
மறைந்த திரு. ராம் ஜெத்மலானியின் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய அழகான கவிதை யின் தமிழாக்கம் இரா. மோகன்
சில சமயம் இரவின் இருளில்,
நான் என் மனசாட்சியைத் தொட்டுப் பார்க்கிறேன்;
இன்னும் மூச்சு விடுகிறதா என்று பார்க்க.
ஏனென்றால், ஒவ்வொரு நாளும்
அது இறந்துக் கொண்டே இருப்பதால்….
நான் ஒரு ஆடம்பரமான உணவு விடுதியில்
பணம் செலுத்தும்போது, ஒருவேளை உணவுக்கு
நான் கொடுக்கும் அந்தப்பணமே தனது
ஒரு மாத வருமானமாக இருக்கும், கதவைத் திறந்து விடும்
அந்தக் காவலாளியை நினைத்துப் பார்த்து,
உடனே அந்த எண்ணத்தை அகற்ற நினைக்கும் போது,
மனசாட்சி கொஞ்சம் இறக்கிறது
கடையில் காய்கறிகளை நான் வாங்கும்போது,
கடைக்காரரின் மகன் “சுபாஷ்”சிரித்துக்கொண்டே
உருளைக்கிழங்கை எடைபோடுகிறான்.
சுபாஷ் பள்ளியில் படிக்க வேண்டிய ஒரு சிறு பையன் என்ற
நினைப்பு வந்ததும், என்முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்கிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாக இறக்கிறது என் மனசாட்சி
அணுகுண்டு விலையில் ஒரு ஆடம்பர உடையை
அலங்கரித்து நான் காரில் செல்லும்போது,
கிழிந்த சேலையில் மானத்தை சிதையாமல்
காக்கத் தவித்து தோற்றுப் போகும் பெண்மணியைக் கண்டேன்;
கார் கண்ணாடியை உடனே ஏற்றி விட்டேன்.
மனசாட்சி கொஞ்சம் கொஞ்சமாக இறக்கிறது.
விலையுயர்ந்த பரிசுகளை
எனது குழந்தைகளுக்கு வாங்கிவிட்டு திரும்புகையில்,
அரை உடையணிந்த, வெறும் வயிறு, பசியைக் காட்டும் கண்களுடன்
சிவப்பு விளக்கு எரியும் கம்பங்களுக்குப் பக்கத்தில் பொம்மைகள் விற்கும்
குழந்தைகளைப் பார்த்தபின்,
எனது மனசாட்சியைக் காப்பாற்ற முயற்சித்து
கொஞ்சம் பொம்மைகள் வாங்கினேன். ஆனாலும்
மனசாட்சி கொஞ்சம் கொஞ்சமாக இறக்கிறது.
நோய்வாய்ப்பட்ட என் பணிப்பெண்,
பள்ளி செல்லவேண்டிய தன் மகளை
வீட்டுவேலைக்கு அனுப்பும்போது,
அவளைப் பள்ளிக்கூடம் போகச் சொல்லித் திருப்பி
அனுப்ப வேண்டும் என்று தெரிந்தாலும்,
கழுவ வேண்டிய பாத்திரங்கள் குவிந்து கிடப்பதை கண்டபின்,
இன்னும் இரண்டு நாள்தானே என்று மனதில் சமாதானம்
சொல்லிக் கொண்டு வாயை மூடிக் கொண்டேன்.
மனசாட்சி கொஞ்சம் கொஞ்சமாக இறக்கிறது.
கற்பழிப்பு சம்பவம் பற்றியோ, குழந்தைகள் கொலைகள் பற்றியோ
செய்திகள் கேட்டாலும், பார்த்தாலும் வருத்தப்படுவேன்;
என் குழந்தைக்கு இதுபோன்று நேரவில்லை என்று மகிழும்போது
கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்க எனக்கே சகிக்கவில்லை.
மனசாட்சி கொஞ்சம் கொஞ்சமாக இறக்கிறது.
சாதி, மதம் என்ற பெயரில் மக்கள் சண்டையிடும்போது,
மனம் புண்படும் நான் கையாலாகதவனாய் இருக்கிறேன்.
எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன் –
நான் நாடு நாசமாகப் போகிறது என்று.
எனது கடமை, பொறுப்பு என்பது பற்றி எதுவும் நினைக்காமல்,
ஊழல் அரசியல்வாதிகளை மட்டும் நான் குற்றம் சாட்டுகிறேன்.
மனசாட்சி கொஞ்சம் கொஞ்சமாக இறக்கிறது.
புகைமூட்டம் குவிந்து நகர மக்கள் மூச்சு விடத் திணறும்போது.
மெட்ரோவில் செல்லாமலும், மற்றவர்களுடன் சேர்ந்து காரில் செல்லாமலும்,
நான்மட்டும் தினமும், என் காரில் தனியாக வேலைக்கு செல்கிறேன்.
ஒரு கார் வித்தியாசத்தை ஏற்படுத்தாது எனக்கு நானே
சமாதானம் சொல்லிக் கொள்கிறேன்.
மனசாட்சி கொஞ்சம் கொஞ்சமாக இறக்கிறது.
எனவே இரவின் இருளில் நான் இருக்கும் வேளையில் அவ்வப்போது,
நான் என் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்துக் கொள்வேன்.
அது இன்னும் சுவாசிப்பதைக் கண்டுபிடிக்க.
எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. அது இன்னும் துடிக்கிறது.
என் கைகளால் தினமும், கொஞ்சம் கொஞ்சமாக,
நான் அதைக் கொன்றுப் புதைத்தாலும்,
அது இன்னும் துடித்துக் கொண்டுதான் உள்ளது.
நாம் இதைத்தான் ஒரு வாழ்க்கை என்று அழைக்கிறோம் .
🌹💐🌹
மனசாட்சி உறுத்தலில் –
இரா. மோகன்

அற்புதமும் வழிகாட்டும் கவீதையும், அருமை அருமை