எல்லோருக்கும் நன்றி

அழகியசிங்கர்

கூட்டம் நடந்து முடிந்து நேற்று வீடு வந்து சேர்ந்தபோது மணி 9 ஆகிவிட்டது. நான் கொஞ்சம் தாமதமாகக் கூட்டத்திற்குப் போய்ச் சேர்ந்தேன். 5 மணிக்குக் கூட்டம் ஆரம்பிக்கலாமென்று நினைத்தேன். வையவனிடமும் இதைக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் பலர் காத்துக்கொண்டிருந்தார்கள். முதிய எழுத்தாளர் நரசய்யா தலைமை வகிக்கக் கூட்டம் இனிதாக ஆரம்பம் ஆனது. முதலில் பேசிய நரசய்யா முதன் முதலாக சிட்டி வீட்டில் சந்தித்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார். சென்னை வந்தபோது தமிழ் பேசத் தெரியாவிட்டாலும் முதன் முதலாக விருட்சம் கூட்டத்தில்தான் பேசியதாகக் குறிப்பிட்டார்.

என்னுடைய கதை ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னார். அந்தக் கதையின் பெயர் ரெத்னம். நானே எதிர்பார்க்கவில்லை நரசய்யா அந்தக் கதையைப் பற்றிச் சொல்வாரென்று. அந்தக் கதையின் நுணுக்கங்களைக் கூறிப் பாராட்டினார்.

இரண்டாவதாக செல்லப்பா அவர்கள் பேசினார். என் இரண்டு குறுநாவல்களான ‘உறவினர்கள்’ பற்றியும், ‘தவறு’ பற்றியும். நான் எப்போதோ எழுதியது. இரண்டு கவிதைகள் குறித்தும் பேசினார். கிட்டத்தட்ட விவரிக்கும் தன்மையில் அவர் பேச்சு இருந்தது.

குறுகிய காலத்திலேயே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்திருப்பதால் அதிகப் பக்கங்கள் கொண்ட என் கதைகள் முழுவதும் ஒருவர் படித்திருக்க முடியாது.

அடுத்துப் பேசிய லதா அவர்கள் என் கதைகளின் முன்னுரையைப் பற்றிக் குறிப்பிட்டார். 664 பக்கங்கள் கொண்ட கதைப் புத்தகத்தைப் படித்திருக்க முடியாது.

மீரா அவர்கள் என்னுடைய புதிய நூல்களைப் பற்றி முழுவதுமாகப் பேசினார். மேலும் என் நண்பர்கள் பலரும் இவ்வளவு தூரம் வந்திருந்து கலந்து கொள்வார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவர் பேசியதுதான் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அவர் முகநூல் வாசகர். முகநூலில் நான் எழுதியதைப் படிப்பதால் அவருக்கு ரத்தம் அழுத்தம் அளவாக இருப்பதாகக் கூறினார். இதைக் கேட்க எனக்கே ஆச்சரியம். எல்லோருக்கும் நன்றி. விழாவைச் சிறப்பாக நடத்திச் சென்ற வையவன் அவர்களுக்கும் நன்றி. எல்லாவற்றையும் நான் ஆடியோ பதிவு செய்து வைத்திருக்கிறேன். நான் ஆரம்பத்தில் பழகிய நண்பர்களையும் இப்போதைய நண்பர்களையும் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.