
ஒரு பின்னிரவு மழையில்
விரிகிறது அடர்ந்த கானகம்
காலால் இடறியபடியே
புல்லை உருட்டி உருட்டி
தும்பிக்கையால் எடுத்து
உண்கின்றது
ஒரு யானைக் குடும்பம்
இரண்டு குட்டிகளுடன்
வெட்கத்தை விட்டு முழுவதுமாக
மலர்ந்து விட்ட
ரேடியோப் பூக்களையும்
கோழிக் கொண்டைப் பூக்களையும்
பார்த்து
விரிந்த உன் இமைகளில்
தோன்றி மறைந்து
கொண்டேயிருந்தது
இளம் வெய்யில்
மணலாற்றின் சிற்றோடையில்
உருண்டோடிய நீரை
கைகளால் வாரி வாரி
என் நோக்கி இறைத்தாய்
அன்று அது என் மீது
தெறிக்கவேயில்லை
இப்போது வந்து தான் என் மீது
விழுகிறது
ஒரு பார்வை தரிசனமாவதற்கு
எத்தனை காலம்
காத்திருக்க வேண்டியதிருக்கிறது
