தி.சோ.வேணுகோபாலன்/விகற்ப நிர்விகற்பம்

நிர்வாணம்
புதிதல்ல நமக்கு
இன்றும்
திகம்பரர் திரியும் தேசம்
நமதே

உள் நிர்வாணம்
பகலிரவு பாராமல்
உடைகழன்றது உணராமல்
உலவுகிறது.

இருள் போர்த்த ‘ஹாலு’க்குள்
ஒளிவட்ட வலைக் கூண்டில் –
உள மண்டியில் சேர்ந்த
ஊன் இன்ப இழையெடுத்து
இளமை விரல்கள்
ஆசைக்கு வலைபின்னி
முத்திரைகள் காட்ட
மேலாடை சரிய
உள் ஆடை நெகிழ,
பட்டு உராய்ந்த மேனிக்கு
ஆடைகள் அஞ்சலி செய்யும்
அலைவட்டங்களாய்
காலடியில் –
உள்ளக் கரியில்
நிதானமாய் நெருப்புவைத்து
நிமிஷம் ஜொலிக்கும்
நிர்வாணம்…(புதிது)
நிற்கும் இருக்கும்
நிழற் சிலைகளின்
நாடிகளில் கள்ளேற
நரம்புகளில் தீபாய
படைப்புக் கடவுளின் ஆயுதங்கள்
புடைக்க
ஈரிரண்டு கோளங்கள்
ஆடும் அனலாக
உருகும் வி(வ) காரம்
காசு – ஆசை வியாபாரம்

‘கணையாழி’ ஜூலை 1970