நாடோடி/1000 நீதி கதைகள் பாகம் 3

அழகிய யுவதி

மகாராஜா சத்திரபால், தம் பிரஜைகள் எது கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் கொடுப்பவர் என்று பெயர் வாங்கியவர்.
ஒரு சமயம் அவர் தர்பாரில் உட்கார்ந்திருந்த சமயம் ஒரு அழகிய யுவதி அவரைப் பார்க்க வந்தாள். மகாராஜாவின் அழகைக் கண்டதும், அவள் அப்படியே மதிமயங்கி விட்டாள். இத்தகைய அழகிய புருஷன் தன் கணவனாக இருந்தால் தான் எத்தனை இன்பமாக இருக்கலாம் என்று நினைத்துப் பார்த்தாள்.
“அம்மா என்ன வேண்டும்?” என்று கேட்டார் மகாராஜா.
“தங்களைப் போன்ற கொடை வள்ளல் உள்ள ராஜ்யத்திலும் நான் சந்தோஷ மின்றி இருக்கிறேன்” என்றாள் அவள்.
”உங்களுக்கு வேண்டியதைக் கொடுப்பது என் கடமை. உங்களுக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள், தருகிறேன்.”
தங்களைக் கணவனாக அடைய வேண்டும் என்றுதான் அவள் கேட்க விரும்பினாள். ஆனால் அப்படிக் கேட்பது நாகரீகமாக இருக்காது என்று நினைத்து, “அரசே! தங்களைப் போன்ற ஒரு அழகான பிள்ளை எனக்குப் பிறக்க வேண்டும்” என்று
சொன்னாள். இன்னும் கல்யாணமாகாத அந்தப் பெண் என்ன விரும்புகிறாள் என்பதை அரசர் புரிந்துகொண்டார். உடனே அவள் காலில் விழுந்து வணங்கினார்.
“தாயே! என்னையே தங்கள் பிள்ளையாக எடுத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்.
இதைக் கேட்டதும், தான் செய்த தவற்றை யுவதி உணர்ந்தாள். ஆனால் அரசரோ, அன்றிலிருந்து அந்தப் பெண்ணைத் தாயாராகவே கருதி அவளைச் சீரும் சிறப்புமாக அரண்மனையில் வாழ வழி செய்தார்.

இந்தக் கதையைப் படிக்கும்போது பெர்னார்ட்ஷாவை மணக்க விரும்பிய ஒரு அழகிக்கு, பெர்னாட்ஷா அளித்த பதில் ஞாபகத்துக்கு வருகிறது. பார்ப்பதற்கு அழகாக இல்லாத அறிஞர் பெர்னாட் ஷாவைப் பார்த்து அழகி, “நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொண்டால் என் அழகும் உங்கள் அறிவும் கொண்ட ஒரு பிள்ளை நமக்குப் பிறக்குமே!” என்று சொன்னாள்.

வேடிக்கையாகப் பதில் சொல்வதில் வல்லுநரான பெர்னாட் ஷா சொன்னார், “ஆனால் என் அழகும் உங்கள் அறிவும் கொண்ட மகள் பிறந்துவிட்டால் என்ன செய்வது?” என்று.