நாடோடி/1000 நீதி கதைகள் பாகம் 3

ஒரு காகம்

ஒரு காகத்திற்கு வெகு தாகமாக இருந்தது, எங்கெங்கெல்லாமோ தண்ணீருக்காக அலைந்தது. எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. கடைசியில் குறுகிய கழுத்துள்ள ஒரு கூஜாவில் தண்ணீர் இருப்பது தெரிந்தது. ஆனால் தண்ணீர் மிகவும் அடி யில் இருந்ததால் அதனால் மூக்கை கூஜாவிற்குள் விட்டுக் குடிக்க முடியவில்லை.
அந்தக் காகம் மிகவும் கெட்டிக்காரக் காகம் மூளையை உபயோகித்து யோசனை செய்தால் எந்தப் பிரச்சினைக்கும் முடிவு கண்டுபிடித்து விடலாம் என்பதைத் தெரிந்து கொண்டிருந்த காகம், ஆகவே சற்று யோசனை செய்தது. உடனே அதற்கு ஒரு யோசனை தோன்றவே துள்ளிக் குதித்தது.
பக்கத்தில் அழகான கூழாங்கற்கள் கிடந்தன. காகம் ஒவ்வொரு கல்லாக எடுத்து கூஜாவில் போட்டது. கற்களைப் போடப் போட கூஜாவில் இருந்த தண்ணீர் மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. கடைசியில் தண்ணீர் மூக்கு எட்டும் அளவுக்கு வந்ததும் காகம் தாகம் தீர தண்ணீர் குடித்தது.
இந்தக் கதை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது! சிறு வயதிலேயே நாம் எல்லோரும் படித்துள்ள கதை இது.
ஆனால் வேடிக்கை என்னவென்றால் கிறிஸ்து பிறப்பதற்கு இருநூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஆர்க்கிமெடீஸ் என்னும் பெரிய கிரேக்க அறிஞர் கண்டுபிடித்த உண்மையை இந்தக் காகம், ஒரு பள்ளிக்கூடத்திற்கும் செல்லாமல் எப்படிக் கண்டுபிடித்தது என்பதுதான் ஆச்சரியம்!
ஆர்க்கிமெடீஸ் சிறந்த அறிஞராதலால், பொற்கொல்லன் செய்த ஒரு தங்கக் கிரீடம் முழுவதும் தங்கத்தினாலானதா, அல்லது அதில் கலப்படம் உள்ளதா என்று கண்டுபிடிக்கும்படி இத்தாலிய மன்னர் அக் கிரீடத்தை ஆர்க்கிமெடீஸிடம் கொடுத் திருந்தார்.
ஒரே எடையுள்ள பல பொருள்கள் ஒரே கனபரிமாணம் உள்ளவையாக இருக்கா. ஆகவே, கிரீடத்தின் கன பரிமாணத்தைக் கண்டுபிடிக்க முடியுமானால், அது முழுவதும் தங்கத்தினாலானதா அல்லது கலப்படம் உள்ளதா என்று கண்டுபிடித்து விடலாம் என்று அவர் தீர்மானித்தார்.
ஆனால் கிரீடத்தின் கன பரிமாணத்தை எப்படிக் கண்டுபிடிப்பது? நீளம், அகலம், உயரம் கொண்ட பொருளானால் மூன்றையும் பெருக்கினால் கன பரிமாணம் வரும். ஆனால் கிரீடம் போன்ற பொருள்களின் கனபரிமாணத்தை எப்படிக் கண்டு பிடிப்பது?
ஒரு நாள் குளிப்பதற்கென்று உள்ள தனி விடுதி ஒன்றில் ஆர்க்கிமெடீஸ் ஆடையின்றி, ஒரு தொட்டியில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவருக்கு கிரீடத்தின் கனபரிமாணத்தைக் கண்டுபிடிக்கும் வழி புலனாகவே “யூரிகா! யூரிகா!” என்று தத்திக் கொண்டே தெருவில் அம்மணமாக ஓடினார். ‘யூரிகா’ என்றால் ‘கண்டுபிடித்து விட்டேன்’ என்று அர்த்தம். அது ஒரு கிரேக்க
வார்த்தை.
அவர் கண்டுபிடித்த உண்மை என்னவென்றால் ஒரு பொருள் தண்ணீரில் முழுகும்போது, அதன் கன பரிமாணம் எத்தனையோ அத்தனை கனபரிமாணத் தண்ணீர் அளவுக்கு நீர்மட்டம் மேலே உயர்கிறது என்பது.
இந்தக் காக்கையின் கதையிலிருந்து இன்னொரு பாடமும் கற்றுக் கொள்ள லாம். எந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும் ஒரு வழி இருக்கிறது. யோசனை செய்து பார்த்தால் அந்த வழி புலனாகும் என்பதுதான் அந்தப் பாடம்.