சசிகலா விஸ்வநாதன்/ஏணிப்படிகள்..

என் வாழ்வில் ஏற்றமிகு ஏணிகள்.
அத்தனையும் ஏறி வந்தே நானிங்கே.
முற்றம் முழுவதும்
கூட்டலும்,
கழித்தலும்,
பெருக்கலும், வகுத்தலும்….
எண்களால் என்னை நிரப்பின என்
முதல் ஆசான்;என் அன்னை.
எழுத்து கூட்டி
படிக்கும் வித்தை
கற்பித்து, ஆங்கிலம்
வெகு எளிதென்றே
புரிய வைத்த ரூபி டீச்சர்.
சோதனை சாலையில்
பிப்பட் உறிஞ்சவும்
ப்யுரெட் பிடிக்கவும்
இரண்டு கண்களால்
மைக்ரோஸ்கோப் பார்க்கவும் கற்பித்த,
“மேஸ்த்ரி”தனபாலும்,
உடல்கூறு சாலையில்
ஃபோர்ஸப்ஸும், ஸ்கேல்ப்பலும்
கையில் பிடிக்க
கற்பித்த ;இன்னாசியும்;
முயலையும் வெள்ளை எலியையும்
பக்குவமாய் கையில் ஏந்தும் லாவகம்
கற்பித்த நாசரேத்
அக்காவும், மட்டுமல்ல;
என் ஆசான்
இன்னும் பலருண்டு;
என்னை செதுக்கி
வைத்த ஆசான்கள்;
ஆழ்கடல் சங்கென,
வான்மழை துளியென,
எண்ணத்திலும், நினைவிலும, என்றும் நிற்கும்
சீர்மை கொள் ஆசான்கள்.