
1934-ஆம் வருடத்தில் எனக்கு எழுதப்பட்ட கடிதம் 1 தொலைந்து போனது எனக்கு மிகவும் வருத்தம் அளித்தது.
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி, திருவண்ணாமலை (நேரடி கவனத்திற்கு) என்று விலாசமிட்டு நான் எழுதிய கடிதத்திற்கு வந்த பதில் கடிதம்தான் அது. என்னுடைய மிகவும் தீவிரமான நானே ஒப்புக்கொண்ட மேலும் என்னுடைய அம்மாவிற்கு மிகவும் வருத்தமளித்த குணம் கோபம், அந்தக் கோபம் சிறிய என்னுடைய விஷயமானாலும் திடீரென்று வெடிக்கும். அந்தச் சமயம் எனக்கு மிகவும் கெட்டகாலம். நான் கடவுளாக வழிபட்ட தந்தையை அப்பொழுதுதான் இழந்திருந்தேன். அப்பொழுது எனது வயது 12 கழிந்து 13 வயது நடந்து கொண்டிருந்தது.
அச்சமயத்தில் எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவர், புத்தி சொல்லக்கூடியவர், குறிப்பாக, குடும்பத்தைச் சேராதவர், அப்பொழுது எனக்குத் தேவையாயிருந்த பொழுது ரமண மகரிஷியின் பெயர் திடீரென்று என் மனதில் வந்தது. என்னுடைய தந்தை பிடிவாதம் மிக்கவர், எதையும் தாங்க முடியாதவர், எதிலும் நம்பிக்கையில்லாதவர். ஆனால் அவர் எந்தவொரு விமர்சனமும் இல்லாமல் அவ்வப்பொழுது கூறியது பகவானுடைய பெயரைத்தான். எனவே திருவண்ணாமலையில் உறையும் அந்த மகானுக்குக் கடிதம் எழுதுவது என்று முடிவு செய்தேன். பல முயற்சிகளுக்குப் பிறகு இறுதியாக மகரிஷிக்கு – நேரடியாக விலாசமிட்டு — ‘தயவுசெய்து உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய கோபத்தைத் துறக்க ஏதாவது வழி சொல்லுங்களேன்’ என்ற பொருள்படக் கடிதம்.
எழுதினேன். ஒரு வாரத்திற்குள் சர்வாதிகாரியின் கையொப்பமிட்ட கடிதம் எனக்கு வந்தது
அதில் என்னுடைய கடிதம் கிடைத்தது. அது மகரிஷிக்கு முன்னால் வைக்கப்பட்டடது. எனக்கு அவர் அளிக்கும் பதில் தொடர்ந்து என்னுடைய கோபத்தை வெல்ல நான் சிரத்தையுடன் முயற்சியெடுத்தால் அதிலிருந்து விடுபட முடியும் என்று கூறி பகவான் தன்னுடைய ஆசிகளையும் வழங்கியிருந்தார்.
இந்தக் கடிதத்தைக் கண்டவுடன் எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஏனெனில் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து நான் எழுதிய கடிதத்திற்கு பதில் போட்டதுதான். என்ன செய்ய வேண்டும் என்று எப்பொழுதுமே கூறுவதுடன் எனக்கு புத்திமதி, எச்சரிக்கை போன்றவைகள் தான் எனக்குக் கிடைப்பது. ஆனால் யாருமே என்னைப் பெரிய மனுஷியாக மதித்ததில்லை. ஆனால் இங்கேயோ இந்த மகான் என்னை ஒரு பொருட்டாக மதித்து இது உன்னுடைய கோபமல்லவா? எனவே நீயே அதை வெல்ல வேண்டும் என்று கூறுவதுபோல் எழுதியிருந்தார். மிகவும் நாசூக்கான வழியில் என்னை ஒரு தனி நபராகக் கருதி என்னுடைய பிரச்சினையை என்னிடமே அனுப்பி நானே அதைத் தீர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். மகரிஷியின் இந்த முறை எனக்குப் பிடித்திருந்தது.
மகரிஷி மீண்டும் என் வாழ்க்கையில் சுமார் ஒரு வருடம் கழித்து வந்தார். என்னுடைய அக்கா, குடும்பத்தினர் அனைவரையும் தல யாத்திரைக்காக அழைத்துச் சென்றாள். இந்த யாத்திரை ஒரு வாரத்தில் முடிந்துவிடும். திருவண்ணாமலையில் இரு நாட்கள் மட்டுமே எங்களால் தங்க முடியும். ஆனால் ரமணாச்ரமத்தில் வாரம் முழுவதும் தங்கினோம். புறப்படும்பொழுது குடும்பத்தை விட்டு தொலைந்துபோன குழந்தை அழுவதுபோல் நான் அழுதேன். ரமணாச்ரமத்திற்குச் சென்று வந்த அனுபவம் எனக்கு மறக்க முடியாததாக இருந்தது. ரமண மகரிஷியின் மீது ஆறாத அன்பு பொங்கி வந்தது. என்னுடைய பேச்சு எங்கேயோ போய்விட்டது. தூக்கத்தில் இருப்பதுபோல் இருந்தேன். என்னுடைய மனதும் ஓடுங்கி விட்டது. சொல்லவொணாத ஆனந்த சாகரத்தில் இருந்தேன். மகரிஷிமீது பொங்கி வந்த இந்த அன்பு எல்லாவிதமான பௌதிக நிலையும் கடந்து என்னிடத்தே வேறொரு உணர்வை ஏற்படுத்தியது. இதை மனமில்லாத ஆனந்தம் என்றுதான் கூறவேண்டும். இந்த ஆனந்தம் ஏதோ ஒரு மையத்தில் இல்லாமல் உடம்பு முழுவதும் பரவியிருந்தது. இது தன்னிலையை வெளியிடத்தில் அடையாளம் கண்டு விட்ட நிலை, அது நம்மிடத்தில் தங்கி நாம் முன்போல் இல்லாமல் முற்றிலும் மாற்றி விடுகிறது.
விடியல் நேரத்திற்கு முன்பாகவே திருவண்ணாமலை சென்றடைந்தோம். ஆச்ரமத்திற்குச் சென்று குளித்து, காலை உணவு கழித்துவிட்டு, பகவானிருக்கும் ஹாலுக்குச் சென்றோம். என்னுடைய அம்மா, தம்பி, அக்கா எல்லோரும் எனக்கு முன்னால் ஹாலுக்குள் சென்று விட்டனர். நான் வெளியே தயங்கி நின்றேன். ஏதோ ஒரு குழப்பத்துடன். பிறகு சுதாரித்துக் கொண்டு வெளியே நின்று கதவு வழியாக உள்ளே எட்டிப் பார்த்தேன். அங்கே உள்ளே சோபாவின்மேல் ஒரு மூலையில் தங்க நிறத்தில் ஒரு உருவம் உட்கார்ந்திருந்தது. அதன் முகத்தில் இருந்த பிரகாசத்தை நான் எங்கேயும் பார்த்ததில்லை. அதற்குப் பின்னரும் எங்கேயும் நான் கண்டதில்லை. இவ்வாறு என்னுடைய பார்வை மகரிஷியை நோக்கியபோது, மகரிஷியும் என்னைத் திரும்பிப் பார்த்தார். இப்பொழுது நாற்பது வருடங்களுக்குப் பிறகு (1975-இல் எழுதியது) அதை இப்போது நினைத்துப் பார்த்தால்கூட அப்பொழுதுபோல் இப்பொழுதும் என்னுடைய கண்களில் நீர் துளிர்க்கின்றது.
நான் அங்கேயே நின்றேன். எவ்வளவு நேரம் என்று எனக்குத் தெரியாது. அந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே நின்றேன். பிறகு சமாதியில் இருப்பதுபோல் முன்னே சென்று அவருடைய கால்களைத் தொட்டு நமஸ்கரித்தேன். நான் செய்ததை மற்றவர்கள் ஆட்சேபிப்பதுபோல் பார்த்தார்கள். ஜன்னலுக்கருகில் ஒரு இடத்தைத் தேடி அங்கே உட்கார்ந்தேன். நான் உட்கார்ந்த பிறகு என் கண்கள் தானாகவே கண்ணீரைச் சொரிந்தன. அடிக்கடி என் கண்களை அந்தச் சமயத்தில் துடைத்துக்கொண்டது
இப்பொழுதும் நினைவுக்கு வருகிறது. அது ஆனந்தக் கண்ணீரோ அல்லது துக்கக் கண்ணீரோ அல்ல! அது ஒருவேளை மகரிஷியின் உள்ளே உறையும் ஏதோ ஒன்றைக் கண்டு எனக்கில்லையே
என்ற வருத்தத்தினாலும் இருக்கலாம். அதை நான் என்றும் தேடிக்கொண்டே இருப்பேன். அன்று எனக்காக அழுதேன். இன்றும் அந்த அழுகைத் தொடர்கிறது.
மனித முகத்தில் தீர்க்கமான அகவாழ்க்கையை இதற்குமுன் எங்கேயும் கண்டதில்லை. ஆனால் அந்த முகம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய குழந்தை முகமாக இருந்தது. மகரிஷிகளின் சொல்ல முடியாத எல்லோரையும் கவரக்கூடிய ஒரு ஆன்ம சக்தி என்னைத் தடுத்தாட் கொண்டது. என்னைச் சுற்றி மற்றவர்கள் உட்கார்ந்திருந் தாலும் அவர்களைப் பற்றி நான் அப்பொழுது கவலைப் படவில்லை. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு திடீரென்று எனக்குப் பாடவேண்டும் என்று தோன்றியது. என்னுடைய (12 வயது) குரலை உயர்த்தி தியாகராஜரின் கீர்த்தனையைப் பாடினேன். மெதுவாக என்னுடைய விரலால் தாளம் போட்டேன். ஆனால் அங்கிருந்தவர்களோ என் பாட்டை ரசித்ததாகத் தெரியவில்லை. என் பாட்டை அவர்கள் ரசிக்காமல் இருந்ததைக் கண்டு எனக்கு வெட்கமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் என்னுடைய மனது சோபாவில் இருந்த உருவத்தைத் தவிரஅங்கிருந்த யாரையும் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. பாட்டு முடிந்து சில நிமிடங்கள் கழித்து ‘தெலுசி ராம சிந்தனா’ என்ற இன்னொரு பாட்டை ஆரம்பித்தேன். இந்தப் பாட்டின் அனுபல்லவி, மனத்தை அமைதியாக ஒரு கணநேரம் இருத்தி, ராமநாமத்தின் சாரத்தை உணரும்படி அறிவுறுத்துகிறது. இந்த அனுபல்லவியை நான் எடுக்கும்பொழுது மகரிஷி தன்னுடைய கண்களை என்மீது செலுத்தினார். மகரிஷியின் எதையும் ஈர்க்கும் அந்தப் பார்வை என் இதயத்தை இழுத்தது. நான் எப்பொழுதும் இங்கேயே இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அங்கிருந்த ஏழு நாளிலும் காலையும் மாலையும் மூன்று மணி நேரங்கள் நான் ஹாலில் கழித்தேன். முதல் நாளுக்குப் பிறகு எந்தவொரு விவாதமோ, சர்ச்சையோ இல்லாமல் நாங்கள் அனைவரும் அமைதியாக மீதமுள்ள இடங்களுக்குச் செல்லும் பிரயாணத்தை ரத்து செய்து விட்டு அங்கேயே தங்குவது என்று முடிவு செய்தோம். மேலும் ஐந்து நாட்கள் அங்கே தங்குவதற்கு ஆச்ரம நிர்வாகம் எங்களை அனுமதித்தது. நான் வழக்கமாக உட்காரும் ஜன்னலுக்கு அடியில் உட்கார்ந்து எந்தவொரு நினைவு மில்லாமல் மகரிஷியையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வப்பொழுது யாராவது ஒருவர் கேள்விகள் கேட்பார். மகரிஷி உடனே கேள்வி கேட்டவரைப் பார்ப்பார். அந்தப் பார்வையே அக்கேள்விக்குப் பதிலளித்து விடுவதுபோல் தோன்றும். அல்லது சம்ஸ்கிருத ஸ்லோகத்திற்கோ, தமிழ்க் கவிதை ஒன்றிற்கோ யாராவது பொருள் கேட்பார். மகரிஷி மெல்லிய குரலில், சுருக்கமாக அதற்குப் பொருள் கூறுவார்.
மகரிஷி என்றுமே வார்த்தைகளை அளந்துதான் பேசுவார். நீண்ட நாட்கள் மக்களில் இருந்து விலகி வாழ்ந்ததால் அவருடைய பேச்சு என்றும் சுருக்கமாகவே இருக்கும். தமிழிலுள்ள தேவாரம், திருவாசகம் போன்ற பக்திப் பாடல்களில் அவருக்கு நன்கு பரிச்சயம் இருந்தது. தமிழில் அவர் பல பாடல்களை எழுதியிருந்தார். அவருடைய ஞானம் உள்ளேயிருந்த ஒரு விளக்குபோல் அவர் உடலில் எங்கும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மற்றவர்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்பு பார்வையாலும் மௌனத்தினாலுமே! அவர் மிகச் சாதாரண மனிதராக இருந்தார். மற்றவர்களுடன் வேடிக்கையாகப் பேசி, தமாஷ் செய்து இருந்தாலும் திடீரென்று தன்னுள்ளே ஆழ்ந்து அந்த அமைதியில் அமர்ந்து விடுவதும் உண்டு. அவரே கடவுளாக இருந்ததனால் தன்னிலையிலேயே எப்போதும் அமர்ந்திருப்பார்.
ஒருநாள் மதியம் யாரோ ஒருவர் சில செய்யுட்களை மகரிஷிக்குக் காண்பித்தனர். மகரிஷி அதைப் படித்துவிட்டு அதைப்பற்றிச் சிறிது விளக்கினார். அதை மேலும் விவரிக்க, யோக வாசிஷ்டத்திலிருந்து ஒரு கதையைக் கூறினார். அவர் கூறுவதை நான் கேட்டேன். அதனுடைய பொருள் எனக்குப் புரியாமல் இருந்தபோதிலும், அவர் கூறியது எனக்குத் தெளிவாகப் புரிந்தமாதிரி உணர்ந்தேன். பலவருடங்கள் கழித்து யோக வாசிஷ்டத்தை நான் படிக்கும்பொழுது மகரிஷி எவ்வளவு தெளிவாகவும் எளிமையாகவும் அந்தக் கதையைக் கூறி நேரடியாகவே கதையின் மையத்திற்கு ஒரு அம்புபோல் சென்றார் என்று உணர்ந்தேன். கதையைக் கூறி முடித்தவுடன் அவர் மீண்டும் மௌனபாஷைக்குச் சென்று விட்டார். அவருடைய இந்த மௌனமே இருந்த அனைவரையும் ஸ்பரிசம் செய்து அவர்களைத் தன்பால் இழுத்தது எனக் கூறலாம். அது ஒரு அதிசயமான அனுபவமாக எனக்கு இருந்தது. மகரிஷிகளின் முன்னிலையில் பேச்சு என்பது பயனற்று இருந்தது. அவர் அருகாமையில் இருப்பதே எனக்கு முழுத் திருப்தியை அளித்தது.
அந்த வாரம் முழுவதும் ஆச்ரமத்திலேயே கழித்தோம். ஹாலில் அவருக்குமுன் உட்காருவதைத் தவிர நான் வேறு ஒன்றும் செய்யவில்லை. காலையில் ஆச்ரம பாடசாலை மாணவர்களின் வேதபாராயணத்தைக் கேட்டோம். நானும் என் தம்பியும் ஒவ்வொருநாள் காலையும் மகரிஷி மெதுவாக மலைமேல் சென்று வருவதை வேடிக்கைப் பார்த்தோம். இப்படி ஒருசமயம் இந்த மகான் சிரித்துக்கொண்டே என்னுடைய தம்பி கேமராவைச் சரிசெய்வதைப் பார்த்து போட்டோ எடுக்க உதவியாக இரண்டு நிமிடங்கள் நின்றார். முன்னெப்பொழுதும் நான் இத்தனை நாட்கள் எதுவும் பேசாமலோ, நிறைய நேரம் உட்கார்ந்தோ அல்லது மகரிஷியை ஏகாங்கிர சிந்தையோடு நினைத்துக் கொண்டோ, பார்த்துக் கொண்டோ இதற்குமுன் இருந்தது கிடையாது. மாலையில் நாங்கள் ஆச்ரமத்தை விட்டு விடைபெறும்முன் என்னுடைய தம்பியும் நானும் மீண்டும் மீண்டும் மகரிஷியைத் தரிசித்து வரச் சென்றோம். ஒரே ஒரு தடவை என்று கூறி பலதடவை சென்று பார்த்தோம். அப்பொழுது அவர் ஹாலுக்கு வெளியே உள்ள வராந்தாவில் எண்ணெய் தடவிக் கொண்டிருந்தார். இறுதியில் நம்மை மீண்டும் ஒருதடவை பார்த்தவுடன்தான் இங்கிருந்து போவோம் என்று கூறி அங்கே சென்றேன். ஒரு நிமிடம் கழித்து மகரிஷி அவருடைய முகத்தை எங்களை நோக்கித் நோக்கினார். ஏதும் கூறாமல் திரும்பிச் சென்றோம்.
இந்தத் தரிசனத்திற்குப் பிறகு என்னுடைய வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது என்று நான் கூறமாட்டேன். நான் பள்ளிக்குச் சென்றேன். பிறகு கல்லூரிக்குச் சென்றேன். திருமணம் செய்து கொண்டேன். இல்லற வாழ்வைத் தொடங்கினேன். குழந்தைகள் பெற்றுக் கொண்டேன். பத்திரிகை உலகத்தில் எனக்கென்று ஒரு உத்தியோகத்தைத் தேடிக் கொண்டேன். என்னுடைய இல்லற வாழ்வே எனக்கு முக்கிய வேலையாக இருந்தது. ஆனால் ரமணாச்ரமத்திற்குச் சென்று வந்தது என் உள்ளத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அது என் மனத்திலும் இதயத்திலும் ஒரு வடுவை உண்டாக்கி விட்டது. நாடக மேடையின் பின்னணியாக இருக்கும் திரை போல், ஆச்ரமமும் மகரிஷியும் என்னுள்ளத்தில் என்றும் பின்னணியாக நிலைத்திருந்தது.
எப்பொழுதெல்லாம் நான் தளர்வடைந்து, செய்வதற்கு ஒன்றும் தோன்றாமல் மனத்தில் ஒரு ஆயாசம் தோன்றுகின்றதோ, அப்பொழுதெல்லாம் தீராத பசிபோல் ஆச்ரமத்திற்குச் செல்லவேண்டும் என்ற உணர்வு என்னைக் கவ்வும். நான் எங்கே போகிறேன், வருகிறேன் என்று நினைக்கக்கூட நேரமில்லாமல் நான் மிகவும் பரபரப்பாக இருக்கும் சமயத்தில்கூட சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் மகரிஷியின்ப டத்தை திடீரென்று நோக்கினால் என்னை அந்தப் பார்வை அதே நிலையில் குத்திட்டு நிற்க வைத்து விடும். என்னுடைய மனதும் திடீரென்று வெறுமையாகி விடும். மகா நிர்வாணத்திற்கு இரண்டு வாரங்களுக்குமுன் ரமணாச்ரமத்திற்குச் சென்றேன். ஒரு பெரிய கூட்டம் அப்பொழுது ஆச்ரமத்தில் திரண்டிருந்ததனால், வெளியே வராந்தாவில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் மகரிஷியைச் சிறிது நேரம் தரிசிக்க ஆச்ரம நிர்வாகம் தனியாக ஏற்பாடு செய்திருந்தது. அவர் இருந்த சிறிய அறையின் வெளியே, வராந்தாவில் அமர்ந்திருந்த அவரை கீழேயிருந்து அந்தக் கருணை வழியும் முகத்தை நோக்கினேன். அவருடைய கண்கள் பிரகாசமா கவும் நிச்சலமாகவும் இருந்தன. அப்பொழுதுதான் கடைசியாகத் மகரிஷியின் திருமேனியை தரிசிக்கின்றேன் என்று உணர்ந்தேன்.
நான் சில வருடங்கள் கழித்து மீண்டும் ஆச்ரமத்திற்குச் சென்றேன். வழக்கப்படி ஆச்ரம கேட்டுக்குள் நுழைந்தவுடன் அங்கிருந்த அமைதி என்னைத் தழுவி என் மனதை எல்லா நினைவுகளிலிருந்தும் விடுவித்தது. அங்கே மகரிஷி உட்கார்ந்த ஹாலுக்கு வெளியே உட்கார்ந்தேன். ஒரு பக்கம் திரும்பினால் மலையும், மறுபக்கம் அவருடைய சமாதியும் தெரிந்தன. என்னுடைய மனத்தில் மகரிஷி அவருடைய சோபாவில் இருக்கும் காட்சி தெரிந்தது. அங்கே ஒருநாள் முழுவதும் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருந்தேன்.
படிக்காமல், எழுதாமல், சாப்பிடாமல், எதையும் எண்ணாமல் ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறது என்றுகூட உணராமல் இருந்தேன். திடீரென்று ஒரு பையன், ‘நேரு காலமாகி விட்டார்’ என்று கூறிக்கொண்டே வந்ததும் எனக்கு ஒரு தற்காலிக சத்தமாகவே இருந்தது. அங்கே இருக்கும் பொழுதெல்லாம் உலகத்தில் வேறெங்கும் இல்லாமல் எதையும் செய்யாமல் இங்கேயே இருக்க வேண்டும் என்று தோன்றியது.
எப்பொழுதெல்லாம் என்னுடைய வீட்டிலிருந்து, குடும்பத்திலிருந்து, நண்பர்களிடமிருந்து, புத்தகங்களி லிருந்து, என்னுடைய தவறுகளிலிருந்து, அச்சத்திலிருந்து, சோகத்திலிருந்து உலகத்தில் வேறெங்காவது செல்ல வேண்டும் என்ற வெறி வந்தால் என்னுடைய மனது உடனே தன்னிச்சையாகவே ரமணாச்ரமத்தை நோக்கிச் சென்று விடுகிறது. என்னுடைய உடலும் மனதைத் தொடர்ந்து ரமணாச்ரமத்திற்குச் சென்றுவிடும். திருவண்ணாமலைக்குச் சென்று ஆச்ரமத்திற்குள் நுழைந்து ஹாலுக்குள் சென்றால் எனக்கென்று உரிய வீட்டிற்கே வந்து விடுவேன். மனதும் முழு அமைதியாகி விடும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குருதான் இருப்பார். ஒரு தாயைப்போல! சிலருக்குத் தங்கள் குருவைச் சந்திப்பதற்கு பாக்கியம் கிட்டும். சிலருக்குத் தற்காலிகமாகக் கிடைப்பார். ஆனால் நானோ 12 வயதில் தற்செயலாக என் குருவைச் சந்தித்தேன். நான் இப்பொழுது தனியாக என்னுள்ளேயே இருக்கின்றேன். அதாவது 12 முடிந்து 13 வயதை எட்டியிருக்கிறேன். இதெல்லாம் மீண்டும் நடக்கிறது. மற்றொரு வாயிற்படியில் என் மனம் நுழைந்து அங்கே நடந்ததை நினைத்துக் கொண்டிருக்கிறது. எதற்கோ காத்துக் கொண்டிருக்கிறேன்.
