
பகவான் ரமணரின் அருகாமை ஊர்க்காரர் . பலசாலி . பெரிய முரடர் . எந்தக் கோவிலுக்கும் போக மாட்டார் . யாரையும் வணங்க மாட்டார் . ஒருமுறை திருப்பதிக்கு தாயாருடன் சென்றார் . அதாவது தாய் சுவாமி தரிசனம் செய்யவும் மகன் ஊர் சுற்றிப் பார்க்கவும் திட்டம் .
தாயார் கேட்டார். “ஏன்டா , வழியில பகவானைப் பார்க்கலாமா ? ஏதோ பெரிய சன்யாசியாகிட்டார், இப்போ அவரைச் சுத்தி ஆஸ்ரமம் எல்லாம் வந்துடுத்துங்கராங்களே .”
“எனக்கு பெரிய விருப்பம் இல்லை . ஆனா நீ ஆசைப்பட்டா போவோம் . ஆனா போனா நான் சும்மா இருக்க மாட்டேன் . அவரோட அம்மா , அண்ணா , சித்தப்பா எல்லாம் அவரை வீட்டுக்குக் கெஞ்சி கூப்பிட்டு முடியாம திரும்பிட்டாங்களாமே. நான் அந்த மாதிரி சாதுவா கெஞ்ச மாட்டேன் . காதைப் பிடிச்சுத் திருகி அழைச்சுண்டு வருவேன்.”
“ஏதோ செய் “
திரு அருணையில் விருபாக்ஷ குகையை அடைந்தனர். மணியின் தாயார் பகவானை கண் குளிர தரிசனம் செய்தார் . மகன் போக்கிரி மணி தன் பழைய நண்பனைக் கண்களால் எடை போட்டார் . நேரம் போனதே தெரியவில்லை. மணியின் கண்களிலிருந்து ஆறாகக் கண்ணீர் பெருகியது. சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் . பகவானின் அடிமை ஆனார் .
விளாச்சேரி குடும்பம் சிருங்கேரி ஸ்வாமிகளிடம் பின்னர் உபதேசம் பெற்றனர் . மணி பகவானிடம் ஓடி வந்தார் . பகவான் போகிற வழியை மறித்து “பகவான் , எனக்கு உபதேசம் கொடுங்கோ ” என்றார் . பகவான் வெறுமனே சிரித்தார். நேரம் ஓடியது . ஆனால் மணி பகவான் வழியை விடுவதாக இல்லை .
பகவான் “மணி , என்ன இது ? பேசாம சிவ சிவான்னு இல்லாம ஏன் இப்படிப் பண்றே?”
போக்கிரி மணி துள்ளிக் குதித்தார். “ஆஹா , பகவான் எனக்கு உபதேசம் பண்ணிட்டார். பஞ்சாக்ஷர உபதேசம் எனக்கு ஆயாச்சு . சிவ சிவா , சிவ சிவா ….”
கடைசி நேரம். ஆஷ்ரமத்தில் தங்கி சிவ நாமம் ஜெபித்தபடி பகவான் ஹாலை அங்கப் ப்ரதக்ஷிணம் செய்வார் . பகவான் வேண்டாம் என்றாலும் விடமாட்டார்.”பகவானே , நான் என்ன செய்வேன்? நீங்க செஞ்ச உதவிக்கு எனக்கு வேற விதத்துல நன்றி சொல்லத் தெரியலை.”
மணியின் இறுதிக் காலம் நெருங்கியது . தன் மனைவியிடம் சொன்னார் . “என் காலம் நெருங்கிடுத்து . பகவான் கிட்டப் போறேன் . நீ எந்தக் கவலையும் படாதே . பகவான் பாத ஞாபகமாகவே இரு. நாற்பதாம் நாள் உன்னையும் பகவான் பாதத்துல கூட்டிக்கறேன் .”
சொன்ன மாதிரி மணி இறந்த நாற்பதாம் நாள் அவர் மனைவியும் காலமானார் .
