
மோகன் லால்ஜி
கோரக்பூர், கல்யாண் பத்திரிகையைச் சேர்ந்த ஸ்ரீமோகன்லால்ஜீ நமது சாஸ்திரங்களை நன்கு ஆராய்ந்தவர். ஒரு சமயம் அவருடைய குழந்தையொன்று காலமாகிவிட்டது. அதை அடக்கம் செய்துவிட்டுத் திரும்பிய அவருடைய நண்பர்களும் உறவினர்களும் அவர் மிகுந்த துக்கத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் அவரை எவ்வளவோ தேற்றியும், அவர் துக்கம் தாளாமல் அழுதுகொண்டே இருந்தார்.
இதைக் கண்ட அந்த நண்பர்கள், “தாங்கள் எவ்வளவோ படித்தவர். சரீரம் அழியக்கூடியது, அதைக் கண்டு வருத்தப்படக்கூடாது என்று எங்களுக்கு உபதேசம் செய்தவர். அப்படியிருக்க, தாங்களே அழுதால் தங்கள் உபதேசத்தை நாங்கள் எப்படிப் பின்பற்றுவது?” என்று கேட்டார்கள்.
அதற்கு ஸ்ரீமோகன்லால்ஜி சொன்னார். “நீங்கள் எல்லாரும் குழந்தை போனதைப் பற்றி அழுவதைப் பார்க்கும்போதுதான் எனக்கும் அழுகை வருகிறது. ஆகவே எனக்கெதிரில் அழுவதில்லையென்று சொல்லுங்கள், நானும் அழவில்லை’ என்று சொன்னார்.
சரியென்று அவர்கள் தங்கள் அழுகையை நிறுத்தினார்கள். இவரும் தாம் அழுவதை நிறுத்தினார்.
அதே கல்யாண் பத்திரிகையில் தொண்டாற்றிக் கொண்டிருந்த ஸ்ரீசுவாமி அகண்டாநதஜீ அவர்கள், அடுத்த நாளே ஸ்ரீ மோகன்லால்ஜீ அவர்களைத் தனியாக சந்தித்து “உண்மையிலேயே குழந்தையைப் பிரிந்தது உங்களுக்கு அத்தனை துக்கத்தை அளித்ததா?” என்று கேட்டார்.
அதற்கு ஸ்ரீ மோகன்லால்ஜீ, “நான் மிகவும் துக்கத்தில் இருப்பது போல நடித்தேன். நான் துக்கத்தைக் காண்பிக்காவிட்டால், அவர்கள் எல்லோரும் அழுது கொண்டேயிருப்பார்கள். அவர்களை சமாதானப்படுத்துவதே என் வேலையாகி விடும். நான் அழ ஆரம்பித்து விட்டதால், அவர்கள் என்னைச் சமாதானப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். நான் அவர்களை, நீங்களும் அழாதீர்கள் நானும் அழவில்லை என்று சொல்ல முடிந்தது” என்று சொன்னார்.
