புஷ்பா விஸ்வநாதன்
தாயின் தவிப்பறியா ஜடரயில்
இன்று ஏன் இத்துணை தாமதம்?
மகனைக் கண்டிடிலோ – தாயின்
முகம் மலரும் மனம் துள்ளும்
திறந்து போட்ட சூட்கேஸ் கள்
இறைந்து விட்ட துணிமணிகள்
லேப்டாப், ஐபாட், செல்போன் என
நிறைந்து விட்ட ஸாக்கெட்டுகள்
அலறும் டிவியின் ஆரவாரக்கூச்சல்கள்
அமரும் சோபாவில் புத்தகங்கள், பேப்பர் கள்
தரையில் உருளும் காபி, டீ கப்புகள்
அறையில் சிதறும் தின்பண்டத்தட்டுகள்
மனதோரம் ஒரு ஐயம்
மச்சு வீடு கொஞ்சம் சிறிசோ?
சந்தோஷக் கொண்டாட்டம்
கும்மாளம், குதூகலம்
உண்ணவோ பொழுதில்லை
உறங்கவோ மனதில்லை
எல்லாம் முடிந்து மீண்டும் ரயிலடி
விவஸ்தை கெட்ட வண்டி
இன்று ஏன் இத்துணை அவசரம்?
திரும்பி வந்து வீடு பார்த்தால்
மனசும் கனத்துப்போச்சு
மச்சு வீடு ம் வெறுமையாச்சு.
