
புத்தக அறிமுகம் – 10
மகாபாரதத்தில் உலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படுகின்றது. நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் மகாபாரதம் பற்றிப் பேசுகின்றன. கட்டுடைக்கிறேன், மாற்றி யோசிக்கிறேன் என்று கூறி மகாபாரதத்தை சிதைக்கும் புத்தகங்களும் உண்டு! மாற்றுக் கருத்துகளுக்கும் இடம் உண்டு என்பதால், அவைகளும் இங்கு வரவேற்பைப் பெறுகின்றன.
தீபன் (டி.என்.ராதாகிருஷ்ணன்) எழுதியுள்ள ‘கடைசி குரு’ 12 சிறுகதைகள் (உரைச்சித்திரம் என்கிறார் ஆசிரியர்) அடங்கிய தொகுதி. ஶ்ரீவேதவியாசர் சொல்லமல் விட்ட இடங்களை அல்லது போதுமான அளவு விளக்காமல் அவர் கடந்து சென்ற இடங்களை – பாத்திரங்களின் புனிதம் குறையாமல், சிறு உரைச் சித்திரங்களாகப் படைத்துள்ளார் தீபன். மகாபாரதத்தின் வரிகளுக்கிடையே உள்ள உன்னதங்களை அழகான தமிழில் எடுத்துரைக்கும் சுவாரஸ்யமான நூல்!
எழுத்தாளர் சப்தரிஷி லா.ச.ரா. மிக நுணுக்கமான முன்னுரை வழங்கியுள்ளார். ஒவ்வொரு உரைச் சித்திரத்தின் முடிவிலும், எழுத்தாளுமைகளின் பாராட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்தப் புத்தகத்தை முழுமையாக இரசிப்பதற்கு, மகாபாரதப் பாத்திரங்களும், அவற்றின் உறவுச்சிக்கல்களும் தெரிந்திருப்பது அவசியம் எனத் தோன்றுகின்றது.
கண்ணனை வதம் செய்ய வரும் பூதனையின் பார்வையில் ஆயர்பாடியும், கோபியரும், கண்ணனும் அவளைக் கவர்கின்றனர்! தன்னைக் கொல்லப் பல ஆயுதங்கள் இருந்தும் , கண்ணன் அவளை வதம் செய்த முறையையே அவள் ரசிக்கிறாள்! ‘அதரம் அதரம் மதுரம்’ என மகிழ்ந்து, மூச்சற்ற மோகனத்தில் லயிக்கிறாள்! “எல்லோரும் நினைத்தார்கள் – நான் அன்றே இறந்துவிட்டேன் என்று! கண்ணனைத் தவிர யாருக்கும் தெரியாது – அன்றுதான் நான் உயிர்த்தேன் என்று!”. கவித்துவமான உரைச்சித்திரம்!
ராதையும், கண்ணனும் சந்திக்கும் அந்த இறுதிச் சந்திப்பு சொல்லும் செய்தி பாகவதத்தின் சாரம்! “எப்போதும் கிருஷ்ண ஸ்மரணை – என்றென்றும் இடையன் கருணை – போதும் கண்ணா – எங்களுக்கு வைகுந்தமெல்லாம் வேண்டாம் கண்ணா!” . (இந்திரா பார்த்தசாரதி அவர்களின் ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ வில் இந்த இறுதிச் சந்திப்பை கண்ணன் தவிர்ப்பார் – காரணம் நம் மனதைக் கரைக்கும்!).
“தண்டிக்கச் சொன்னால், கொன்று விட்டீர்களே. தந்தையில்லாத பிரகலாதன் மனம் எவ்வளவு பாடுபடும்?” – கேட்கும் மகாலட்சுமிக்கு நாராயணன் என்ன சொல்லியிருப்பார்? அருமையான விவாதமும், விளக்கமும் – தந்தை யார்? சிறுகதையில்!
‘மறை விழி’ – கண்ணழகிக் காந்தாரி ஏன் தன் கண்களைக் கட்டிக்கொண்டாள்? அவள் மனக் கிடக்கையை ஆசிரியர் தன் கவிதையில் சொல்கிறார்:
“தோற்றம் கண்டே தோற்பவன் வேண்டாம்!
மாற்றம் காண மறுப்பவன் வேண்டாம் - விழி
ஊற்றம் கண்டு உறைபவன் வேண்டாம் - என்
உள்ளொளி உணரும் உடையவன் வேண்டும்”
இப்படி உள்ளம் தொடும் பல கவிதைகள் புத்தகம் முழுவதும்!
தாய் கங்கா மாதா, தந்தை சந்தனு, பிருகஸ்பதி, வசிஷ்டர், பரசுராமர் போன்ற எத்துணை மேம்பட்ட குருநாதர்கள் – அரசியல் பயிற்சி, அஸ்திரப் பயிற்சி, அனைத்து வகையான ஆயுதப் பஉருவான யிற்சி, மந்திர எந்திர பிரயோகப் பயிற்சி! இருந்தும் பீஷ்மப் பிதாமகருக்கு ஒரு குறையுணர்ச்சி. அதற்குப் பதிலாகச் சொல்லும் அம்பையின் ஆத்மா கூறுவது, பிதாமகரையே – பாரதம் எழுதிய வியாசரையே – அசைத்துப் பார்க்கும் வார்த்தைகள்! “நீர் பிரும்மச்சர்ய விரதத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட தடுமாற்றம் அது….. பெண்குலத்தை ஒதுக்குவது அல்ல , தாயாக, சகோதரியாக, தோழியாக, குருவாக அவர்களை உயர்த்துவது பிரம்மச்சர்யம்!” ‘இதய வணக்கம் என் இறுதி குருவிற்கு’ என்று தன் குறையுணர்ச்சியைப் போக்கிய அம்பையின் குரல் வந்த திசை நோக்கித் தொழுகிறார் பீஷ்மர்!
தேவகிக்கு வந்த தெளிவு, குசேல கீதை, தாய்மைப் பசி, கீதை பிறந்த கீர்த்திப் பொழுது, அக(ழ்)ம் விழி, வியாச கீதை, ஓராயிரம் நாமம் உருவான நேரம் (பீஷ்மர் மட்டுமே மகா விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை சொல்லத் தகுதியுடையவர் என்பதற்கு கிருஷ்ணன் சொல்லும் காரணம், ‘காவியம்’) என அனைத்திலும் புதைந்து கிடக்கும் உண்மைகள், வாழ்க்கைக்கு வழிகாட்டிகள்!
அனைவரும் வாசித்து, ருசித்து அனுபவிக்க வேண்டிய புராணத் தமிழ் இலக்கியத் தொகுப்பு!
வாழ்த்துகள் தீபன்!
