
இன்று வாசலில்
சிமெண்டுத் தரைபோட்டிருக்கிறது
நாளைக்கு
இறுகிவிடும்.
காக்கையின் கால்விரல்
கழுதையின் குளம்படி
குழந்தையின் காலடி பிச்சைக்காரன்
குடுகுடுப்பைக்காரன்
உஞ்சி விருத்தி பிராமணன்
தெரிந்தவர். தெரியாதவர்
ஸ்கூட்டர் சக்கரம்
இரவின் சுவர் நிழலில்
எவனுக்கோ
இரகஸியமாய் காத்து நின்ற
கால் மெட்டி நெளிவு
இளங்கன்றின் வெள்ளைமனம்
பசுவின் நிதானம்
காளையின் கம்பீரம்
நாயின் குலப்பகை
னையின் கபடம்
பன்றியின் அவலட்சணம்
இறுகிய தரையில்
நிரந்தரம்
விரிசல் கண்டு
தூள் ஆனாலும்
புதியவை பதியாது
பதிந்ததும் நிலைக்காது
உருண்டுவரும் கோலிகள்
நில்லாது போகலாம்
அல்லது
குழிக்குள் விழிக்கலாம்
'கணையாழி' டிசம்பர் 1970
