ஜடாயு/விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள்

உலகெங்கும் இந்துக்கள் வாழும் இடங்களில் எல்லாம் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் களைகட்டிக் கொண்டிருக்கின்றன. இத்தருணத்தில் விநாயகரைக் குறித்த தொன்மங்களும் புராணக் கதைகளும் இணைந்து வெளிப்படுத்தும் ஶ்ரீகணேச தத்துவத்தை தியானிப்போம்.
பார்வதியின் அன்பு மகனாக உருவெடுத்து சிவகணங்களுடனும் சிவபிரானுடனுமே போர் செய்து ஆனைமுகனாக வடிவுகொள்வது ஒரு தொன்மம். இறைவனும் இறைவியும் களிறும் பிடியுமாகிக் கலந்து ஆனைமுகன் அவதரிப்பது மற்றொரு தொன்மம்.
மாதங்கர்கள் என்ற பழங்குடிகள் வழிபட்ட புராதன யானைமுகக் கடவுள்தான் விநாயகராக “ஆரிய மயமாக்கப்பட்டு” விட்டார் என்பது ஒரு தரப்பு சமூக வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் நவீன தொன்மம் 🙂
ரிக்வேத மந்திரங்களில் புகழப்படும் பிரகஸ்பதி, பிரமணஸ்பதி ஆகிய தெய்வங்களின் இயல்பான பரிமாண வளர்ச்சியே கணபதி என்பது வேத ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
சங்ககாலம் முதலே தமிழ்நாட்டில் வணங்கப்பட்டு சைவத்திருமுறைகளில் போற்றப்பட்ட விநாயகரைக் குறித்து, அவர் தமிழ்க்கடவுள் அல்ல, பல்லவர் காலத்தில் பிள்ளையார் வழிபாடு நுழைக்கப்பட்டது என்றெல்லாம் உளறுவது வரலாற்றறிவோ ஆராய்ச்சியோ எதுவுமில்லாத சில தமிழ்நாட்டு வெறுப்புணர்வாளர்களின் பிதற்றல்.
இப்படி பல புராண தொன்மங்களின் தொகுப்பாகவும், அவையனைத்தையும் உள்ளடக்கி அவற்றையும் கடந்து மிளிரும் பேரொளியாகவும் திகழ்கிறார் கணபதி. தியானிப்போரின், வழிபடுவோரின் ஆன்ம நலன்களையும், உலக நலன்களையும் ஒருங்கே விகசிக்கச் செய்பவராக விநாயகர் விளங்குகிறார். வேதாந்தத்தின் ஒளியால் சுடர்விடும் “தத்துவத் தெய்வமாகவும்” எளிய மக்களின், பழங்குடி மக்களின், விளிம்பு நிலை மாந்தரின் “இயற்கைத் தெய்வமாகவும்” அவரே அருள்பாலிக்கிறார்.
இந்த கணேச தத்துவத்தை நமது பாரதியார் மிக அற்புதமாக எடுத்துரைக்கிறார்:
இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்
தாயாய்த் தந்தையாய், சக்தியும் சிவனுமாய்
உள்ளொளி யாகி உலகெலாம் திகழும்
பரம்பொருளேயோ பரம்பொருளேயோ!
ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும்
தேவதேவா சிவனே கண்ணா
வேலா சாத்தா விநாயகா மாடா
இருளா சூரியா இந்துவே சக்தியே
வாணீ காளீ மாமகளேயோ!
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய், உள்ளது
யாதுமாய் விளங்கும் இயற்கை தெய்வமே!
வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே..
ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்
வேத முனிவர் விரிவாய்ப் புகழ்ந்த
பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும்
தானே யாகிய தனிமுதற் கடவுள்,
’யான்’ ’எனது’ அற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூலவித்தாவான்,
சத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர்
நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்…
ஏழையர்க் கெலாம் இரங்கும் பிள்ளை,
வாழும் பிள்ளை, மணக்குளப் பிள்ளை,
வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழு தேத்திப் பணிவது முறையே.

  • விநாயகர் நான்மணி மாலை
    [இந்துவே – சந்திரனே; மாமகள் – மா என்பது இங்கு லக்ஷ்மியைக் குறிக்கும்; சத்தெனத் தத்தென – ஓம் தத் (அது) ஸத் (உண்மை) என்ற மந்திரம்; மணக்குளப் பிள்ளை – புதுச்சேரியில் அருள்புரியும் மணக்குள விநாயகர், அங்கு வசித்த காலத்தில் பாரதியார் இந்தப் பிள்ளையாரைத் தவறாமல் சென்று வழிபட்டு வந்தார்; வெள்ளாடை தரித்த விட்டுணு – சுக்லாம்பரதரம் விஷ்ணும் என்ற சுலோக வரியின் தமிழாக்கம்]
    வாரும் வாரும் பிள்ளையாரே.