித்திருக்கிறேன். இப்படி அந்த அம்மையாரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்!!

சித்தர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த சங்கர நாராயணன் அவர்கள். ஜவுளி வியாபாரத்தில்( காயங்குளம்)கொடி கட்டி பறந்த குடும்பம் இவருடையது! சித்தர்களைப் பற்றி கரைத்து குடித்தவர். சுமார் 64 நாட்கள் எனக்கு சித்தர்களைப் பற்றி பாடம் எடுத்தார். சில ரகசியங்களையும் எடுத்து இயம்பினார்!! ஆனால் சில விஷயங்களைப் பொது வெளியில் பேசவோ அல்லது எழுதவோ கூடாது என்று எனக்கு ஒரு உத்தரவும் கொடுத்தார்! இதுநாள் வரை அதை நான் கடைப்பிடித்து வருகிறேன். இவருடைய நூல்கள் கிரி டிரேடிங் கடையில் கிடைக்கும். அமரர் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.நாரணன் என்பது அவருடைய புனைப்பெயர்.

பாலகுமாரன் அவர்களோடு பல நாட்கள் சித்தர்களைப் பற்றி உரையாடியது உண்டு! ” ஓய் கீழாம்பூர் (மிகுந்த வாஞ்சையுடன் பேசும்பொழுது இப்படி அழைப்பதுண்டு) அந்த ஆசாமியை கூட்டிக் கொண்டு வாரும் ஓய்” என்றார்.ஒரு நாள் சங்கரநாராயணன் அவர்களை அழைத்துக் கொண்டு அவரிடம் போனேன். மணிக்கணக்காக இருவரும் பேசினார்கள். அருகில் இருந்து விஷயங்களைப் புரிந்து கொண்டேன்!!

சரியான ஆளைத்தான் ஓய் நீர் அடையாளம் காட்டினீர் என்று எனக்கு சர்டிபிகேட் கொடுத்தார் பாலகுமாரன் அவர்கள். உன்னிடத்தில் எப்படி இது போன்ற மனிதர்கள் எல்லாம் வந்து சிக்குகிறார்கள். சிக்கன அந்த சிவபெருமானைப் பிடித்து கையில் வைத்திருக்கிறீரோ? என்று அவருக்கே உரிய சிரிப்போடு என்னிடத்தில் கேட்டார். நான் விடை பெற்றுக் கொண்டேன். ஒரு சித்தர் என்னைத் தேடி வந்தார். அந்த விஷயத்தை அவரிடம் எடுத்துச் சொன்னபோது எனக்கும் அவருக்கும் நடந்த சம்பாஷனைகளை ஒரு பதிவில் தருகிறேன்.

சங்கரநாராயணன் அவர்கள் ஜோதிடம் பார்ப்பதிலும் வல்லவர். புலிப்பாணி ஜோதிடத்தை மிகவும் விரும்பியவர். ஜோதிடம் பார்ப்பதற்காக யாரிடமும் அவர் பணம் வாங்கியது இல்லை. என்னுடைய நெருங்கிய எழுத்துலக நண்பர்களில் ஒருவரான தாய் கீதப் பிரியன் அவர்கள் சங்கரநாராயணன் சாரிடம் ஜோதிடம் பார்த்துவிட்டு மிகவும் சிலாகித்து என்னிடம் பேசியது உண்டு! ஜோதிடம் பார்க்க வரும் பொழுது பழம் வெற்றிலை பாக்கு மட்டும் வாங்கி வரச் சொல்வார். யாரிடமும் அவர் எந்த உதவியும் ஜோதிடத்திற்காகவும் பெற்றதில்லை! மிக உயர்ந்த மனிதர். உருவத்திலும் கூட அப்படித்தான்!!

எனக்கும் புலிப் பாணியை அதிகம் பிடிக்கும். போகரின் சீடர் இவர் அதனால் அதிகம் பிடிக்கும். புலிப்பாணி பற்றிய பதிவுதான் அடுத்த சிறிய பதிவு. பாலகுமாரனிடம் நான் சொன்ன சித்தர் பற்றிய விவரத்தையும் பின்னர் தருகிறேன்…..