ஜெ.பாஸ்கரன்

அமெரிக்காவிலுள்ள அயோவா பல்கலைக்கழகத்தில் ‘சர்வதேச எழுத்தாளர் சந்திப்பு’க்குச் சென்ற அசோகமித்திரனின் அனுபவங்களை, நாவலாக – வித்தியாசமான புனைகதை வடிவில் – எழுதியுள்ளார். பெயரைப் பார்த்தவுடன் ‘ஏதோ போர்க்கால, சரித்திர அல்லது இந்திய சுதந்திரப் போராட்டம் சார்ந்த புனைவோ என நினைத்தேன். அப்படியெல்லாம் இல்லை. அனுபவமும் புனைவும் பின்னிப் பிணந்த ஓர் அருமையான படைப்பு!
இப்புனைகதை நூலை எழுதி, ஒரு வடிவம் தருவதற்கு சுமார் பத்து ஆண்டுகள் ஆனதாக அ.மி. குறிப்பிடுகிறார். மேலும் சிறிது தயக்கத்துடனே இப்படைப்பினை நாவல் என்று வகைப்படுத்துவதாகவும் சொல்கிறார். நாவல் வடிவம் சார்ந்த பரிசோதனையில் முன்னோடி முயற்சிகளில் ஒன்றானது ‘ஒற்றன்!’ என்கிறது பின்னட்டைக் குறிப்பு.
பதினான்கு அத்தியாயங்கள் கொண்ட இந்த நாவலின் சிறப்பு, ஒவ்வொரு அத்தியாயமும் அதிலேயே தொடங்கி, அதிலேயே முடிந்துவிடும்! ஒட்டு மொத்தமாக வாசித்து முடிக்கும்போதுதான், அதில் உள்ள பொதுவான இணைக்கும் கண்ணிகளைக் கொண்டு, அந்த நாவல் வடிவத்தை, அழகை, வசீகரத்தை உணர முடியும்! அந்தக் கண்ணிகள், ஒரு நாயகன், ஒரு களம் (ஐக்கிய அமெரிக்கா), ஒரு காலகட்டம் (1973 – 1974). இவ்வகைப் புனைவுகளுக்கு ஏராளமான முன்னோடிகள் இருக்கின்றன – அ.மி. யின் ‘இன்று’ நாவல் கூட இவ்வகையைச் சேர்ந்ததுதான்.
“சந்தித்தவர்கள் சொன்ன யோசனை எல்லாம் கேட்டுக்கொண்டு, இரண்டு ஜதை ஜோடு, இரண்டு கம்பளி, இரண்டு ஸ்வெட்டர், நான்கு டை, நான்கு சாக்ஸ், மிகப் பத்திரமாகப் பொட்டலம் கட்டப்பட்ட ரசப்பொடி எல்லாவற்றையும் அந்தக் கால சூட்கேஸ் ஒன்றில் அடைத்துக்கொண்டு அக்டோபர் 6 ஆம் தேதி சென்னையிலிருந்து கிளம்பினேன்” என்று முன்னுரையில் தொடங்கும் அங்கதமும், சுவாரஸ்யமும், ஏப்ரல் 27, 1974 அன்று இந்தியா திரும்ப விமான நிலையம் வரும் வரை வாசகனுடன் தொடரும் அதிசயம்தான் அசோகமித்திரனின் ‘ஒற்றன்!’. புனைகதையும், பயண அனுபவங்களும் கலந்து அருமையான படைப்பாக மலர்ந்துள்ள நாவலில், தொய்விற்கு இடமே இல்லை!
“ஒற்றன்! நாவலில் எல்லோருமே அப்பாவிகள். எல்லாருக்கும் அயோவா சிடி வெளியூர், வெளி நாடு. எல்லாருக்குமே பெரிய எதிர்காலம் கிடையாது. அவர்களேதான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்து பாதிப்பேர் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார்கள். எனக்கு அன்றும் இன்றும் நம் நாடுதான் என் இருப்பிடமாகத் தோன்றுகிறது” என்று அசோகமித்திரன் சொல்வதை, ஒவ்வொரு சம்பவத்திலும், உரையாடலிலும், விவரிக்கும் பலவித மனிதர்களிடமும் நம்மால் உணரமுடியும். அதுதான் இந்த நாவலின் சிறப்பாக எனக்குப் படுகிறது.
“விமானம் ஏறுவதற்கு முன் காத்திருக்கவேண்டிய லவுஞ்சு ஒரு ராட்சஸத் திமிங்கிலத்தின் உட்புறம் போல இருந்தது. நான் திமிங்கிலத்தின் உட்புறத்தைப் பார்த்ததில்லை. ஆனால் ஏனோ அப்போது திமிங்கிலத்தின் நினைவுதான் வந்தது” என்று விமான நிலையத்தை விவரிக்கிறார்!
இலவச பத்திரிகை, தனித் தபால்பெட்டி, அவர்களைப் பார்த்துக்கொள்ளும் ஜான், பிடியைத் திருகினால் எரியும் அடுப்பு, எப்போதும் தானே தயாரிக்கும் காப்பி, வெஜிடேரியன் உணவு கிடைக்காமல் அவதி, ஆங்கிலம் தெரியாத பிரேஜில் இளைஞன் வெண்டுரா, ஒயின் குடித்து எடுத்த வாந்தி, மிஸ்ஸிஸ்ஸிப்பி ஆற்றில் படகுப் பயணம் என சுவாரஸ்யம்.
நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் அறையில், ரெப்ரிஜரேட்டரில் வைக்கப்படும் இறைச்சி, பூண்டு, ஊறுகாய்கள், கஷாயம் போன்ற திரவங்கள் இவற்றுடன் இவர் வைத்திருக்கும் தயிர், பழரசம், வெண்ணை இதைப் பற்றி எழுதும்போது ,”ஒரு காலத்தில் இறைச்சியைப் பார்த்தாலே எனக்கு வயிற்றைக் கலக்கும். ஆனால் பாதிக்கு மேல் விதவிதமான ஜந்துக்கள் நிறைந்த ரெப்ரிஜிரேட்டரை நான் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்! ஆனால் பொட்டலமாகக் கட்டப்பட்ட இறைச்சி எந்த நாற்றமும் கிளப்பவில்லை. அதுவும் பூண்டைப் போல”. என்கிறார். தன் அறை நண்பனின் தாயார் பத்தாயிரம் மைல்களுக்கப்பால் இறந்து விட,அழும் அவனைத் தேற்றுகிறார் – அப்போதுகூட அவன் மேல் வரும் பூண்டு வாசனையை அவர் மறக்கவில்லை!
இத்தாலியப் பெண் இலாரியாவின் காதல் தோல்வி, உறைபனியில் சறுக்கி விழும் அனுபவம், ஈயம் – தோல், ரப்பர் போன்றவற்றில் செய்ததைப்போன்ற பெரிய ஜோடுகள் (‘என் செங்குத்து நிலை பற்றி இனிக் கவலையில்லை. ஈயத்தைக் காலில் கட்டிக்கொண்டால் தரையிலென்ன, தண்ணீரிலும் செங்குத்தாகத்தான் மூழ்க வேண்டும்’),
பஸ் நிலையத்தில் நிற்கும் சிறிய லாரிதான் பஸ் என்று தெரியாமல் முழிப்பது, கே மார்ட்டில் டைப்ரைட்டர் வாங்கி, திருப்பிய அனுபவம், ஜோடுக்கும் சிக்கி ஊறிய அட்டைகள் கொடுத்த கால் வலி, பேனா கடிகாரம் வாங்கிய கையோடு தொலைத்தது (பிறகு கோட்டின் உட்புறமே கிடைத்தது!), ‘ஒற்றன்’ ஆசிரியர் அபே குபேக்னாவுடன் ஆன அனுபவம் (அவன் அயோவா சிடியில் எல்லோருடைய வெறுப்பையும் பெற்றிருக்கக் கூடும்; எல்லோருடனும் நட்பு பாராட்டும் கஜூகோவைக் கூட ஏகமாக ஆத்திரமூட்டியிருக்கக் கூடும்; ஆனால் அமெரிக்காவில் அவனுடய நாவலை வெளியிட்டுக் கொள்ளும் முயற்சியில் வெற்றி பெற்று விட்டான்!) இப்படி ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு எழுத்தாளர், அவருடனான அனுபவம், அங்கு ஏற்பட்ட குளிர், உணவு, கடைகள் பற்றிய செய்திகள் என சுவாரஸ்யமாகத் தன்னுடைய இயல்பான நடையில் அசோகமித்திரன் சொல்லிச் செல்கிறார்!
ஞானக்கூத்தனின் ‘அம்மாவின் பொய்கள்’ கவிதையை விக்டோரியா ஹார்ட்மன் என்னும் கவிஞர் கவிதை நாடகமாக அரங்கேற்றுவதை வாசிக்கும் நமக்கும் வியப்பு மேலிடுகிறது. ஏதோ ஒரு சமயத்தில் அசோகமித்திரனே ஞானக்கூத்தனின் இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார்! அந்தக் கவிதையை ஒருவனின் மன ஏக்கமாக அசோகமித்திரன் நினைக்க, விக்டோரியா அதை இருவர் நிகழ்ச்சியாக மாற்றியதை மிகவும் சிலாகிக்கிறார் அ.மி. அப்போது அவள் சொல்கிறாள்: “எனக்குப் பொய்கள் சொல்ல என் அம்மா ஒருத்திதான் – என் அப்பா யாரென்று எனக்குத் தெரியாது”. எனக்கு மிகவும் பிடித்த அத்தியாயம் இதுதான் – ஒரு சிறப்பான சிறுகதையை வாசித்த மகிழ்ச்சி!
கடைசி அத்தியாயத்தில் தன் இருப்பிடத்திலிருந்து விடை பெற்று இந்தியா திரும்பும் நிகழ்வுகளை மிகவும் நெகிழ்ச்சியுடன் விவரிக்கிறார். “நன்கு பழகிப்போன முகங்கள்; எவ்வளவோ உற்சாகமும் நம்பிக்கையும் பகிர்ந்து கொள்ளுதலும் நினைவூட்டும் முகங்கள்; எனக்கு இனிமேல் பார்க்கக் கிடைக்காத முகங்கள். நான் இனிமேல் அவர்களைப் பார்க்க முடியாமல் போகும், என்றென்றுமாக.”
வித்தியாசமான நாவல். அசோகமித்திரனின் அலாதியான படைப்பு – அனுபவங்கள் புனைகதை வடிவில் – தவறவிடக் கூடாத சுவாரஸ்யமான படைப்பு!

வழக்கம்போல் சுவையான, தெளிவான, பாஸ்கராயணம்!
“எனக்கு இனிமேல் பார்க்கக் கிடைக்காத முகங்கள். நான் இனிமேல் அவர்களைப் பார்க்க முடியாமல் போகும், என்றென்றுமாக.” – எவ்வளவு யதார்த்தமான முத்தாய்ப்பு!
ஒற்றனையே பின் தொடரத் தூண்டும் அருமையான எழுத்துக்கள். அறிமுகம். பாராட்டுக்கள்..நன்றியுடன்