விளம்பர இடைவேளை

ஜெ.பாஸ்கரன்

விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மு..த..ன் முறையாக எங்கள் டிவியில் சமீபத்திய திரைப்படம் ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. எட்டு நிமிடங்கள் படமும் பதினெட்டு நிமிடங்கள் விளம்பரங்களும் என்று இரண்டரை மணியில் முடிய வேண்டிய படம், நான்கைந்து மணி நேரம் திரையில் ஓடியது! மதியம் சாப்பாடு, மாலை காப்பி, இரவு டின்னர் வரை ஒரே படம், பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தது!

விளம்பரங்களில் புதிய பட்டுப்புடவையுடன் கையில் விளக்கு, வெற்றிலை பாக்குத் தட்டு என்று எதையோ ஒன்றை தூக்கிக்கொண்டு, வாய் வலிக்காமல் புன்னகைத்த வண்ணம் படிகளில் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தனர் ஒல்லியான பெண்கள்! மீசையுடன் புது கரை வேட்டி, அதே கலரில் அரைக்கை சட்டை போட்ட ஆண்கள், மழுங்க சிரைத்த பச்சை முகத்துடன் ஜிப்பா, பைஜாமாவுக்குள் வேறு சில ஆண்கள், புத்தாடை உடுத்தி குதிக்கும் குழந்தைகள், ஜீராவில் விரல் விட்டு வாயில் வைத்து உறிஞ்சும் குமரிகள் (அருகில் கணவனோ, மாமனாரோ, மாமியாரோ இருக்க, வாயில் விரலுடன் ஒரு கண்ணை மட்டும் திறந்து மூடு
வது அவசியம்!) , தன்னைவிடப் பெரிய பூரி பின்னால் ஓட, இரண்டு கைகளைத் தரையில் வைத்து சோமர்சால்ட் அடிக்கும் சிறுவன், நகைகள், ஜட்டிகள், பெரிய கார்ப்பொரேட் கம்பெனிகளின் அதிகாரிகள், லுங்கி, திறந்த மார்புடன் காலுக்கு ஷூவுடன் கவர்ச்சியாய் அலுவலகத்தில் நடை பயில …. படங்களை விட ரசிக்கவும் சிரிக்கவும் நிறையவே இருக்கின்றன விளம்பரங்களில்!

திரும்பத்திரும்ப வரும் அதே விளம்பரங்கள் சலிப்பூட்ட, கையில் இருந்த ரிமோட்டை நோண்டி, வேறு சானல்களில் என்ன இருக்கின்றன என்று பார்க்கத் தொடங்கினேன். அங்கும் விளம்பரங்கள், செய்திகள், விவாத மேடை என்ற பெயரில் கூச்சல் – சுவாரஸ்யமாகத்தான்த்தான் இருந்தது, காதுக்குக் கொஞ்சம் பஞ்சும் தேவையாயிருந்தது!!

“ஏங்க, கை சும்மா இருக்காதா? ரிமோட்ட வெச்சுக்கிட்டு சானல் மாத்திக்கிட்டே இருக்கீங்க?”

மனைவிதான் – விளம்பரங்களில் இவ்வளவு விருப்பமா?

“எத்தனை தடவைதான் இதே விளம்பரத்தையும், அதே மூஞ்சிகளையும் திரும்பத் திரும்ப பார்க்க முடியும்? சலிப்பா இல்லே?“

“இப்படி மாத்திக்கிட்டே இருந்தா, கண்ணு கெட்டுப் போய்டுமாம், பக்கத்து வீட்டு பாரு சொன்னா”

“ம்க்கும், டீவி பார்த்தாலே எல்லாமும் கெட்டுப்போகும், கண்ணு மட்டுமா?”

“கண்ணு கெடக்குது; ரிமோட்டும் இல்லே கெட்டுப்போகுது – இது மூணாவது ரிமோட்டு”

விடுமுறை நாளும் அதுவுமா அநாவசியமா பேச்சு வாங்க வேண்டாம் என்று முடிவு செய்து, ஒரே சானலில் நிறுத்தினேன். விளம்பர இடைவேளையின் போது எழுந்து வேறு வேலை ஏதாவது பார்க்கப் போய்விடுவேன்.

நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் என்று இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில், மலையாளம், தெலுங்கு, மராட்டி, இந்தி, தமிழ், ஆங்கிலப் படங்களை சப்டைடிலுடன் பார்ப்பது கொரோனா தந்த கொடை! பல சமயங்களில் கீழே வசனத்தைப் படிப்பதில் கவனம் செல்ல, நடிப்பைக் கோட்டை விடுவது வாடிக்கையாகிப் போனது! இரண்டையும் ஒரே சமயத்தில் பார்த்து, படங்களை ரசிப்பது ஒரு கலை – எனக்கு வருவதில்லை!

சாதாரணமாகப் படங்களைப் பார்க்கும்போது, குத்துப்பாட்டு, ‘ஐட்டம்’ பாட்டு, செயற்கையான வசன நடைப் பாட்டு (பாட்டு பின்னால் ஒலிக்க, ஸ்லோ மோஷனில் ஹீரொவின் ஷூ பார்வையாளர் முகதுக்கு நேரே வரும்படி நடப்பதால் அது ‘நடைப் பாட்டு’ என்று காரணப் பெயர் பெறுகிறது!) எல்லாம் ‘ஓட்டி’ப் பார்ப்பதில் குறியாக இருக்கும் என் மனைவி இந்த விளம்பரங்களை மட்டும் ஏன் மாற்றாமல் பார்க்கிறாள் என்று எனக்கு ஒரே வியப்பு!

இந்த முறை விடுமுறை சிறப்பு நிகழ்ச்சியின் போது விளங்கி விட்டது!

விளம்பர இடைவேளையில், கவனம் சிதறாமல், வாட்ஸ் ஆப், முக நூல் பார்த்து செய்திகள் அனுப்புவதில் ‘பிசி’ யாக இருந்தாள்!