
நான் சுரேஷ். பத்தாம் வகுப்பு படிக்கிறேன். என் தங்கை யாமினி, எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.
இன்று காலை எழுந்ததிலிருந்து கழுத்து வலி. இடதுபுறம் திரும்ப முடியவில்லை. யாராவது இடதுபுறத்திலிருந்து கூப்பிட்டால் தலையைத் திருப்ப முடியாமல் முழுதுமாய் நானே திரும்பி என்னவென்று கேட்கிறேன்.
“என்னடா? கழுத்து சுளுக்கா? ஏன் தலைய ஒரு மாதிரி வெச்சிண்டிருக்க?” கேட்டாள் அம்மா.
“ஆமாம் போலிருக்கும்மா.” என்றேன்.
“நேத்தி நைட் நீ சோபாலயே ஏனோ தானோ படுக்கறச்சேயே சொன்னேன்ல.. எங்கியோ எசகு பெசகா சுளிக்கிக்க போறதுன்னு..” என்று சொல்லிக் கொண்டே என் கழுத்தைத் தொட்டுப் பார்த்தாள் அம்மா. அவள் தொட்டது என் வலியைக் கூட்டியது.
“ஆ! தொடாதம்மா..” என்று கத்தினேன்.
“சரி! சரி! ராக்காயி வந்ததும் நீவி விடச் சொல்றேன்.. நீ சித்த நாழி படுத்துக்கோ!” என்றாள் அம்மா.
‘ஹை! ஜாலி!’ மனதுக்குள் மகிழ்ந்தாலும்,
“ஆன்ட்டி பத்து மணிக்குதான வருவாங்க.. நா எப்டி ஸ்கூலுக்கு போறதாம்..” என்று ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி கேட்டு வைத்தேன்.
“இன்னிக்கு ஒரு நாள் ஸ்கூல் போகலன்னா ஒண்ணும் குடி முழுகி போய்டாது..” என்றாள் அம்மா.
நான் சோகமாக இருப்பது போல பாவனை செய்தேன்.
“டேய்! நடிக்காதடா.. இன்னிக்கு பங்க்கடிக்கணும்னுதானே பிளான் போட்டு நேத்தி நைட் நீ சோபால படுத்துண்ட?” என்று கேட்டாள் தங்கை யாமினி.
‘கிராதகி! போட்டுக்குடுக்கறியா?’ என்று அவளை என் கண்களால் மிரட்டினேன்.
“ஏய்! அவன வம்புக்கு இழுக்கறதே உன் வேலையா போச்சு. போடீ! சீக்கிரம் குளிச்சிட்டு ஸ்கூலுக்கு கௌம்பற வழியப் பாரு!” என்று அம்மா அவளை அதட்டினாள்.
“ச்சீ ப்பெ!” என்று என்னைப் பார்த்துப் பழிப்பு காட்டிவிட்டு ஓடினாள் தங்கை.
“நீ போடா ராஜா.. போய் படுத்துக்கோ.. ராக்காயி வந்ததும் நா எழுப்பறேன்..” என்றாள் அம்மா.
இட்லி தட்டிலிருந்து இட்லி எடுத்து வைத்துக் கொண்டே அம்மா சொன்னாள்.
அதைப் பார்த்த நான்,
“ம்மா! பசிக்கறது.. சாப்டுட்டு படுத்துக்கவா?” என்று கேட்டேன்.
“ஐயோ! நா ஒருத்தி.. வாடா ராஜா! வந்து சாப்பிடு!” என்று தட்டில் இட்லிகளை எடுத்து வைத்து என்னை சாப்பிட அழைத்தாள்.
சுடச்சுட இட்லியும் தேங்காய் சட்னியும் மிளகாய் பொடியும் தேவாம்ருதமாய் இருந்தது.
கழுத்து வலி ஒரு பக்கம் இருந்தாலும் நிறைவாய் இட்லிகளை அமுக்கிவிட்டு எழுந்தேன்.
“சரிம்மா! நா போய் படுத்துக்கறேன். ஆன்ட்டி வந்ததும் எழுப்பும்மா!” என்று கூறிவிட்டு நான் உள்ளறையில் சென்று பாயை விரித்துப் படுத்தேன்.
வயிறு நிறைந்திருந்தாலோ என்னமோ எனக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது.
“ஏம்மா? ஆன்ட்டி வந்து சுளுக்கு எப்டி சரி செய்வாங்க?” என்று என் தங்கை கேட்டது என் காதிலும் விழுந்தது.
“அதுவா? கழுத்தில கொஞ்சம் நல்லெண்ணைய தடவி நன்னா உருவி விடுவா..”
“உருவி விடறதுன்னா என்ன?” தங்கை சந்தேகம் கேட்டாள்.
“உருவி விடறதுன்னா எண்ணைய தடவி நன்னா அழுத்தி அழுத்தி தேய்க்கறது..”
“அப்டி தேய்ச்சா?”
“அப்டி தேய்ச்சா பெசகியிருக்கற தசை தளர்ந்து சரியாகிடும். அப்றம் கழுத்தை இப்டியும் அப்டியுமா சடக் சடக்ன்னு திருப்பி விடுவா.. சுளுக்கு சரியாகிடும்..” என்று விளக்கினாள் அம்மா.
“இத நீயே செய்ய முடியாதாம்மா?”
“நான் செய்ய முடியாதுடா கண்ணு.. கழுத்த சரியா திருப்பி விடலன்னா இன்னும் பெரிய பிரச்சனையாகிடும்.. ராக்காயிக்குதான் இதுலல்லாம் அனுபவம் அதிகம்..”
“ஏம்மா? நீயோ நிறைய படிச்சிருக்க.. சாய்ங்காலம்லாம் பிளஸ்டூ பசங்களுக்கு ட்யூஷன்லாம் எடுக்கற.. ஆனா ராக்காயி ஆன்ட்டிக்கு எழுதப் படிக்கக் கூட தெரியாது.. ஆனா அவங்களுக்குதான் இதெல்லாம் தெரியும்னு சொல்ற?”
“ஹா.. ஹா.. நல்லா கேட்ட போ.. நா படிச்சது ஏட்டுக் கல்வி. அவ படிச்சிருக்கறது வாழ்க்கைக் கல்வி! சரி! சரி! ஸ்கூல் வேன் வந்துடும்.. கிளம்பும்மா..” என்று சொல்லி அம்மா அவளை கிளப்பினாள்.
இது அத்தனையும் அரை தூக்கத்தில் எனக்குக் கேட்டது.
என் தங்கை பள்ளிக்குக் கிளம்ப, நான் அப்படியே ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றேன்.
சற்று நேரத்தில் ராக்காயி ஆன்ட்டி வந்துவிட்டதாகக் கூறி அம்மா என்னை எழுப்பினாள்.
“என்னா தம்பி? களுத்து சுளுக்கா?” என்று கேட்டுக் கொண்டே ராக்காயி ஆன்ட்டி என் கழுத்தைப் பரிசோதித்தாள்.
அம்மா நல்லெண்ணையை ஒரு சிறிய கிண்ணத்தில் விட்டு எடுத்து வந்து தந்தாள்.
“இஸ்கோலுக்கு வோணும்னே மட்டம் போட்டுட்டியா கண்ணு!?” என்று கேட்டுக் கொண்டே, ராக்காயி ஆன்ட்டி என் கழுத்தில் கொஞ்சம் எண்ணையைத் தடவி நன்றாக நீவி விட்டுவிட்டு,
“இனிமே நீ ஸ்கூலுக்கு லீவே போடக் கூடாது!” என்று பெரிய குரலில் ராட்சசி போல கூறிக்கொண்டே, என் தலையின் இருபுறமும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வலப்புறமாக சட்டென்று ஒரே திருப்பு!
க்ளக்!
என் தலைக்குள் ஏதோ உடைவது போல இருந்தது.
“ஆ! அம்மா!” அலறினேன் நான்.
என் கழுத்தில் தலை நேராக இல்லாமல் தொண்ணூறு (90) டிகிரிக்கு திரும்பியது போல இருந்தது.
வலி! வலி! உயிர் போகுமளவு வலியை உணர்ந்தேன் நான்.
“டேய்! சுரேஷ்! டேய்! என்னடா? என்ன செய்யுது?” என்று கேட்டுக்கொண்டே என் கன்னத்தில் அம்மா படபடவென்று தட்டினாள்.
“ஆ! ஆன்ட்டி.. ஆன்ட்டி என் கழுத்த ஒடச்சிட்டாங்க..” அழுதபடி நான் கூற,
“ஆன்ட்டியா? ஔறாதடா! கண்ணத் தொற.. கண்ணத் தொறடா..” என்று என் அம்மா எரிச்சலாகச் சொல்ல, நான் மெதுவாகக் கண்ணைத் திறந்து பார்த்தேன்.
நான் தூங்க ஆரம்பித்து முழுதாக பதினைந்து நிமிடங்களே ஆகியிருந்தது.
ஆழ்ந்த தூக்கத்தில் என்னையறியாமல் இடதுபக்கம் திரும்பி படுத்திருக்கிறேன். அதனால் வலி அதிகமாகியிருக்கிறது. அதைத்தான் ஆன்ட்டி என் கழுத்தை உடைத்துவிட்டதாகக் கனவு கண்டு உளறியிருக்கிறேன்.
“ஆன்ட்டி இன்னும் வரவேல்ல.. லூசு மாதிரி கனவு கண்டியா?” என்று கேட்டு என்னை அதட்டிய அம்மா, என் நெற்றியில் திருநீறு இட்டுவிட்டு,
“கம்முன்னு தூங்கு. ஆன்ட்டி வந்ததும் எழுப்பறேன்.” என்றாள்.
என் தங்கை கணித்தது போல நான் பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட வேண்டுமென்றேதான் இந்தக் கழுத்துச் சுளுக்கை வரவழைத்துக் கொண்டேன். அதற்குதான் கனவில் எனக்கு சரியான தண்டனை கிடைத்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன்.
நான் கழுத்தை இப்படியும் அப்படியும் அசைத்துப் பார்க்க, சுளுக்கு சரியாகி விட்டிருந்தது.
“இல்லம்மா! கழுத்து வலி சரியாகிடுச்சு.. நா ஸ்கூலுக்கு கௌம்பறேன்.” என்று சொல்லிவிட்டு என் சீருடையை எடுத்து மாற்றிக்கொண்டேன்.
“லேட்டாகிடுச்சேடா?” என்ற அம்மாவிடம்,
“பரவால்லம்மா!” என்றபடி என் புத்தகப் பையை எடுத்து சைக்கிளில் வைத்துக்கொண்டு,
‘இனிமே இந்த மாதிரி டிராமால்லாம் போடவே மாட்டேன். கடவுளே! என்ன மன்னிச்சிடுப்பா..’ என்று மனதில் நினைத்தபடியே பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பினேன்.
♥♥♥♥♥♥
