பரந்த புல்வெளியில்
மர நிழல்கள் குடைவிரிக்கும்;
புல்வெளிக்கு இடையும்
சில பூக்கள் தரை நிரப்பும்.
மேய்ச்சல் நிலம்,
மந்தை மந்தையாய் ஆடுகள்
பாய்ச்சல் பழகும் களம்.
நாவால் புல்லை இழுத்து மடக்கி
கழுத்தை நிமிர்த்திக்
களை எடுப்பது போல்
புல்லசை போடும் ஆடுகள் ஆடுகள்.
இன்றே மொத்தப் புற்பரப்பதனை
தின்று முடிக்கத் தீவிரம் போலக்
குனிந்த தலையைக் குனித்த படியே
வைத்தசை போடும் ஆடுகள் ஆடுகள்;
உண் பரப்பதில்தான் உற்ற கவனம்
பின் முன் அறியாப் பேதைமை;
எதுவரின் என்ன ? உண்போம் என்றே
உண் தொழில் செய்யும் ஆடுகள் ஆடுகள்.
புல்வெளி எல்லையில்
புகுந்ததோர் சிறுத்தை
குட்டி ஒன்றை இழுத்துச் சென்றதை
கவ்விய பற்களின் இடைவலியோடு
கத்திய குட்டியின் கடைக் காலத்தை
அறியா மந்தை
உண் தொழில் தன்னில் தொடர்ந்திருந்தன.
மந்தையில் ஒன்று குறைந்ததை அறியா
மற்றை ஆடுகள்
உண்ணுதல் தொடர்ந்தன
உண்ணப்படும் வரை.
21/09/2024
