
எம்.எஸ். சுப்பலட்சுமி பிறந்த தினம்: செப்டம்பர் 16
*பொதிகைத் தொலைக்காட்சி இயக்குநர் ஏ. நடராஜன் வீட்டுக் கல்யாணம். சென்னை கோடம்பாக்கம் எம்எல்எம் கல்யாண மண்டபம் என்று ஞாபகம். காலை பத்தரை மணிக்கெல்லாம் முகூர்த்தம். நான் காலையிலேயே முகூர்த்தத்திற்கு என் மனைவியோடு போயிருந்தேன். முன்வரிசையில் இசை விமர்சகர் சுப்புடு உள்ளிட்ட பல பிரமுகர்கள் அமர்ந்திருந்தார்கள்.
தொலைவிலிருந்து என்னைப் பார்த்த ஏ. நடராஜன் கையசைத்தார். முன்னே வந்து அமருமாறு சைகை காட்டினார். நல்ல கூட்டம்.
யாரோ முன்வரிசையில் எங்களுக்காக இரண்டு நாற்காலிகளைக் கொண்டுவந்து போட்டார்கள். முன்வரிசையில் போய் அமர்ந்தோம். முகூர்த்தம் முடிந்ததும் அரைமணி நேரம் எம்.எஸ்.ஸின் இசை நிகழ்ச்சி இருந்தது.என் மனைவியும் என்னைப் போல் எம்.எஸ். ஸின் தீவிர ரசிகை. முகூர்த்தம் கெட்டி மேளத்துடன் நல்லபடியாக முடிந்தது. எம்.எஸ்.ஸின் இன்னிசையைப் பருகுவதற்காக எல்லோர் செவிகளும் காத்துக் கொண்டிருந்தன.
எம்.எஸ். பாடுவதற்காக மேடையில் வந்து அமர்ந்தார். பக்கவாத்தியக்காரர்கள் ஒவ்வொருவராக வந்து அமர்ந்தார்கள்.அதுதான் தெரியும். அதன்பிறகு அடுத்த அரைமணி நேரம் எப்படிப் பறந்தது என்று தெரியவில்லை. கானம் என்றால் அது கானம். உண்மையிலேயே தேவ கானம்.
சப்த ஸ்வரங்களைப் படிக்கட்டுகளாக்கி அதன்மேல் ஏறி ஏறி அவர் தேவலோகத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்தவர்களையும் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
பாடத் தொடங்கும்போது எம்.எஸ். முகம் சாதாரணமாகத்தான் இருந்தது. பாட ஆரம்பித்த சில நிமிஷங்களில் அதில் ஒரு தெய்வீக சோபை தோன்றிவிட்டது. அவரது கருவிழிகள் இசையில் லயித்துத் தன்னை மறந்தன.
அவர் தான் பாடிய பாடல்களின் பொருளில் தோய்ந்துவிட்டார். அவர் முகத்தில் தென்பட்ட பக்தியுணர்வைப் பார்த்தால் அவரைக் கையெடுத்துக் கும்பிடவேண்டும் என்றுதான் கேட்பவர் அனைவருக்கும் தோன்றும்.
அந்தக் கச்சேரி நிறைவடைந்தபோது பலர் பரவசத்தோடு தங்கள் விழிநீரைத் துடைத்துக் கொண்டார்கள். என் மனைவியின் கண்கள் உருக்கத்தில் தளும்பின.
பின் எம்.எஸ். மேடையை விட்டுக் கீழே இறங்கி வந்தார். ஓர் உணர்வெழுச்சியோடு என் மனைவி அவர் காலில் விழுந்து வணங்கினார்.
அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களில் என் மனைவியும் ஒருத்தி. அவ்வளவுதான். ஆனால் என் மனைவியிடம் மிகப் பிரியமாகப் பேசினார் எம்.எஸ்.
அப்போதுதான் முதல்முறையாக என் மனைவியைப் பார்க்கிறார் அவர். தம் ரசிகர்களை உள்ளன்போடு நேசிக்கும் பண்பு எம்.எஸ். ஸிடம் இயல்பாகவே படிந்திருந்தது.
எம்.எஸ். ஸின் பாட்டு மட்டுமல்ல, அவரின் அன்பும் என் மனைவியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது.`இசையுலகின் பேரரசி முன் நான் சாதாரணப் பிரதம மந்திரிதான்` என்று நேரு எம்.எஸ். பற்றிச் சொன்னதுண்டு.
ஆனால் அந்த இசைப் பேரரசி தன் தலையில் எந்தப் புகழ்க் கிரீடத்தையும் சூட்டிக் கொண்டதில்லை. அளவுகடந்த எளிமையோடு சிறிதும் கர்வமில்லாது அனைவருடனும் பழகியவர் அவர்……
*தேசத் தந்தை மகாத்மா காந்தி `ரகுபதி ராகவ ராஜாராம், வைஷ்ணவ ஜனதோ` போன்ற பாடல்களை எம்.எஸ்.ஸைப் பாடச்சொல்லிக் கேட்டு, எம்.எஸ். ஸின் தெய்வீகக் குரலில் மெய்ம்மறந்திருக்கிறார்.
மகாத்மா வாழ்ந்த காலத்தில் சுதந்திர இந்தியாவில் 1947 அக்டோபர் இரண்டாம் தேதி அவரது பிறந்தநாள் வந்தது. (அடுத்த ஆண்டு அவர் பிறந்தநாள் வருவதற்கு முன்பாகவே ஜனவரி 30 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.)
அவர் வாழ்ந்த காலத்தில் அவரது கடைசியாகக் கொண்டாடப்பட்ட பிறந்தநாளுக்கு முன், எம்.எஸ்.ஸின் குரலில் `ஹரி தும் ஹரோ` என்ற மீரா பஜன் பாடலைக் கேட்க வேண்டும் என்று மகாத்மா தம் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அந்தப் பாடல் அப்போது எம்.எஸ்.ஸ¤க்குத் தெரியாது. அதற்கு மெட்டமைக்கப் படவில்லை. அதைப் பயிற்சி செய்து கற்றுக்கொண்ட பின்தான் பாட இயலும் எனத் தன் இயலாமையைத் தெரிவித்திருக்கிறார் எம்.எஸ்.
அந்தத் தகவலைக் கேட்ட மகாத்மா சொன்ன பதில் என்ன தெரியுமா?
`வேறு யாராவது அந்தப் பாடலைப் பாடுவதை விட, எம்.எஸ். தன் தெய்வீகக் குரலில் அந்தப் பாடலின் வரிகளைப் படித்தால் கூடப் போதும், நான் மகிழ்ச்சி அடைவேன்` என்றாராம் காந்தி!
மகாத்மா இப்படிச் சொன்னார் என அறிந்ததும் நெகிழ்ந்தது எம்.எஸ். ஸின் மனம். மகாத்மா மேல் மட்டற்ற மரியாதை கொண்டவர் அவர். காந்தியச் சிந்தனைகளில் தோய்ந்த ஆன்மிக மனம் கொண்டவர்.
இரண்டாண்டுகள் எம்.எஸ். சுப்புலட்சுமியின் இல்லத்திலேயே தங்கியிருந்த ஆன்மிகவாதியான பியானோ கலைஞர் வைத்யநாதன் என்கிற ரேமாஜி, `ஹரி தும் ஹரோ` பாடலுக்கு எம்.எஸ். ஸின் வேண்டுகோளின் பேரில் இசையமைத்துக் கொடுத்தார்.
எம்.எஸ். உடனடியாகப் பலமுறை பயிற்சி செய்துகொண்டு `ஹரி தும் ஹரோ` பாடலை அந்த மெட்டில் பாட அது சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.
1947 அக்டோபர் ஒன்றாம் தேதி இரவுதான் பதிவு முழுமையாகியது. மறுநாள் விடிந்தால் காந்தியின் பிறந்த தினம்.
எம்.எஸ். தில்லிக்கு நேரில் போக முடியவில்லை. ஆனால் பாடலின் பதிவு காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எம்.எஸ்.ஸின் தெய்வீகக் குரலின் ரசிகரான காந்தி, தம் பிறந்த நாளன்று அந்தப் பாட்டைக் கேட்டு பக்தி உணர்வில் தோய்ந்தார்.
1948 ஜனவரி 30ஆம் தேதியன்று மகாத்மா காலமான செய்தியை அறிவித்த அகில இந்திய வானொலி நிலையம், அந்தச் செய்திக்குப் பிறகு எம்.எஸ்.ஸின் `ஹரி தும் ஹரோ` பாடலை மீண்டும் மீண்டும் பலமுறை ஒலிபரப்பியது.
எம்.எஸ். நடித்த மீரா படத்தைப் பார்த்தும் அதில் அவர் பாடிய பாடல்களைக் கேட்டும் சொக்கிய கவிக்குயில் சரோஜினி நாயுடு, எம்.எஸ். ஸை இசைக் குயில் என பிரமித்துப் பாராட்டியிருக்கிறார்.
காஞ்சி மகாசுவாமிகள் எம்.எஸ். குரலில் இழையோடும் பக்தியை உணர்ந்து அவரை ஆசீர்வதித்திருக்கிறார்.
அவரது குரலுக்கென்று இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ வரலாறுகள் உண்டு. அவரது பாடல்கள் பல தமிழ்க் குடும்பங்களை ஊடுருவி விட்டன. எல்லோர் மனங்களிலும் நீக்கமற நிறைந்து விட்டார் அவர்.
பாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெறும் குழந்தைகள் பெரும்பாலும் பாடுவது `காற்றினிலே வரும் கீதம்`தான். இல்லாவிட்டால் `ஒளிபடைத்த கண்ணினாய், நெஞ்சுக்கு நீதியும், குறையொன்றுமில்லை`.
வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குத்துவிளக்கு உள்ளிட்ட மங்கலப் பொருட்களின் வரிசையில் எம்.எஸ். பாடல்களும் இணைந்துவிட்டன.
கேட்பவர் மனத்தில் சாந்தியைத் தோற்றுவிக்கும் அபூர்வக் குரல். உச்சஸ்தாயியில் பிசிறில்லாமல் போய் அநாயாசமாகச் சஞ்சரித்து இயல்பாகக் கீழிறங்கும் சக்தி அதற்கு உண்டு.
ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் பாடலில் `மாகுரு ஜனதன யெளவன கர்வம்` என்றொரு பகுதி வரும். அதில் `மாயாமயமிதம் அகிலம் ஹித்வா` என்ற வரியின் இறுதியில் எம்.எஸ். குரலின் ரீங்காரத்தைக் கேட்டால் ஒரு ஸ்பூன் தேனை எடுத்துக் காதில் ஊற்றியதுபோல் தோன்றும்.
அவரது சங்கீதத்தின் சிறப்பைப் பற்றியும் குரலின் இனிமையைப் பற்றியும் இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
பக்திப் பாடல்களை மனம் தோய்ந்து பாடியதால் தன் குரலில் அந்தப் பாடல்களின் பொருளைக் குழைத்துக் கொடுத்தார் அவர்.
அவரே பொருள்பற்று அறவே இல்லாதவராக இருந்ததால் தத்துவப் பாடல்களை அவரால் பொருளுணர்ந்து ஈடுபட்டுப் பாட முடிந்தது. தனக்கு இசை மூலம் கிடைத்த ஊதியத்தை எல்லாம் பற்பல சேவை நிறுவனங்களுக்கு வாரிக் கொடுத்த வள்ளல் அவர்.
மற்ற பல புகழ்பெற்ற பாடகர்கள் வரிசையில் இவர் பாடகர் என்பதைத் தாண்டி பக்தையாகவே பரிமளித்தார். திருப்பதியில் அந்த பக்தைக்குச் சிலையும் எழுப்பப் பட்டுள்ளது.
மக்சேசே விருது பெற்றவர். பத்மபூஷண், பத்ம விபூஷண், பாரத ரத்னா உள்ளிட்ட இன்னும் பற்பல உயரிய விருதுகள் அவரைத் தேடிவந்து தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டன.
ஐக்கிய நாடுகள் சபையில் மகாசுவாமிகளின் `மைத்ரீம் பஜத` பாடலைப் பாடி உலக சமாதானத்தை வலியுறுத்தியவர்.
மகாசுவாமிகள், ஒருவரின் சங்கீதத்தை மதித்தார் என்றால் அது சராசரி சங்கீதமாக எப்படி இருக்க முடியும்?
இன்று தெய்வீகப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்று எட்டாவது பிறந்தநாள்.
………………………
