
அது பெரிய சாவு. கல்யாணச் சாவு என்பார்கள். 90 வயது கடந்த என்னுடைய ஆயா (அப்பாவின் அம்மா). அதற்கு முன் சில இறப்புகளைச் சிறு வயதிலேயே கண்டிருந்தாலும், முதன்முறையாக எங்கள் வீட்டில் நடந்த ஒன்று.
ஆயா இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே, இரண்டு மூன்று தடவை கிட்டத்தட்டப் போய்விட்டார் என எல்லோரையும் நம்ப வைத்து பின் தடாலடியாகத் திரும்பி வந்து அதிசயிக்க வைத்தவர்.
ஒரு நாள் விடைபெறுகிறேன் என்று உண்மையிலேயே கிளம்பி விட்டார்.
பெரும் வாழ்வு வாழ்ந்தவர்களின் இறப்புகளில் பெரும்பாலும் துக்கம், அழுகை இருக்காது.
துக்க வீட்டில் அனைவரும் அமைதியாக இருப்பார்கள். ஒரு சிலர் அவர்களோடு பழகியது குறித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள். வேறு சிலர் எங்கிருக்கிறோம் என்பதை மறந்து, உன் பெண்ணுக்கு குதிர்ந்ததா அல்லது சமஞ்சிட்டாளா என ரகசியமாகக் கேட்பதாக நினைத்துக் கொண்டு எல்லோர் காதிலும் விழும்படி கேட்பார்கள்.
யாராவது புதிதாக வந்தால் மட்டும் திடீரென சத்தம் போட்டு அழுவார்கள். அது கூட ஒரு சில நிமிடங்கள் தான். பிறகு புதிதாக வந்தவர் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்து விடுவார். யாராவது காபி குடிக்கிறியா என்று ஜாடையாகக் கேட்க, சரி என்று ஜாடையாகவே பதில் அளிப்பார்.
அன்றைய தினம் பெரும்பாலான நேரங்களில் அமைதியாக இருந்த போதிலும், ஒன்றுவிட்ட மாமா ஒருவர் அவ்வப்போது விட்டு விட்டு அழுது கொண்டே இருந்தார்.
எனக்கு ஆயா இறப்பின் கவலையுடன் ஒன்றுவிட்ட மாமாவின் அழுகை ஆர்ப்பாட்டத்தை விட வேறொரு பிரச்சனை சேர்ந்து கொண்டது.
பசி.
எடுத்தல் எரித்தல் – இவை முடியும் வரை சமையலறைக்கு விடுமுறை.
என் நிலைமையை நன்கறிந்த என் அப்பா ஒன்று விட்டு மாமாவை அழைத்து அவர் பாக்கெட்டில் பணம் வைத்து, அவனைக் கூட்டிப் போய் ஏதாவது வாங்கிக் கொடு என்றார்.
இச்செயலில் இரண்டு காரியங்களை முடித்து விட்டார் அப்பா. ஒன்று மகனின் பசி. இன்னொன்று அங்கே உட்கார்ந்து கொண்டு அவ்வப்போது கூச்சல் எழுப்பிக் கொண்டிருக்கிற மாமாவை இடம் பெறச் செய்வது.
என்னை அழைத்துக் கொண்டு
பிரதான சாலையில் உள்ள உணவு விடுதியை நோக்கிச் செல்லும் போது
வழியில் அவ்வப்போது துக்கம் தாங்காமல் ஆர்ப்பாட்டம் பண்ணினார். நான் அவரை விட்டுச் சற்று விலகியே நடந்தேன். காரணம் அந்த தெருவில் இருப்பவர்கள் எல்லோருக்கும் என்னைத் தெரியும்.
என்ன சாப்பிடற என்று கேட்டார்
திடீரென கேட்டதால் என்ன சொல்வது என்று தெரியாமல் நீங்க என்ன சாப்பிடறீங்களோ அதையே நான் சாப்பிடுகிறேன் என்றேன்
சீ சீ …நானா ? சாவு எடுக்காம பச்ச தண்ணி பல்லுல படாம பாத்துக்குவோம். கோபித்துக் கொண்டார்.
உனக்கு என்ன வேணும்னாலும் சொல்லு நான் வாங்கி தரேன் என்றார்.
சங்கர் பவன் ஓட்டலுக்குள் நுழைந்தோம்.
சர்வர் என்ன சாப்பிடுறீங்க எனக் கேட்க
ஆனியன் ஊத்தப்பம் என்றேன், கூச்சநாச்சம் இன்றி – என் பசி எனக்கு தானே தெரியும்
சர்வர், மாமாவைப் பார்த்து உங்களுக்கு எனக் கேட்க, வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு, எனக்கு ஒன்றும் வேண்டாம் என்றார்.
திகைத்த சர்வர் திரும்பி நடக்கத் தொடங்கினார்.
என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியவில்லை ஒன்று விட்ட மாமா…
ஏன்பா இரண்டாவே கொண்டாந்துடு என்றார்.
மாமா எனக்கு ஒண்ணே போதும் என்றேன் வெள்ளேந்தியாக.
அவர் பதில் எதுவும் சொல்லாமல் பார்வையை எங்கோ திருப்பிக் கொண்டார்
ஊத்தப்பம் வரும் வரை ஆயாவின் பெருமைகளையும் குணாதிசயங்களையும் பேசினார். என் கவனமெல்லாம் எப்போது ஊத்தப்பம் வரும் எனச் சமையலறை பக்கமே இருந்தது.
சர்வர் சுடச் சுட இரு கைகளிலும் தட்டுகளை ஏந்தி வந்தார்.
ஊத்தப்பம் காம்பஸ் வைத்து வரைந்த வட்டம் போல் சரியாக இருந்தது அதனுடைய கனம் அழிப்பான் அளவுக்குத் தடிப்பாக இருந்தது. சிவந்தது இருந்ததின் மூலம் நன்றாக வெந்திருக்கிறேன் என்றது. மேலே பரவலாக வெங்காயமும் ஒன்றிரண்டு பச்சை மிளகாயும் தெரிந்தது. தோசையில் வெறும் மாவு வாசனை மட்டும்தான் இருக்கும். ஊத்தப்பம் எல்லாம் கலந்த நறுமணத்தில் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்.
அதற்கு மேல் அதனைக் கவனிக்கப் பசி அனுமதிக்கவில்லை. பிஞ்சு விரல்களில் எவ்வளவு பிய்த்து எடுக்க முடியுமோ எடுத்து சாம்பாரில் ஒரு குளியலும் சட்னியில் ஒரு தடவலும் என முதல் வில்லையை உள்ளே போட்டேன். உள்ளே யாரோ இருப்பார்கள் போல இருந்தது. ஆயிரம் கைகளால் ஜிவ் என இழுத்துக் கொண்டார்கள். ஒன்றே வயிற்றை நிரப்பி விடும் போல இருந்தது. இதில் இன்னொரு ஊத்தப்பம் எங்கே சாப்பிடுவது என்று பார்த்தால், எதிரில் ஒன்று விட்ட மாமா அதை நான்கு ஒரே அளவிலான கால்வட்டங்களாகப் பிரித்து மேலே சாம்பாரைக் கொட்டி கூட சட்னியால் அபிஷேகம் செய்து முதல் பகுதியைச் சிந்தாமல் சிதறாமல் இலாகவமாக வாய்க்குள் சொருகினார்.
நான் சாப்பிடுவதை மறந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். வாயில் இருப்பதை மென்று கொண்டே, ‘குழந்தை தனியாகச் சாப்பிட்டால் வயிறு வலிக்குமேன்னுதான் நானும்’.. என்றார்அ.
இரண்டாவது பகுதியை எடுக்கச் சென்றவர் சடாரென பிரேக் அடித்தார். பரபரப்பாக இங்கேயும் அங்கேயும் பார்த்து, எங்கள் மேசைக்கு உரிய சர்வரை அழைத்தார்.
கெட்டி சட்னி எங்கப்பா?
இல்ல சார்
அது எப்படி இல்லைன்னு சொல்லுவ.
இன்னைக்கு இல்ல சார்.
எப்பவும் தருவீங்க தானே.
ஆமா.
அப்ப ஏன் இப்ப தரல.
இந்த எதிர்பாராத தாக்குதலால் தடுமாறிய சர்வர் கல்லாவில் உட்கார்ந்து இருந்தவரைப் பார்த்தார்.
அவர் இடத்தை விட்டு எழுந்திருக்காமலேயே அங்கிருந்து என்ன என்று கேட்டார்.
சார் கெட்டி சட்டினி கேக்குறாரு. இல்லன்னு சொன்னேன்.
கல்லாக்காரரும் அங்கிருந்தே மாமாவுக்குச் சமாதானமாக ஏதோ சொல்ல, மாமா பச்சை மிளகாய் கடித்த ஆக்ரோஷத்தில் கல்லாவுக்கே போய்விட்டார். வாக்குவாதம் தொடங்கியது.
ஹோட்டலில் உட்கார்ந்து இருந்த ஒரு சிலர் இந்த வேடிக்கையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
எனக்கு அவமானமும் பயமும் கலந்த உணர்வு.
குரல் வலுக்கத் தொடங்கியதே தவிர, இல்லாத கெட்டி சட்னிக்கு என்ன செய்வது, தகராறை எப்படி முடிப்பது என்று மாமா தடுமாறினார். இதற்குள் சர்வர் சமயோசிதமாக உள்ளே போய் காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு பொரியலைக் கொண்டு வந்து வைத்தார். ஒரு வழியாக மாமா சமாதானம் ஆகிவிட்டார்.
திரும்பி வரும்போது நானும் பேசவில்லை. அவரும் பேசவில்லை
வீட்டுக்கு அருகில் வரும்போது மட்டும் குனிந்து என் காதில் நான் சாப்பிட்டேன்னு யார்கிட்டயும் சொல்லாத என்றார்.
இப்போது புதிதாக யாரோ சிலர் வந்திருந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் மாமா ஓவென கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தார்.
அந்த அழுகை ஆயாவிற்கா அல்லது கிடைக்காத கெட்டி சட்னிக்கா என்று அந்த இளம் வயதில் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை
