இலத்தூர் கி. சங்கரநாராயணன்/பாரதி போல் யாருண்டு?

எட்டயபுரத்து பட்டை வயிரம்
எட்டா உயரம் எட்டினான் – கவிதைப்
பட்டா போட்டு இலக்கிய
வானில்
சிட்டாய்ப் பறந்து காட்டினான்

வட்டப் பொட்டின் வடிவில் புவியைக்
கட்டுப்படுத்தி ஆடினான் -அதன்
விட்டம் தொட்டு ஆரம் தொட்டு
எட்டுத் திக்கும்
சாடினான்

செல்லம்மாவின் அரிசிக் கவலை
இல்லாதொழிக்க
முயலவில்லை
இல்லாதொழிக்க
முயன்றதெல்லாம்
தொல்லை தந்த
அடிமைக் கவலை

குருவிக்கும் அது தருவிக்கும்
சிறு ஒலிக்கும் கவி மயங்கினான்
ஒருபிடி அரிசியும்
குருவிக்களித்து பசி
அறிகுறி இன்று இயங்கினான்

வித்தை பற்பல கற்றதனால் மகா
வித்துவானாக விளங்கி நின்றான்
வித்தை ஒன்றை
கற்க மறந்தான்-
காலன்
வித்தை அதுவெனத்
தெரிந்ததனால்

காகிதத்தில் செய்த கப்பலல்ல பாரதி
சாகித்யங்கள் மூழ்கிவிட
நாவியக்கும் தமிழ் வியக்கும் இரும்பு
நாவியை அடக்கக் கடலில்லை

காவியத்தில் தேச
ஓவியத்தில்
பாரதிக்கு இணை யாரும் இல்லை
நீ வியந்தென்ன யார் முனைந்தென்ன
புது சாரதி வரப்போவது
மில்லை

அல்லிக்கேணி சாரதி இவனது
ஆசை மீசை கொண்டானோ?
மல்லுக்கடங்கா யானை வடிவில்
வசியத் தமிழை சுவைத்தானோ ?
புல்லுங்கூட மல்லுக்குச் செல்லும்
சொல்லுக்கதிபதி பாரதியை
வெல்லக் கவியார் பிறப்பதில்லை
வெல்லக் கவியை
யாம் மறப்பதில்லை.

One Comment on “இலத்தூர் கி. சங்கரநாராயணன்/பாரதி போல் யாருண்டு?”

Comments are closed.