கொனஷ்டை/வசீகரணம்

சென்னை பீபிள்ஸ் பார்க்கில் எனது சீமாட்டியின் நந்தவனம் என்று பெயரிட்டு ஒரு குளிர்ந்த சோலையை அதிகாரிகள் சிருஷ்டித்திருக்கிறார்கள். வெயிலின் தாபத்தினின்று தப்பித்துக்கொள்ள அது சரியான புகலிடம். அங்கே ஒரு நாள் உட்கார்ந்து பகற்கனவு
கண்டுகொண்டிருந்தேன்.
“நீங்கள் யார் ஐயா?” என்று ஒரு குரல் இரண்டு மூன்று தடவை கேட்கவே, சொப்பனத்திலிருந்து விழித்தேன். அச் சமயம் என் கண் எதிரில் தென்பட்டவருடைய தலை கிராப்பின் தினுசு, காதில் ஜ்வலிக்கும் லோலாக்கு, தேகம் முழுவதும் கசியும் ஒருவித கம்பீரம், இவற்றை நோக்கும்போது. அவர் மாதத்திற்கு எத்தனையோ ஆயிரம் ரூபாயாகக் காண்ட்ராக்ட் பெற்றதுடன், அநாமத்தாகக் கையில் வேறு கறுப்புப் பணம் மொத்தமாக வாங்கியிருக்கும் ஒரு சினிமா நக்ஷத்திரம் என்று ஸ்பஷ்டமாயிருந்தது.
இருந்தாலும், ‘இவர் எதற்காக என்னைக் கேள்வி கேட்கிறார்?’ என்று எண்ணி, சற்று அலட்சியமாகவே பதில் சொன்னேன். “நானா! என் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, எலெக்ட்ரிக் விசிறியைச் சுற்றவிட்டு, ரேடியோவைச் சுகமாகக் கேட்கும்போது நானே ஓர்
அரசன்-” என்றேன்.
“அது இருக்கட்டும், ஐயா! நீங்கதானே கொனஷ்டை?”
“ஆனால், பஸ்ஸில் ஏறப் போகும் சமயத்தில் கண்டக்டர் ஏறாதே! என்று அதட்டும்போது, நான் ஒரு கிருமி. கிருமி என்று சொல்லிவிட்டால் உயர்த்த கிருமியும் அல்ல என் கால் விரல்களின் தான் எம்பி நின்றால் மட்டுமே ஓர் எறும்பின் தோள் மட்டத்திற்கு எட்டக்கூடியவன்”
“இதெல்லாம் பார் ஐயா, ஒங்களே கேட்டாங்க? நீங்கதானே ‘மந்தர சக்தி’ என்று கதை எழுதினது? அந்தக் கதேலே சொல்றேன். காச்மீர் தேசத்தியுந்து ஒரு பொய்த்தகம் வந்ததாயும், அதிலேந்து வித விதமா மதாங்களெல்லாம் தெரிஞ்சுக்கலாம்னும் கண்டிருந்தது? “இருக்கலாம் ஆனால் இப்போது ஞாபகமில்லை. வாஸ்தவத்தைச் சொல்லிவிடுகிறேன் நான் கண்ட கதைகளையெல்லாம். வாசிக்கிறதயில்லை அப்படிப் படித்தாலும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுகிறதுமில்லை;”
“என்ன ஐயா? நீங்களே எளுதிய கதையைப் பத்திக் கேட்டா, படிக்கலே ஞாபகமில்லே. என்னெல்லாம் சொல்றீங்களே! ‘கொனஷ்டை’ என்கிற பேரு பொருத்தந்தான்னு காமிக்கிறீங்களா, என்ன”

மன்னிக்க வேண்டும். இம்மாதிரி ஒரு சம்பாஷணை நடந்ததென்று எண்ணுகிறீர்கள்? நடக்கவே இல்லை. பூமியில் எல்லாருக்குமே ஒரு வழக்கம் உண்டே, சரியான சமயம் தப்பிப் போன பிறகு ‘அடாடா. நாம் அப்போது அப்படிப் பேசியிருக்கலாமே, இப்படிச் சொல்லியிருக்கலாமே’ என்றெல்லாம் எண்ணி, அவ்விதம் செய்ததாகவே பிறரிடம் தெரிவித்துவிடுவது! அம்மாதிரியே, நானும் மறுநாள் சாவகாசமாய்க் கற்பித்த சரக்குத்தான் மேல் எழுதியது. ஆனால் பேச்சு நடந்தது அவ்விதமல்ல. பகற்கனவிலிருந்து விழிக்கும்போது எவருக்குமே புத்தி சுவாதீனம் பூர்ணமாயிருக்காது. தவிர, சினிமா நட்சத்திரங்களைக் கண்டால் எனக்கு அபார வியப்புடன் உள்ளுக்குள் சிறிது அச்சமும் உண்டு. ஆகையால், “நீங்க யார்?” என்று அவர் கேட்டதற்கு நான் சொன்ன பதில் எல்லாம் சுருக்கமாய், “ஊம்-ஆ-” என்பதே!
அதற்கு அவர், “நீங்கதானே கொனஷ்டை?” என்று குறிப்பாய்க் கேட்டுவிட்டார்.
குற்றத்தை ஒப்புக்கொள்ளுகிறதா? மறுத்துவிடலாமா? அக்கம்பக்கத்தில் சாட்சிகள்யாராவது இருக்கிறார்களோ, என்னவோ? இந்தத் தயக்கத்தில் மறுபடியும், “ஊம்-ஆ-” என்று மாத்திரமே என்னால் வெளிப்படுத்த முடிந்தது. ஆனால் அவர் அதற்கு மேல், “நீங்கதானே ‘மந்தர சக்தி’ என்று கதை எளுதினது?” என்று கேட்டார். போகட்டும், நம்முடைய கதையைப் படித்திருக்கிற சிறந்த ரஸிகர் இவர் என்கிற சந்தோஷத்தில் மூன்றாந் தடவை, “ஊளம்-ஆ” என்றே சொல்லி ஜயித்தேன்.
“அந்தக் கதேலே சொல்றேன். காச்மீர தேசத்திலேந்து ஒரு பொய்த்தகம் வந்ததாயும் அதிலேந்து விதம் விதமா மந்தரங்களெல்லாம் தெரிஞ்சுக்கலாம்னும் கண்டிருந்தது.”
மேற்கூறிய சந்தோஷத்தினால் என் உள்ளம் பூரித்தாலும், வெளிப்பட விநயமாகவே பேசவேண்டுமென்று ஒரே கவலை எனக்கு. ஆகையால் ‘ஞாபகமில்லை’ என்று என் விநயத்தைத்தான் தெரிவித்தேன். அதை அவர் தப்பாக அர்த்தம் செய்து கொண்டு, என் பெயர் பொருத்தமாயிருப்பதைச் சொல்லிக் காட்டினார்.
இவ்விதமே எங்களுடைய பரிச்சயம் ஆரம்பமாயிற்று. தொடக்கத்திலே நல்ல சகுனமாகவில்லை என்று சிலர் எண்ணலாம். அது சரியல்ல. பௌர்ணமியின் முதலில் ஏதோ பத்து நிமிஷ காலம் மப்பு போட்டால் என்ன? பிறகு ராத்திரி முழுவதும் வீசப்போகும் ஒளிக்குக் குறைவு ஏற்படுமா? என்று நான் எண்ணிக்கொண்டிருக்கும் பொழுதே, அவருடைய பெயர் சந்திரஹாஸர் என்றும், அவருடைய மனைவி பிரசித்தி பெற்ற சினிமா ராணியாகிய சந்திரப்பிரபை என்றும் அறிந்தேன். ஆகையால் நான் பௌர்ணமியை
உபமானத்திற்கு இழுத்தது எவ்விதத்திலும் நியாயந்தானே? அன்று நாங்கள் பிரிவதற்குள்ளே நல்ல சிநேகிதர்களானோம். மறுநாள் சாயங்காலம் அவருடைய வீட்டிற்கு நான் வருவதாக வாக்குத் தத்தம் வாங்கிக்கொண்ட பிறகே போனார்.
மறுநாள் பகற்கனவு ஒன்றும் காணாமல், முன்பாகவே என் மனசைத் தயார் செய்துகொண்டு போனதால், சந்திரப்பிரபையை நான் பார்த்த பொழுது அதிகமாய் “ஊம் ஆ-” கொட்டவில்லை. பேச்சின் மத்தியில், “உங்கள் இருவரையும் காணும் பொழுது அயோத்தியின் இளவரசருக்கும் மிதிலையின் ராஜகுமாரிக்கும் ஏற்பட்ட தாம்பத்யமே ஓர் ஈடாகத் தோன்றுகிறது” என்று நான் முன்னமே ஆலோசித்து நெட்டுருப் போட்டுக் கொண்டு போன ஸ்தோத்திரத்தை அச்சமயத்தில்தான் தோன்றின மாதிரியே
ஒப்பித்துவிட்டேன்.
“என்ன சொல்றீங்க?” என்று சந்திரஹாஸர் இழுத்தாற்போல் கேட்டார். ஆனால் சந்திரப்பிரபை தயங்கவில்லை. “ஆமாங்க. அயோத்தியின் ராசா ராமரு; சிதைக்கு ஊரு மிதிலை. அவங்க ரண்டு பேருக்குந்தானே கல்யாணம்? நாம்ப சீதா கல்யாணம்னு அவங்களைத்தான் ஐயா சொல்றாரு. அந்த ராசாக்களுக்குச் சமானமாயி நாம்ப இருக்கோம் என்கறாரு” என்று அவள் படம் போய்ப் பாத்தமே, அதிலேகூட ராமர் சீதைன்னு வராங்களே, உடனே சொல்லிவிட்டாள்! ஆகவே, தம்பதிகளுக்குள் இவளுக்குப் புத்திக்கூர்மை அதிகந்தான். ஆனால், காரிய ஞானத்திலும் சுவையுள்ள பேச்சின் விறுவிறுப்பிலும் இருவரும் சமம். நாம் படித்திருப்பதில் பத்தில் ஒரு பங்குகூட இவர்கள் படித்திருக்க மாட்டார்களே என்று நம்முடைய மனசில் ஓர் அகம்பாவம் எழும்பும் சமயத்திலே, அப்படியிருந்தும் நம்மைப்போல் பத்துப் பங்கு சம்பாதிக்கும் சாமர்த்தியம் உண்டே இவர்களுக்கு என்கிற ஞாபகமும் கிளம்பி அகம்பாவத்தைக் கண்டித்துவிடும். தவிர, இவர் இருவருக்கும் ஹிருதயம் பத்தரைமாற்றுத் தங்கம் என்று சொல்லுவது இச்சகத் துதியாகாது. ஆகையால் இவர்கள் சிநேகிதத்தினால் நான் ஆனந் தத்தையே அடைந்தேன்.
ஒரு நாள், சந்திரஹாஸர் வீட்டிலில்லாத சமயம் அவருடைய விசேஷ குணங்களைக் குறித்துச் சந்திரப் பிரபையிடம் பேசிக்கொண் டிருந்தேன். அதற்கு அவள், “அவங்க நல்லவங்க என்னு நீங்க என்ன வேணாலும் சொல்லுங்கோ. நான் ஒத்துக்கறேன். ஆனால் அவங்களுக்கு எப்பவும் குறும்புத்தனம் மாத்திரம் ஜாஸ்திதான். அவங்க செய்த குறும்புத்தனத்தாலேதான் எங்களுக்குக் கல்யாணங்கூட நடந்தது. ஆனா அது பெரிய ரகசியம்” என்று நிறுத்திக்கொண்டாள். அந்த ரகசியத்தை வெளியிட அவள் இஷ்டப்படுவது தெளிவா யிருந்தது. அவ்விதம் ஒரு ஸ்திரீ இஷ்டப்பட்ட பிறகு அதைப் யெல்லாம், அதைச் சொல்லவேண்டுமென்று அவளைப் பிரார்த்தித்து, பிரம்மாவாலும் தடுக்க முடியாது. ஒரு புருஷனுடைய கடமை அவ்விதம் அவள் இஷ்டப்படியே அவள் செய்வதற்கு ஒரு சாக்கைக் கொடுக்க வேண்டியதுதான். ஆகையால் என்னுடைய கடமையை நான் செலுத்தினேன். அவள் மேல் தொடர்ந்தாள்:
“நான் அதுக்கு முன்னேயே மூணு படங்களிலே ஆடியாச்சு. ‘சொர்க்க லோகச் சாம்பான்’ எனக்கு நாலாவது படம். ஆனா, அதுவரைக்கும் நான் இவங்களையும் பாத்ததில்லே, இவங்க மாதிரி ஒரு ‘ஹீரோ’ வையும் பாத்ததில்லே. அந்தப் படத்தில் இவங்க இந்திர வேசம் போட்டுக்கிட்டு, கையகலத்துக்குச் சரிகை வேட்டியும், அசல் தங்கக் கிலுட்டு கிரீடமுமாய் வந்தபோது பார்த்தேனோ இல்லையோ, என் மனசு உருகிப்போயிடுத்துங்கோ”
“உங்களைப் பார்த்தபோது அவருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்?
“நீங்க சும்மாச் சொல்லாதேயுங்கோ, மொவத் துதிக்காக….நாஅப்பவே மனசிலே பேசிக்கிட்டேன்: கண்ணம்மா, கண்ணம்மா, நீ இவங்களைக் கல்லாணம் பண்ணாதபோனா இத்தனை பணம் சம்பாதிச்சு என்னா? பேர் எடுத்து என்னா? உயிரோடு இருந்து தான் என்னா? இப்படியெல்லாம் தவிச்சேங்கோ..!
எது! நீங்கள் படத்தில் நடிப்பதற்கு ஒருத்தரும் வார்த்தைகள் கூட எழுதிக் கொடுக்க வேண்டாம் போல் இருக்கிறதே! எல்லாம் உங்களுக்குத் தெரிகிறதே!”
“நீங்க சும்மா சொல்லாதீங்கோ!”
“அதிருக்கட்டும், கண்ணம்மா என்பது உங்கள் தாயார் கொடுத்த பெயராயிருக்குமோ?”
“ம்ம்ம் எங்க பாட்டியார் இட்ட பேரு. அவங்க அவ்வையார் மாதிரி ரொம்ப கெட்டிக்காரிங்க, படித்தவங்க. எல்லாம் தெரியும் நான் அம்முட்டுப் பிள்ளையாயிருக்கையிலேயே எனக்கு ரவசியமாய்ச் சொல்லியிருக்காங்க, ‘கண்ணம்மா, நீ பெரிய மனுசியாயி ஒரு ஆம்பளெயேக் கல்லாணம் பண்ணிக்கணும்னு இருந்தா, இந்த மந்த்ரத்தைப் பண்ணு. தவறவே தவறாது. அந்த ஆம்பளெயின் வேட்டியிருக்கே அதிலேந்து எப்படிக்கானம் ஒரு துண்டைச் சம்பாதிச்சூடு. அதைக் கொளுத்திச் சாம்பலாக்கித் தேனை விட்டுக் கொளைச்சு, அவங்க பெயரைச் சொல்லிக்கிட்டே சாப்பிட்டுட்டா, ஒரு மாசத்துக்குள்ளே அவங்களோடு கல்லாணம் ஆயிடறதா இல்லையா பாரு’ என்னு சொன்னாங்க.”
“நல்ல மந்த்ரந்தான். ஆனால் சந்திரஹாஸரின் ஜரிகை வேஷ்டியிலிருந்து எப்படி ஒரு துண்டைக் கத்தரிப்பது?”
“அதுதானே கயிஷ்டம்? நானும் விதம் விதமா யோசனை செய்து பாத்தேங்கோ, ஒண்ணும் சாயலே. ஒரு நாள். கேளுங்கோ-இப்போ சொன்னேனே அவர்களுக்குக் குறும்பூன்னா ரொம்ப ஆசைன்னு. நான் ரம்பை வேசம் போட்டுக்கிட்டு, ஆடிக்கிட்டே இருக்கச்சே,
அவங்க லெபக்குன்னு என் கைக்குட்டையைப் பிடுங்கித் தன் சொக்காய்க்குள்ளே சொருகிக்கிட்டாங்க”
“அடாடா! அப்புறம் நீங்கள் என்ன செய்தீர்கள்?”
“என்ன செய்தேனா? சும்மாக் கூச்சல் போட்டேன். மொதல்லே அவங்களை நல்லா என்னோடு பேச வெச்சேன். அப்புறம் சமாதானமாப் போறதுக்கு ஒரு ப்ரஜண்டு மாதிரி, அவங்க சேப்டலை நீட்டிண்டிருந்த ஒரு சில்க் ஆங்கர்ச்சீபையும் வாங்கிட்டேன். எனக்கு வேண்டியது அவங்க துணியிலே ஏதாவது ஒண்ணுதானே?”
*மந்திரத்தைச் செய்தீர்களா?”
“கேக்கணமா? அன்னிக்கு ராத்திரியே, வீட்டுக்குப் போன ஒடனே, ஒரு தடவைக்கு மூணு தடவையா ‘சந்திரகாசா’ என்று அவங்க பேரைச் சொல்லி, சாம்பலைக் கொளைச்சுச் சாப்பிட்டுட்டேன். நம்பினா நம்புங்கோ, நம்பாட்டிப் போங்கோ, அன்னிலேந்து சரியாய் முப்பதா நாள் எங்களுக்குக் கல்லாண முகூர்த்தங்கோ!”
“நம்பாமல் என்ன? எப்படி அவரால் முப்பது நாள் தாங்க முடிந்தது என்றுதான் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவருடைய குறும்புத்தனத்திற்குச் சரியான தண்டனை அடைவதற்குப் பதிலாக இவ்விதம் உங்களை அடைந்தாரே, அதுதான் அதிருஷ்டம் என்பது.”
“நீங்க சும்மாசொல்லாதேங்கோ. இந்த மொவத் துதியெல்லாம் நான் நம்பவே மாட்டேன்!”
சுமார் ஒரு வாரம் சென்றிருக்கும். அன்று சந்திரஹாஸர் மாத்திரம் வீட்டில் இருந்தார். சந்திரப்பிரபை கடைக்குப் போயிருந்தாள். அவளுடைய வழக்கம், எப்பொழுது புடைவை வாங்கினாலும், கடைகளெல்லாம் தேடிப் பார்த்து, ஒரே மாதிரியில் இரண்டு புடைவைகளைச் சேகரித்து ஒன்றோடொன்று சேர்த்துத் தைத்து, கிடைத்த பன்னிரண்டு கஜத் துணியைத்தான் தன்னுடைய தேக அமைப்புக்குச் சௌகரியமாய் அணிந்துகொள்வது. ஆகையால் அவள் கடைக்குப் போனால் திரும்புவதற்கு நேரம் செல்லும். சந்திர ஹாஸர் தம்முடைய சரித்திரங்களை ஒவ்வொன்றாக வெகு விநோதமாய்ச் சொல்லிக்கொண்டிருந்தார்.
‘சொர்க்கலோகச் சாம்பான்’ என்கிற படத்திலே தான் நான் அவங்களே மொதல்லே பார்த்தேன். தேவேந்தரன் தெரியுமா உங்களுக்கு?”
“நேரில் தெரியாது. ஆனால் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன்.”-
“அந்தப் படத்திலே நாள்தான் தேவேந்தான், ரம்பை தெரியுமா ரம்பை?”
“கேள்விப்பட்டும் இருக்கிறேன் . சிலசமயம் பார்த்தும் இருக்கிறேன்.
“சத்திரப்பிரபைதான் அதிலே ரம்பை. அவங்க அந்த வேசம் இட்டுக்கிட்டு, ஸ்டுடியோவிலே வெகு தமாசால் நாட்டியம் ஆடினாங்க. அப்பவே நான் சத்தியம் பண்ணிக்கிட்டேன் இவங்களை நான் கல்யாணம் பண்ணறது, இல்லாட்டா என் பேர் கோதண்டபாணி இல்லேன்னு”
“கோதண்டபாணியா?”
“சொல்லறேன், பேச்சுக்கு. ஏன்னா, கோதண்டபாணீன்னுதான் எங்க வீட்டிலே நான் கொளந்தையா இருக்கச்சே கூப்படற பேரு. ஆனால் நாம்பளும் பெரியவங்களாப் போனப்பறங்கூட அதே பேரையா வெச்சுக்குவோம்? நம்ம அந்தஸ்துக்குத் தக்கபடியல்லவா?” “புரிந்தது, புரிந்தது! நீங்கள் சினிமாவில் சேர்கிறபோது இப்போ உள்ள கண்யமான பெயரைப் பொறுக்கிக்கொண்டீர்கள்.?”
*அவ்வளவுதானே! நான் சொன்னாப்பலே, சந்திரப்பிரபையைக் காணறவங்களுக்கெல்லாம் ஒரே பிரமை, ஒரே போட்டி நான் அவங்களை என்னமா செயிக்கிறதுன்னு தவிச்சுக்கிட்டிருந்தேன். அப்போதுதான் உங்க கதையை நான் படிச்சேன். அந்த மந்தரப் பொய்த்தகத்திலே ஸ்திரீகளை வசியம் பண்றதுக்கும் மந்தரம் உண்டு, ஆனால் பொய்த்தகத்தின் பேரைக்கூட வெளியிலே சொல்லக்கூடாது என்னெல்லாம் எழுதியிருந்தீங்களா…”
*அது நியாயந்தானே?”
ரொம்ப நியாயந்தான். நான் ஒத்துக்கறேன்! ஆனால் நான் என்ன பண்ணறது பொய்த்தகத்தைப் பாக்கறத்துக்கு? அதுக்காவ, நீங்க யாரு, எங்கே இருக்கீங்கோ, இதெல்லாம் விசாரிச்சிண்டிருந்தேன். அப்போ ஒரு நாள் பட்டணத்திலே கந்தசாமி கோவிலண்டே போயிருந்தேன். அங்கே ஒரு கடையிலே, ‘இந்த்ரசாலம்’னு பேர் போட்டு ஒரு பொய்த்தகம் இருந்தது. நாம்பதான் இந்திர வேசம் போடறமே, அதைப்பத்தி இதிலே புதிசா ஏதானம் இருக்குமா பாக்கலாம்னு, ரெண்டு ரூபா கொடுத்து, வீட்டுக்கு வாங்கிட்டு வந்தேன். வந்து
பார்த்தா இந்திரனைப்பத்தி ஒரு வார்த்தைகூட இல்லே. என்னென்னமோ எளுதியிருந்தது அதிலே. பொம்ப்ளே வசியத்துக்கும் ஒரு உபாயம் சொல்லி இருந்தது!”
“என்ன உபாயம்?”
“கேளுங்கோ,சொல்றேன். ரொம்ப சொலபம். மொதல்ல அவங்க துணி ஏதாட்டியும் கொணாந்து அதிலே நம்ப பேர எழுதிட்டு அந்தத் துணியைக் கொளித்தீடணம். அப்பறம் அந்தச் சாம்பலே எடுத்துக் கையிலே தேனை விட்டுக் கொளைச்சுச் சாப்பிட்டூட வேண்டியதுதான். கைகண்ட பலனாய்க் கிடைக்கு கண்டிருந்ததுங்க!”
“சந்தேகமென்ன?… ஆமாம், துணி கிடைத்ததா?”
“ஐயோ! அதுக்காவ என்ன கயிஷ்டப்பட்டேன் தெரியுமா? நாலம் விதம் விதமாப் பார்த்தேங்கோ, ஒண்ணும் முடியலே. கடைசியாக ஒரு யுக்தி தோணித்துங்க. ஒரு நாள், ஸ்டூடியோவிலே, அவங்க சம்மையாட்டமா நாட்டியம் ஆடிக்கிட்டே என் பக்கத்திலே வந்து திரும்பினாங்கோ, பாருங்க; வெடுக்குன்னு அவங்க இடுப்பிலே தொங்கிக்கிட்டிருந்த கைக்குட்டையைப் பிடுங்கி, என் சொக்காய்க்குள்ளே சொருகிக்கிட்டு, ஒண்ணும் தெரியாதவர் போலே நின்னேங்கோ.”
“சபாஷ்!”
“சபாசாவது நல்ல சபாசு! அவங்க என்ன, சாமான்யப்பட்டவங்களா? உடனே கண்டுகிட்டுக் கூச்சல் போட்டாங்க பாக்கணம். சமாதானம் பண்றத்துக்கே சேனை நேரமாச்சு.”
“உங்கள் மேல் சந்தேகம் உண்டாகவில்லையா?”
“சந்தேகந்தான்; ஆனால் அதை வெளிக்குச் சொல்லாமத்தா கூச்சப் போட்டாங்க! அங்கே இருந்தவங்க எல்லாம் சேந்து நல்ல வார்த்தை சொல்லிப் பார்த்தும் முடியாமே, அன்னிக்குத்தான் ஸ்டூடியோ டைரக்டர்கிட்டே எரவலா வாங்கிக்கிட்டு வந்திருந்தே எட்டு ரூபா வெலையாம் அது, ஒரு புது சில்கு கைக்குட்டை அதையும் அவங்களுக்கு இனாமாக் கொடுத்து ஒருவிதமா சமாதானத் பண்ணேன்னு வெச்சுக்குங்களேன். “
“அப்பறம்?”
“அப்பறம் என்ன? ராத்திரி வீட்டுக்குப் போனதுதான் தாமசம், பொய்த்தகத் தில் கண்டபடியே செய்து அவங்க கைக்குட்டையை விளுங்கிவிட்டேன்!”
“பேஷ். மத்தரம் பலித்தது என்பதுதான் நன்றாய்த் தெரிகிறதே!”
“பலிக்காம என்ன. நாம்ப சரியாச் செய்திருக்கயிலே? சந்திரப் பிரபை ராத்திரி என்னோடே பேச ஆரம்பிச்சவங்கதான். இன்னும் பேச்சு ஓயவில்லை. அப்புறம் ஒரு மாசத்துக்குள்ளே கல்லாணம் ஆயிடுத்துங்கோ. என்னைக் கேட்டா, அந்தப் பொய்த்தகத்துக்கு ரெண்டு இல்லே ரெண்டாயிரம் கொடுக்கலாம்!”
“ஆகையினாலே, உங்களுக்கு இப்பொழுது பூர்ண சந்தோஷந்தான்!”
“சந்தோஷந்தான். இல்லேன்னு சொல்லலே. இருந்தாலும்..”
“இருந்தாலும் என்ன? இதற்கு மேலேயும் ஆசையா?”
ஓண்ணுமில்லை. எனக்கு ஒரே ஒரு தொல்லைதான் இருக்கு. டைரக்டர் பயல் இருக்கானே, அவன் சும்மா எந்நேரமும் அவளையே சுத்திக்கிட்டு இருக்கான்.”
“அட… அத்யாயமே!” என்றேன்.
சந்திரப்பிரபை உபயோகித்தது ஓர் கைக்குட்டை என்று எனக்குத் தெரிந்தது முதல் எனக்கே கொஞ்சம் பயம் தான். பயத்தை நிவர்த்திப்பதற்காகவே, பிரபையைக் கண்டால் எல்லாருக்குந்தான் பிரமையாயிருக்கும். அது போகட்டும், அவள் ஒன்றும் அவனுக்கு இடம் கொடுக்கவில்லையே?” என்று கேட்டேன்.
“ஒன்றும் இல்லை. இருந்தாலும், இவன் தொல்லைதான் பெரிசாயிருக்கு. ஒரு நாளில்லாத போனால் ஒரு நாள் கொலை நடந்துவிடும்! இதுக்கு மாத்திரம் நீங்க எப்படியாவது ஒரு யுக்தி சொன்னா ரொம்ப உபகாரமாயிருக்கும்.”
“ஆகா! இதற்கு யுக்தி சொல்லாதபோனால் என் பெயரை எனக்கு இட்டதில் என்ன பிரயோசனம்? முதலிலே, சந்திரப் பிரபையின் பாட்டி, அம்மா இன்னும் இருக்கிறாளா? இல்லையா? அதைச் சொல்லுங்கள்” என்று ஆவலுடன் கேட்டேன்.
“நன்றாய்க் குண்டாய் இருக்காங்கோ. பவுடரும் ‘மேக்-அப்புமாக ஜொலிச்சுக்கிட்டிருக்காங்கோ!”
“அந்த டைரெக்டரிடம் இன்னொரு கைக்குட்டையை நீ எப்படியாவது இரவலாக வாங்க முடியுமா?”
“இன்னிக்கே வாங்கீடறேன். கொடுக்காத போனா, பிடிங்கிட்டா வந்துடறேங்கோ!”
“அவ்வளவுதான், நீங்கள் செய்ய வேண்டியது. அதைச் சாம்பலாக்கி இந்தத் தடவை நான் சொல்லும் மந்த்ரத்தைச் சொல்லிப் பாடடி அம்மாவை விழுங்கிவிடச் சொல்லுங்கள்.”
“அப்புறம்?”
“அப்புறம், அந்த டைரெக்டர் யாரைச் சுற்றிக்கொண்டே இருப்பான் நீங்களே சொல்லுங்கள்.”
“ஓகோகோ!” என்று நகைத்தார் சந்திரஹாஸர்.
“உங்களுக்கும் தொல்லை விடும். பாட்டி அம்மாவுக்கும் பொழுது போக்கா இருக்கும்.”
“ஆகாகா!” என்று கனைத்தார் சந்திரஹாஸர்.
அல்பமோ சுவல்பமோ, நம்மால் கூடிய மட்டும், எப்பொழுதும் பிறருக்கு உபகாரம் செய்ய வேண்டியது நம் கடமை. பதிலுக்கு விநோதமும் கிடைக்கும் என்றாலோ?
அது நிற்க: ஒரு பிரபல ஸ்டூடியோ டைரெக்டரைக் குறித்து விசித்திரமான சில வதந்திகள் உங்கள் காதில் பட்டிருக்கலாம் பத்திரிகைகளிலும் நீங்கள் படித்திருக்கலாம். வதந்திகளின் காரணத்தை ஒரு மாதிரியில் இப்பொழுது ஊகித்துவிடுவீர் என்றே நம்புகிறேன்.