பூனை அழகி….

முபீன்

இந்தப் பூனை எங்கள் பக்கத்துவீட்டில் வளர்ந்தது. வளர்கிறது. நடுவில் வேற எங்கோ விட்டு வந்தும் இங்கேயே வந்துவிட்டது. இப்போது அந்த வீட்டின் பால்கனியில் மட்டும் இருக்க இடம் தரப்பட்டிருக்கிறது. இது முதல் முறை கொரோனா ஊரடங்கு போடப்பாட்ட மார்ச் 23ஆம் தேதி பிறந்தது. அன்று அமாவாசை. இந்தப் பூனை மிகவும் அழகாக இருந்ததால் இதற்கு நாங்கள் அழகி என்று பெயர் வைத்துவிட்டோம். குட்டியாக இருந்து பெரிதாகும் வரை எங்கள் வீட்டுப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்காது. நாங்கள் பால் ஊற்றினால் சாப்பிடாது. எந்த உணவு கொடுத்தாலும் திரும்பிக் கூடப் பார்க்காது. இதன் உடன் பிறந்த மற்ற பூனைகளும் தாய்ப்பூனையும் வந்து சாப்பிடும். இது மட்டும் தூரத்தில் அமர்ந்து வேடிக்கைப் பார்க்கும் தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது போல் இருக்கும். இதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்ததில் தன் முதலாளி சரியான உணவு கொடுக்கவில்லை அதனால் பக்கத்து வீட்டிலும் சாப்பிடலாம் என்று ஆகிவிடக்கூடாது என்பதற்காக இது எங்கள் வீட்டு உணவைப் புறக்கணித்திருக்கிறது என்பதை அதன் நடத்தை மூலம் புரிந்துகொள்ள முடிந்தது. இதைக் கொண்டு போய் வேறு இடத்தில் விட்டு வந்த பின் சில நாட்களிலேயே மீண்டும் இங்கு வந்துவிட்டது. வந்தவுடன் ஓடி எங்கள் வீட்டு வாசலுக்குத்தான் வந்தது. எங்களைப் புறக்கணித்த பூனை ஏன் இப்படி எங்களிடம் வருகிறது என்று விநோதமாக இருந்தது. அதன் பின் நாங்கள் அதற்கு உணவு கொடுத்தால் சாப்பிடும். பசி எடுத்தால் வந்து மிகவும் வற்புறுத்தி உணவு கேட்கும். அத்துடன் நில்லாமல் எங்கள் வீட்டுக்கு யாரையும் வர அனுமதிக்காமல் பயமுறுத்தும். இப்படி எங்கள் மீது ஏக அன்பை வைத்துக் கொண்டிருந்தது. அதனுடன் பேசினால் நன்றாகப் புரிந்துகொண்டு பதிலளிக்கும். ஏன் இப்படி அழுக்காகி இருக்கிறாய் போய் தண்ணீரில் விளையாடிவிட்டு வா என்று சொன்னால் உடனே உடலெல்லாம் நன்றாக நக்கிவிட்டு பார்க்கும். இப்போது அழுக்குப் போய்விட்டதா என்பது போல் பார்க்கும். அதனுடன் தினமும் சிறிது நேரம் பேசவேண்டும் என வலியுறுத்தும். வெளியில் போய் வந்தால் கால்களை உரசும். அதனைத் தடவிக் கொடுக்கவேண்டும். அதன் பிறகுதான் வீட்டுக்குள் போக அனுமதிக்கும்.குட்டி போடும் நிலைக்கு வந்துவிட்டது. அப்போது அது இங்கே இருக்கக்கூடாது என எங்கள் வாசலில் ப்ளீச்சிங் பவுடரைப் போட்டுவிட்டார்கள். அதனால் எங்கேயும் உட்கார முடியாமல் பெரும்பாடுபட்டது. நான் தண்ணீர் போட்டு வாசலைக் கழுவி மிதியடியைப் போட்டு அதை உட்கார வசதி செய்து தந்தவுடன் என்னை அது பார்த்த பார்வை மறக்க முடியாதது. அதன் பின் அதனால் சாப்பிட முடியவில்லை. சாப்பிடமாட்டாயா என்று கேட்டால் காலை உரசிக் காட்டியது. குட்டி போட்டது. ஐந்து குட்டிகள். அதன் பின் சில நாட்களில் மீண்டும் கொண்டு போய் எங்கேயோ விட்டுவிட்டார்கள். பல மாதங்கள் கழித்துத் திரும்பவும் அழைத்து வந்தார்கள். அதன் குட்டிகள் ஓரளவு பெரிதாகிவிட்டன. ஆனால் அவை பால்கனியில் இருந்தன. சில மட்டும் கீழே குதித்து எங்கள் வாசலுக்கு வரும். ஒரு நாள் இரவு ஒரு நாய் வந்து அந்தக் குட்டிகளில் மூன்றைக் கடித்து போட்டுவிட்டுப் போய்விட்டது. அதில் நடந்த சண்டையில் இதற்குக் கண்ணருகே காயம். முதுகில் பலத்த அடி. இதனால் மேலே தாவ முடியவில்லை. வலியால் அழத் தொடங்கியது. அதன் பின் பால் மட்டுமே குடித்தது. மெதுவாக மாடிப்படிகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஏறி சில அடிகள் மட்டும் தாவி தானாகவே சரி செய்துகொண்டது. நாங்கள் போடும் உணவைக் குட்டிகள் மட்டுமே சாப்பிட, இது அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும். வாரத்தில் ஒரு நாள் மட்டும் எங்கள் வீட்டு உணவைச் சாப்பிடும்.இந்த நிலையில் எங்கிருந்தோ மிகச்சிறிய குட்டிகள் இரண்டு வந்துவிட்டன. அவற்றை இது பார்த்தவுடன் தன் குட்டிகளை அழைத்துக் கொண்டு பால்கனிக்குப் போய்விட்டது. அதன் பின் அவை இங்கு இருக்கும் வரை எங்கள் வீட்டில் சாப்பிட தானும் வரவில்லை. தன் குட்டிகளையும் வரவிடவில்லை. அந்தச் சின்னக் குட்டிகளுக்கு நாங்கள் சாப்பாடு போடவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட விரதம் இருந்திருக்கிறது. அந்தச் சின்னக்குட்டிகளை யாரோ துரத்திவிட்டுவிட்டார்கள். அவை எங்கே போயின என்று போய்த் தேடிவிட்டு வந்தது. அவை காணாமல் போய்விட்டன எனத் தெரிந்து அதன்பின்தான் தன் குட்டிகளை இங்கு மீண்டும் சாப்பிட அனுமதிக்கிறது. அதுவும் இரண்டு வேளை மட்டும். இது வாரத்தில் ஒரு நாள் மட்டும் இங்குச் சாப்பிடுகிறது.எப்படிப்பட்ட கடுமையான விதிகளை இது அனுசரிக்கிறது என்று பார்க்கும் போது இதன் மீது மரியாதையும் பிரியமும் பாசமும் பொங்கி வருகிறது. ஒரு மனிதனால் இப்படிப்பட்ட விதிகளைக் கடைப்பிடிக்க முடியுமா என்பது மிகப்பெரும் சந்தேகமாக இருக்கிறது.

58Veli Rangarajan, Periyasamy Periyasamynatarajan and 56 others23 Comments1 ShareLikeCommentShare

One Comment on “பூனை அழகி….”

  1. அறிவுள்ள பூனை! தன்னை நன்கு புரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் புரியவைக்கும் திறமையுள்ள ஒரு எழுத்தாளரைக் கண்டுபிடித்து தஞ்சம் அடைந்துள்ளதே!

Comments are closed.