எஸ்ஸார்சி கவிதைகள்

19/9/24
இணையக்கவியரங்கில்
வாசித்த கவிதை

வந்தே மாதரம்

எத்தனைக் கீழ்மை
என் தாய் நாட்டிலே
உயிர்காக்கும் மருத்துவரைக்கற்பழித்து
சீரழித்துக் கொன்று போட்டிருக்கிறார்கள்
மமதாவும் உண்டு
மாகாளியும் உண்டு
அதே வங்கத்தில்தான்.
இந்திய விடுதலையின்
மூச்சுக்காற்று வந்தேமாதரம்
வழங்கிய பங்கிம் சந்திரர்
வாழ்ந்த மண்
ராமகிரு‌ஷ்ண விவேகாநந்தரும்
தாகூரும் நேதாஜியும்
நிவேதிதாவும் சாரதாதேவியும்
வழிகாட்டிய தேசம் இது
உயிர்காக்கும் மருத்துவக்கல்லூரி வளாகத்தில்
பெண் மருத்துவருக்கு அரங்கேறிய அவலத்துக்கு
நாம் வதியும் பூவுலகை
எரித்தும் நியாயம் கேட்கலாம்
புறப்படட்டும் ஓர் புதுமைப்பெண்.

தேசிய மாணவர் படை

நடந்தே முடிந்தது கிருஷ்ணகிரியில்
தேசிய மாணவர் படை
முகாம் என்னும் போலி நிகழ்வில்
இளம் பிஞ்சுகள் எத்தனையோ பேரை
சீரழித்து முடித்திருக்கிறார்கள் .
நாமறிவோம் என் சி சி
இராணுவத்திற்கு இணையானது
கருகிப்போனதுவே
கட்டுப்பாடும் ஒழுக்கமும்
என்ன விளக்கம் கொடுத்தால் என்ன
ஒவ்வொரு மாணவிக்கும்
நிகழ்ந்த சோகத்திற்கு
இத்தேசமே மண்டியிட்டு மடியட்டும்
தனியொரு மனிதனுக்குணவிலை எனில்
ஜகத்தினை அழித்திடுவோம் சொன்ன பாரதியே
ஏதுமறியாப் பிஞ்சுப் பெண்களை பொசுக்கிச் சுகம் கண்ட
வக்கிரங்களை என்ன செய்யலாம் சொல்.