
பேராசிரியர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவரும் மகாகவி தாகூரின் ‘கோரா’ என்ற நாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்ததற்காக 2020 ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றவருமான டாக்டர் கே.செல்லப்பன் தனது 86 ஆவது வயதில் மறைவெய்தினார் என்ற செய்தி அறிந்து துயருற்றேன்.
ஷேக்ஸ்பியர், டி.எஸ்.எலியட், தாகூர் முதலானவர்களின் படைப்புகள்மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.கல்விப் புலத்தில் மதிக்கப்பட்டவர். சாகித்ய அகாடமி உள்ளிட்ட இலக்கியம் சார்ந்த அமைப்புகளில் தொடர்ந்து அங்கம் வகித்தவர்.
“ கலைகள் எல்லாமே கனவுகள்தாம், ஆனால் யதார்த்தத்தை விட உண்மையானவை. அதுபோலவே நம் வாழ்க்கை என்பது ஒரு மாயை, ஆனால் அது ஒரு ஆழமான யதார்த்தத்தையும் சுட்டி நிற்கிறது” என ஷேக்ஸ்பியரைப் பற்றி எழுதும்போது குறிப்பிட்டவர். தான் பிறந்த சிவகங்கைப் பகுதி, சுதந்திரப் போராட்டத்துக்குச் செய்த பங்களிப்பைப் பற்றியும், தமிழ்நாட்டின் நதிகளைப் பற்றியும் எழுத வேண்டும் என ஆசைப்பட்டவர். அவற்றை நிறைவு செய்வதற்கு முன்பே விடைபெற்றுவிட்டார்.
15-20 ஆண்டுகளுக்கு முன்பு கருத்தரங்குகள் சிலவற்றில் அவர் ஒரு இளைஞனைப்போல சுறுசுறுப்போடு இங்கும் அங்கும் நடமாடுவதைப் பார்த்திருக்கிறேன். அவரது உரைகளைக் கேட்டபோது ஆங்கில இலக்கிய வகுப்பு ஒன்றில் அமர்ந்திருப்பதுபோல உணர்ந்திருக்கிறேன்.
பாரதியின் கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த அவர் அத்துடன் நிற்காமல், இலக்கியப் புனிதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத பாரதிதாசன், மாபொசி, கோவி மணிசேகரன், கலைஞர் ஆகியோரின் படைப்புகளையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.
ஷேக்ஸ்பியரின் படைப்புகளைப்போலவே கலைஞரின் படைப்புகளையும் ரசிக்கிற; ஒரே சமயத்தில் டி.எஸ்.எலியட்டையும் ழாக் தெரிதாவையும் மேற்கோள் காட்டிப் பேசுகிற ‘அபூர்வமான’ கலவை அவர். அவரையொத்தப் பேராசிரியர்கள் எவரும் தமிழ்நாட்டில் இல்லை என்பது அவரது இழப்பின் சுமையைக் கூட்டுகிறது.
திரு கே.செல்லப்பன் அவர்களுக்கு எனது அஞ்சலி!
