ப.மதியழகன் கவிதைகள்

விருட்சம் இன்றைய கவியரங்கில் வாசித்த கவிதைகள்

1
அரைவட்டம்

கொஞ்சம் பொறுங்கள்
வசந்தத்துக்கு முன்
இலைகளை உதிர்க்கத்தான்
வேண்டும்

நான் உணர்கிறேன்
எங்கோ எவரோ என்னைப்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
என்று

நான் நிலத்திலும்
நீரிலும் நடப்பேன்
புற்கள் நசுங்காது
அலைகள் எழாது

காற்று மரங்களை
உலுக்கும்
விழுந்த சருகுகள்
அண்ணாந்து மரத்தை
வியந்து பார்க்காது
அதற்குத் தெரியும்
தான் அங்கிருந்து
தான் வந்திருக்கிறோமென…

2
ஆகக்கடவது

நான் காத்துக் கொண்டிருந்துவிட்டேன்
அற்புதம் நிகழுமென
அதோ தரையில் துள்ளும் மீன்
இரைக்கு ஆசைப்பட்டு
தூண்டிலில் மாட்டியது
எல்லையற்ற பிரபஞ்சம்
எனக்கு அழைப்பு விடுத்தது
உனக்கு ஒரேயொரு
வாய்ப்பு இருக்கிறது
நீ தப்பிக்க வேண்டுமென்றால்
உனக்குள் நீ மலர்ந்துவிடு
அப்பொழுது நீ
பிரபஞ்சத்தின் மையமாக
ஆகிவிடுவாய் என்றது
எடையற்ற எதுவும்
மிதக்கத்தான் செய்யும்
காந்தப்புலத்திலிருந்து விடுபட்டவுடன்
எங்கும் கடவுளையே எதிர்கொள்வாய்
பிரார்த்தனையென்பது
நீ கரைந்து இல்லாமல் போவதுதான்…
ஆமென்!