
ஆறுகள் கூடும் இடங்களைக் ‘கூடல்’ என்று அழைக்கும் மரபு உண்டு. இரண்டு ஆறுகள் கூடும் இடத்தைக் கூடலூர் என்றும்,மூன்று ஆறுகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும் பெயரிட்டு அழைத்தனர். ’கிருதமாலா’ எனும் பெயர் கொண்ட ஆறு மதுரை மாநகரை இரு பிரிவுகளாகச் சுற்றி வந்து மீண்டும் ஒன்றாகக் கூடுவதால் மதுரையம்பதிக்கு “கூடல் நகர் “எனும் பெயர் வந்தது என்பார்கள்!!
கங்கை, யமுனை,சரஸ்வதி இந்த மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தை திருவேணி சங்கமம் என்று அழைப்பார்கள். இங்கே நீராடுவது புனிதமானது என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. தமிழகத்தில் மூன்று நதிகள் சங்கமிக்கும் மூன்று பிரபலமான இடங்களைப் பற்றி சிந்திப்போம்!
கொங்குநாட்டில் காவிரியுடன் பவானியாறும் அமுத நதியும் கலக்குமிடம் ‘பவானி முக்கூடல்’ என்று அழைக்கப்படுகிறது. நதிகள் சங்கமமாகும் இடத்தில் பெரிய சிவாலயம் உள்ளது. இறைவன் சங்கமேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். தேவாரத்தில் இத்தலம் நணா என்றும், கல்வெட்டுகளில் நணா உடையார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது! அமுத நதி பூமிக்கு அடியில் பாய்வதாக ஐதீகம்!
பிரபந்த மரபியலில் 96 வகை நூல்கள் கூறப்பட்டுள்ளன . அவற்றில் ஒன்று பள்ளு என்னும் சிற்றிலக்கியம் ஆகும்.1732 ஆம் ஆண்டு உருவான சதுரகராதி 96 வகை நூல்களுக்கும் விளக்கம் தருகிறது. முக்கூடல் பள்ளு என்னும் இலக்கியம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலில் உள்ள விவசாயத்தைப் பற்றியும், மனித வாழ்க்கையைப் பற்றியும், மூன்று நதிகள் சங்கமிக்கும் விவரங்களையும் எடுத்து இயம்புகிறது!
தாமிரபரணி ஆறு, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல். இதற்கு ஆசூர் வடகரை நாடு என்ற பெயரும் உண்டு. தெற்கே உள்ள பகுதி சீவல மங்கைத் தென்கரை நாடு என்று அழைக்கப் பெறுகிறது. தென்கரை நாட்டில் அமைந்துள்ள ஊர் மருதூர். மூன்று நதிகள் சங்கமிக்கும் இந்த இடத்தில் நீராடினால் கங்கையில் நீராடினால் உண்டாகும் பலன் கிடைக்கும்.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு செல்லும் சாலையில், பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருமுக்கூடல் எனும் ஊரில் அமைந்துள்ளது அப்பன் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் கோயில். வேகவதி ஆறு, செய்யாறு, பாலாறு ஆகிய மூன்று ஆறுகளும் இங்கே சங்கமிப்பதால் முக்கூடல் என்று பெயர் பெற்று பின்பு திரு என்ற அடைமொழியுடன் திருமுக்கூடல் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்தலத்தில் ஸ்நானம் செய்வதும் புண்ணியமான ஒன்றாகும்.
1,000 ஆண்டுகளுக்கு முன்னர் திருமுக்கூடல் அப்பன் வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் ஒரு மருத்துவமனை சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது என்பதை இங்கு உள்ள கல்வெட்டின் மூலம் தெரிந்து கொள்கிறோம். இந்தத் திருக்கோயிலில் சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கல்லூரி, நாட்டியசாலை மற்றும் வீரசோழன் மருத்துவமனை அமைந்திருந்த செய்திகளை, கி.பி.1068-ம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டுச் செய்தியின் மூலம் அறியமுடிகிறது.வீரராஜேந்திர சோழ மன்னனின் கல்வெட்டு இது!! கீழே அப்பன் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் சொர்க்கவாசல் புகைப்படத்தைக் காண்கிறீர்கள்…….
