மதுவந்தி கவிதைகள்

அடையாளம்.

வாக்களித்த அடையாளமாய்
இடதுகை ஆட்காட்டி விரலில்
நெடுநாளாய் மைத் தீற்றல்.

பிறை நிலா போல
துளித்துளியாய்
தேய்ந்தபடியே இருந்தது .

காலையெழுந்து
உள்ளங்கை தேய்த்து
விழி மூடித் திறக்கையில்
நகத்தில் மையின்
அடையாளமேயில்லை.

இந்த அடையாள மை போல
உன் நினைவையும்
இட்டுக் கொள்ளவும்
நீக்கிக் கொள்ளவும்
வாய்க்குமானால்
வாழ்வு எத்தனை
சுலபமாகி விடக்கூடும்?.

எதிர்த் திசை.

விடுமுறையில் வந்திருந்த
பேத்தியுடன் காலை நடை.
பூங்காவில் வழக்கமாய்ச் செல்லும்
திசைக்கு எதிர்த்திசையில்
கைபிடித்து நடக்கத்
துவங்கினாள் பேத்தி.

அந்தப்பக்கமாய்த்தான்
நான் நடப்பேன் என
எதிர்ப்பக்கம் காட்டினேன்.
எனக்காக ஒரு நாள்
எதிர்த்திசையில்
நடந்தாலென்னவென்றாள்.

எப்போதும் பார்க்கிற
மரம்,பூச்செடி ,
பூங்காவின் இரும்புக்கதவு
உட்கார்ந்த பெஞ்ச்
எல்லாமும் வித்யாசமாய்.

முன்னாலும் பின்னாலும்
நடந்தவரெலாம்
எதிர்ப்பக்கம் தென்பட்டு
கையசைப்பும், தலையசைப்பும்,
முகம் பூரா முறுவலுமாய்
புதிதான நடையாயிருந்தது.

எப்போதேனும்
எதிர்த்திசை
நடத்தல் இனிது .

One Comment on “மதுவந்தி கவிதைகள்”

Comments are closed.