
(பகுதி 2: நிறைவுப் பகுதி)
*கலாட்சேத்ரா அரங்கில் காற்றினிலே வரும் கீதம் இயலிசை நாடக முத்தமிழ்ப் படைப்பு நடந்துமுடிந்து, சிறிது காலம் சென்றது.
கெளரி ராம்நாராயண் கல்கியின் சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் புத்தகமாக்கினார். (தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதக் கூடிய வல்லமை சகோதரி கெளரிக்கும் அவரது கணவர் ராம்நாராயணுக்கும் உண்டு.)
பென்குவின் பதிப்பகம் கல்கி சிறுகதைகள் என்ற அந்த ஆங்கில நூலை வெளியிட்டது. அதற்கு ஒரு வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசினார் என் அபிமான பேச்சாளர் சோ.
வெளியீட்டு விழாவுக்கு நான் பார்வையாளனாகச் சென்றிருந்தேன். என் நெடுநாள் நண்பரான எழுத்தாளர் பிரபுசங்கரும் நானும் அருகருகே அமர்ந்து கூட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தோம். முன்வரிசையில் எம்.எஸ். அமர்ந்திருந்தார்.
கூட்டம் நிறைவடைந்ததும் நானும் பிரபுசங்கரும் புறப்பட்டோம். அப்போது காரில் ஏறுவதற்காகக் கார் அருகே சென்ற எம்.எஸ். திடீரென்று கைதட்டிக் கூப்பிட்டார்.
அவர் யாரைக் கூப்பிடுகிறார் என நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். பிரபுசங்கர் உங்களைத்தான் கூப்பிடுகிறார்! என்றார் என்னிடம். நான் ஓடோடிப் போய் எம்.எஸ். அருகில் நின்றேன்.
அப்போது என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் அவர். அந்தக் கேள்வியை அவர் கேட்டதிலிருந்து அவரை நான் என் தாயாராகவே வரித்துக் கொண்டேன்.
காரணம் அதுபோன்ற கேள்விகளை ஒரு தாயார்தான் தன் மகனிடம் கேட்க முடியும். அத்தகைய கேள்விகளை என் தாயார் என்னிடம் கேட்டிருக்கிறார்.
எம்.எஸ். கேட்ட கேள்வி…
*நான் அவ்வப்போது தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் வழங்குவதுண்டு. திருப்பூரிலிருந்த என் தாயார் என் நிகழ்ச்சிகளைப் பார்த்தால் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிகழ்ச்சியை விமரிசிப்பார்.
தேர்ந்த இலக்கிய ரசிகையான என் தாயார் கூர்மையான விமர்சகரும் கூட.
தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, ஜெயகாந்தன், அசோகமித்திரன், வல்லிக்கண்ணன், தி.க.சி, இந்திரா பார்த்தசாரதி போன்றோரிடமெல்லாம் அவர்களின் படைப்புகளைப் பற்றி என் தாயார் நேரிலும் தொலைபேசியிலும் பேசியிருக்கிறார்.
ஒருமுறை என் நிகழ்ச்சி ஒன்று ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் இடம்பெற்றது. வழக்கம்போல் என் தாயார் என்னிடம் தொலைபேசியில் பேசினார். உன் நிகழ்ச்சியைப் பார்த்தேன்! என்றார்.
அடுத்து அவர் விமரிசனம் என்னவாக இருக்கும் என்றறிய மெளனம் காத்தேன். எதிர்த் திசையிலும் சற்று நேரம் மெளனம். பிறகு என் தாயார் கேட்டார்:அதுசரி. நீ போட்டுக்கொண்டிருந்த புதுச் செருப்பு நன்றாக இருந்தது. அதை எப்போது வாங்கினாய்?
நான் அந்தக் கேள்வியைக் கேட்டு அசந்துபோனேன். என் அம்மாவின் கூர்மையான பார்வை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது மட்டுமல்ல. ஓர் உண்மை அன்று புரிந்தது எனக்கு.
ஒரு தாயாருக்குத்தான் தன் மகனின் உடல் நலத்தில், உடையில், தோற்றத்தில் எல்லாம் எப்போதும் அதிக அக்கறை இருக்கும். மற்ற யாருக்கும் அவற்றிலெல்லாம் அவ்வளவு அக்கறை இராது.டி.வி.யில் உன்னைப் பார்த்தேன். கொஞ்சம் வாட்டம் தெரிகிறது. ராத்திரி நாள்தோறும் ஹார்லிக்ஸ் சாப்பிடு! என்று சொல்ல என் தாயார் இப்போது இல்லை….
*எம்.எஸ். என்னைக் கைதட்டி அழைத்து என்னிடம் கேட்ட கேள்வி என் தாயாரை ஞாபகப் படுத்தியது எனக்கு.திரும்பவும் தாடி வைத்துக் கொண்டு வீட்டீர்களா? என்று கேட்டார் அவர்!ஆமாம் அம்மா. கல்கியாக நடிப்பதற்காகத்தான் தாடியை எடுத்தேன். மற்றபடி எப்போதும் எனக்குத் தாடி உண்டே? என்றேன்.தாடி உங்களுக்குப் பொருத்தமாகத் தான் இருக்கிறது! என்ற அவர் பாசத்தோடு என்னை ஒரு பார்வை பார்த்து, போய்வருகிறேன்! என்று கூறி விடைபெற்றார்.
அவர் என்மேல் செலுத்திய அக்கறையைக் கண்டு என் நெஞ்சம் நெகிழ்ச்சியில் நிறைந்தது.
அவரை ஏன் எம்.எஸ். அம்மா என ஏராளமான பேர், அவர் பெயரோடு அம்மாவைச் சேர்த்துச் சொல்கிறார்கள் என்று அப்போது எனக்குப் புரிந்தது.
மக்கள் அனைவரையும் தாயன்போடு நேசித்தவர் அவர். அதனால்தான் இசையால் ஈட்டிய பெருந்தொகையை அப்படியே வாரிவாரித் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க அவரால் முடிந்திருக்கிறது….
*கொஞ்ச காலம் கழித்து கல்கி குடும்பத்திலிருந்து எனக்கு ஒரு தகவல் வந்தது. கல்கியின் மனைவி திருமதி ருக்மிணி அவர்கள் காலமாகி விட்டார்.
என் மனம் துயரத்தில் ஆழ்ந்தது. அவரிடம் நான் சிலமுறை தனிப்பட்ட முறையில் உரையாடி மகிழ்ந்திருக்கிறேன்.
பல கம்பராமாயணப் பாடல்களைக் கடகடவென்று சொல்வார் அவர். அன்புததும்ப உரையாடுவார்.
அவர் கோலம் வரைவதில் நிபுணர். கெளரி ராம்நாராயண் அவரது கோல ஆற்றலை விவரித்து ஓர் ஆங்கில நூல் எழுதியிருக்கிறார். பாட்டியின் கோலங்கள் என்பது தலைப்பு. (Grand maas kolams) பேனாவும் கையுமாக எப்போதும் எழுத்தே துணையாக எழுதித் தள்ளியவர் கல்கி. அவருக்கு குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்துக் கொண்ட ஒரு மனைவி கிடைத்திராவிட்டால் அவர் இத்தனை இலக்கியங்களைப் படைத்திருக்க வாய்ப்பேது? நான் கல்கியின் மனைவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரைந்தேன். அவரது புதல்வர் கி. ராஜேந்திரன் அவர்களின் முகம் துக்கத்தில் வாடியிருந்தது. தாயாரை இழக்கும் சோகம் தாங்க இயலாதது. நான் எல்லாச் சடங்குகளும் முடியும்வரை அங்கேயே இருந்து ருக்மிணி அம்மாவை இறுதியாக வழியனுப்பி விட்டுத் துயரத்தோடு வீடு வந்தேன். பிறகு கல்கி குடும்பத்தாரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. கல்கியின் மனைவி இறந்ததை ஒட்டி பதிமூன்றாம் நாள் சுபம் நடக்கிறது என்றும் நான் விருந்துக்கு வரவேண்டும் என்றும் அழைத்தார்கள். சுபம் நடக்கும் இடத்தையும் தெரிவித்தார்கள். நான் குறிப்பிட்ட நாளன்று அங்கு போனபோது மிகச் சரியாக நண்பர் ராம்நாராயண் நான் போன நேரத்தில் அங்கு வந்துசேர்ந்தார்.இருவரும் சேர்ந்து சாப்பிடுவோம், வாருங்கள்!என அழைத்துப் போனார். பக்கம் பக்கமாக அமர்ந்து பல விஷயங்களைப் பேசியவாறே நாங்கள் சாப்பிட்டு முடித்தோம். அவர் என்னிடம் விடைபெற்றுப் புறப்பட்டுப் போனார். நானும் புறப்பட்டேன். அப்போதுதான் எம்.எஸ். அம்மா உள்ளே நுழைந்தார். என்னைப் பார்த்ததும்,வாருங்கள். சேர்ந்து சாப்பிடுவோம்!என்றார். நான் அப்போதுதான் ராம்நாராயண் அவர்களுடன் சாப்பிட்டேன் என்றேன். அப்படியா?என்று தன் தெய்வீகப் புன்னகையை உதிர்த்த அவர்,அதனால் என்ன? உங்களுடன் கொஞ்ச நேரம் சேர்ந்து இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நான் சாப்பிடும்போது என் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளுங்களேன்!என்றார். எவ்வளவு அன்பு! என்ன எளிமை! நான் அவர் சாப்பிட்டு முடியும்வரை அவர் அருகே அமர்ந்திருந்தேன். என்னிடம் நடுநடுவே பேசியவாறே சாப்பிட்டு முடித்தார். பிறகு கைகழுவிக் கொண்டு புறப்பட்டார். நான் வாசல்வரை சென்று வழியனுப்பினேன். உங்களுடன் பேசிக்கொண்டே சாப்பிட்டது திருப்தியாக இருந்தது!என்று சொன்ன அவர், போய்வரட்டுமா என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார். குளுகுளுவென்று ஒரு தென்றல் வீசிவிட்டுப் போன மாதிரி இருந்தது எனக்கு. *நான் பொதிகைத் தொலைக்காட்சியில்காலைத் தென்றல்என்ற நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்குபெற்று வந்த காலம் அது. நான் பங்குகொண்ட பகுதிசெய்தி விமர்சனம்என்ற பகுதி. நேரடி ஒளிபரப்பு. காலை ஆறரை மணிக்கெல்லாம் நிலையத்திற்குச் சென்றுவிட வேண்டும். ஏழு மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகும். இருபது நிமிடங்கள் செய்தி விமர்சனப் பகுதி. ஒருவர் அன்றைய முக்கியமான செய்திகளைக் குறித்து என் கருத்துகளைக் கேட்பார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டும். காலை ஏழுமணி நேரலை நிகழ்ச்சி என்பதால் ஒத்திகை பார்த்துக் கொள்வதற்கெல்லாம் நேரமிருக்காது. கேள்வி கேட்பவர் என்னென்ன கேள்விகளோடு வருவார் என்று தெரியாது. என்றாலும் ஓர் ஊகத்தின் பேரில் முக்கியச் செய்திகள் எவை என்று பார்த்துக் கொண்டு போனால் பதில் சொல்லிவிடலாம். முந்தின நாள் இரவும் அன்று அதிகாலையிலும் அவசர அவசரமாகச் செய்திகளை இணையத்திலும் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் பார்த்துக் கொண்டு போவேன். அன்றும் அப்படிப் பார்த்துக் கொண்டு அவசரமாகப் புறப்பட்டு பொதிகை நிலையத்திற்குச் சென்றேன். அப்போது ஒளிப்பதிவுக் கருவிகளோடு சிலர் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து காரில் எங்கோ புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆறரை மணிதான் ஆகியிருந்தது அப்போது. இந்தக் காலை வேளையில் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டேன். இப்போதுதான் செய்தி வந்தது. எம்.எஸ். அம்மா காலமாகி விட்டார்கள். அங்குதான் விரைந்து கொண்டிருக்கிறோம்!என்றார்கள். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மனம் அளவற்ற துயரத்தில் ஆழ்ந்தது. தொலைக்காட்சி செய்திப் பிரிவுக்குச் சென்று அவர் எப்போது காலமானார் என்பது உள்ளிட்ட சில விவரங்களைத் தெரிந்துகொண்டு ஸ்டூடியோவுக்குச் சென்றேன். என்னைக் கேள்வி கேட்பவர் கேள்விகளோடு தயாராக வந்திருந்தார். அவரிடம் எம்.எஸ். காலமான செய்தியைச் சொன்னேன். அவருக்கு அதிர்ச்சி. இன்னும் செய்தி பரவலாகத் தெரியவரவில்லை. நீங்கள் எம்.எஸ். காலமானதை ஒட்டிய கேள்வியை முதல் கேள்வியாகக் கேளுங்கள்என அவரிடம் கேட்டுக் கொண்டேன். அந்த முதல் கேள்வியோடு அன்றையகாலைத் தென்றல்நிகழ்ச்சி தொடங்கியது. எம்.எஸ்.ஸின் இசைப் பெருமை, வள்ளல் தன்மை, அவர் கட்டிய ஒரு புடைவையின் நிறம் காரணமாக அந்த நிறத்திற்கு எம்.எஸ் ப்ளூ என்றே பெயர் வந்தது, அவர் மீராவாக நடித்தது உள்ளிட்ட சில விஷயங்களைச் சுருக்கமாகச் சொன்னேன். அவற்றைச் சொல்லி முடித்தபோது இயல்பாக என் கைகள் எம்.எஸ். அம்மாவைக் கும்பிடும் வகையில் குவிந்தன. என் குரலின் நெகிழ்ச்சியையும் கண்களில் தென்பட்ட கண்ணீரின் பளபளப்பையும் நேயர்கள் கவனித்திருப்பார்கள். ஒருவர் அதைக் கூர்மையாகக் கவனித்திருந்தார். எப்போதும் மிக மென்மையாகவும் பரிவோடும் பேசுபவர் அவர். மறுநாள் அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். எம்.எஸ். அம்மா உங்கள் மேல் செலுத்திய அன்பின் அடையாளமாகத் தான் உங்களுக்கு ஒரு பெருமை தானாய்க் கிடைத்திருக்கிறது. எம்.எஸ். அம்மாவுக்கு அவர் காலமானபின் நடந்த முதல் அஞ்சலி நிகழ்ச்சி பொதிகைத் தொலைக்காட்சியில் நீங்கள் வழங்கிய நிகழ்ச்சிதான்.
அப்போது உங்கள் கைகள் தானாக இணைந்து வணங்கியதைக் கண்டு நான் கண்களைத் துடைத்துக் கொண்டேன்!என்று சொன்னவர் எம்.எஸ். அவர்களின் புதல்வர் என்றே கருதத்தகும் திரு ஆத்மநாதன் அவர்கள்..... *பொதிகை நிகழ்ச்சி முடிந்தவுடன் நான் அவசரமாகப் புறப்பட்டு என் வீடு வந்துசேர்ந்தேன். என் மனைவியிடம் எம்.எஸ். காலமான செய்தியைச் சொன்னேன். அவள் அதிர்ச்சியோடு நாற்காலியில் தொப்பென அமர்ந்தாள். உடனே நாம் இறுதி அஞ்சலி செலுத்தப் புறப்பட வேண்டும்!என்றேன்.நான் இப்போதுதான் குளித்தேன். வந்து இன்னொருமுறை குளித்துக் கொள்ளலாம். வாருங்கள் புறப்படுவோம்என்றாள் என் மனைவி. நாங்கள் ஓர் ஆட்டோ பிடித்து எம்.எஸ். வீட்டுக்கு விரைந்தோம். இன்னும் பரவலாகச் செய்தி போய்ச் சேராததால் யாரும் அங்கே வந்துசேரவில்லை. உயரமாக ஒரே ஒரு பெண்மணி மட்டும் எம்.எஸ். உடலையே பார்த்தவாறு சோகத்தோடு அமைதியாய் நின்றிருந்தார். அவர் உலகம் அறிந்த பெண்மணி. நான் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என் மனைவியையும் அறிமுகப் படுத்தினேன். என் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டுஇப்படி நம்மையெல்லாம் விட்டுவிட்டுப் போய்விட்டாரே!எனக் கண்கலங்கினார் அவர். கடவுள் தனக்கு மிகவும் பிடித்தவரை அழைத்துக் கொண்டுவிட்டார்என்று என் மனைவி அவரை சமாதானப் படுத்தினாள். அங்கே சோகத்தோடு நின்றிருந்த அந்தப் பெண்மணி திருமதி வைஜயந்திமாலா. பிறகு வரத் தொடங்கியது கூட்டம். எங்கிருந்தெல்லாமோ மக்கள் வெள்ளம் வந்து குழுமியது. வரிசை வரிசையாக கூப்பிய கைகளுடன் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்கள் பற்பலர். எல்லோரும் பூக்காரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், வீட்டுவேலை செய்பவர்கள் போன்ற ஏழை எளிய மக்கள். தங்களைப் பார்த்த போதெல்லாம் ஐம்பதும் நூறுமாக எம்.எஸ். அள்ளிக் கொடுத்ததையும் தங்கள் வீட்டுப் பெண்களின் திருமணங்களுக்கு அவர் உதவியதையும் எல்லாம் அவர்கள் சொல்லிச் சொல்லிப் புலம்பினார்கள். கலையுலக, எழுத்துலக, அரசியல் உலகப் பிரமுகர்கள் ஒருவர் பாக்கியில்லாமல் அஞ்சலி செலுத்திச் சென்றார்கள். பி. சுசீலா கண்ணீர் பெருக நின்றுவிட்டுச் சென்றார்.காற்று நின்றாலும் கீதம் என்றென்றும் இருக்கும்!என்று கலைஞர் கருணாநிதி இரங்கல் செய்தி வெளியிட்டார். எம்.எஸ். காலமான பதிமூன்றாம் நாள் அவருக்குச் சுபம் நடைபெற்றது. அந்த விருந்திலும் நான் கலந்துகொண்டேன். நீங்கள் சாப்பிட்டுவிட்டால் என்ன, நான் சாப்பிட்டு முடியும்வரை என் அருகே உட்கார்ந்திருங்களேன்என்று என்னிடம் சொல்ல எம்.எஸ். தான் இல்லை..... *காலம் ஓடியது. இந்திய அரசு பாரதத்தின் ரத்தினமானபாரத ரத்னா` எம்.எஸ். சுப்புலட்சுமி நினைவாக 2005ஆம் ஆண்டு ஓர் அஞ்சல் தலை வெளியிட்டது.
இப்போதும் எம்.எஸ். பேசப்படுகிறார். எம்.எஸ். பாடிய பாட்டைக் கேட்க வந்த கூட்டத்தைப் போலவே எம்.எஸ். பற்றிய பேச்சைக் கேட்கவும் கூட்டம் அலைமோதுகிறது.
ஹம்சத்வனி அமைப்பின் நிறுவனர் ராமச்சந்திரன் அழைத்ததன் பேரில், சென்னை இந்திரா நகர் இளைஞர் விடுதியில் நான் ஒருமுறை எம்.எஸ். குறித்துப் பேசினேன்.
இப்போதும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் எம்.எஸ். அம்மா பற்றிய என் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன். இதோ இந்தக் கட்டுரையாகவும் பதிவு செய்திருக்கிறேன்.
மகாசுவாமிகளாலும் மகாத்மாவாலும் நேருவாலும் சரோஜினி நாயுடுவாலும் மதிக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற இசையரசியின் பாசம் எனக்குத் தனிப்பட்ட முறையில் கிட்டியது என்பது இறைவன் எனக்கு வழங்கிய பேறு.
அவரை நினைக்கும் போதெல்லாம் அவரின் தெய்வீகமான முகம் மனத்தில் தோன்றுகிறது.
பொருட்பற்றில்லாமல் வாழ்ந்து, தன் வாழ்க்கையைப் பொருளுடையதாக ஆக்கி மறைந்த அவரின் நினைவுகளால் மனம் தூய்மையடைகிறது.
…………………………………………
