தி.ஜ.ர/வாசலில் சிங்கம்

சுந்தரம் ஒரு மேதை. மேதைகளெல்லாம் விசித்திர மாகத்தான் நடப்பார்கள். சுந்தரமும் அப்படியே நடந்து கொண்டான்.
இவனுடைய கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா எல்லாரும் இப்படி ஒரு மேதை தங்கள் குலத்தில் தோன்றப் போகிறான் என்று எப்படித்தான் அறிந்துகொண்டார்களோ தெரியவில்லை; ஒவ்வொரு வரும் பெரும் பாடுபட்டு ஏராளமான சொத்தை இவன் அடையும்படி சேர்த்து வைத்துவிட்டுச் சென்றார்கள். இது சுந்தரத்துக்கும் நன்மையாக முடிந்தது; சமூகத்துக்கும் நன்மையாக முடிந்தது. பிதுரார்ஜிதமான பணம் இல்லாவிட்டால், ஒன்று, மேதை பிரகாசிக்க மாட்டான்; இது அவனுக்குத் தீமை. அல்லது, அவன் துர்த்தரையான வழிகளில் பணம் சம்பாதிக்கத் தொடங்கிவிடுவான்; இது சமூகத்துக்குத் தீமை. சுந்தரத்தின் விஷயத்தில் இந்த விபரீதங்கள் நேரவில்லை.
இவன் காலேஜில் படித்தான். அத்தனை பாடங்களிலும் முதல் தரமாகத் தேறினான். அந்தக் காலத்தில் இவன் திறமையை மட்டும் அல்ல, குணத்தையும் புகழாதவர் இல்லை. சற்று முன்கோபி என்றாலும், நேர்மை உள்ளவன். வெட்டொன்றும் துண்டிரண்டுமாகப் பேசுவான். ‘பெருந்தரா’; சின்னத்தனம் என்பதே இவனிடம் இல்லை.
இவனுக்குக் கவிதை பிடிக்கும்; சங்கீதம் பிடிக்காது. இலக்கியம் பிடிக்கும்; கதை பிடிக்காது. நாடகம் பிடிக்கும்; நடனம் பிடிக்காது. வேதாந்தம் பிடிக்கும்; தெய்வம் பிடிக்காது. சுதந்தரம் பிடிக்கும்; சுதேசியைப் பிடிக்காது. பாலைப் பிடிக்கும்; பசுவைப் பிடிக்காது.
சுந்தரம் படித்துப் பட்டம் பெற்றான்; அப்பா போய் விட்டார். கல்யாணம் செய்துகொண்டான்; அம்மா போய்விட்டாள்.
நகரத்தில் பெரிய ‘பங்களா’வாக ஒன்றைச் சுந்தரம் வாங்கினான். அதில் மனைவியோடு சுகவாசம் செய்யத் தொடங்கினான்.
சுந்தரத்தின் மனைவி நல்ல அழகி. நாகரிகப் பெண். படித்தவள். கெட்டிக்காரி. துறு துறுப்பு நிறைந்தவள். துணிச்சல்காரி.
அவள் வந்து புருஷனுடன் குடித்தனம் நடத்தத் தொடங்கிய சில காலம் வரைக்கும் இருவருக்கும் பலத்த போராட்டம் நடைபெற்றது. பாம்புக்கும் கீரிக்கும் நடக் கும் போராட்டத்தில் இறுதி ஜயம் எதற்கு? கீரிக்குத் தானே. பாம்பு களைத்துப் படுத்துவிடுவது போலத்தான் அசந்து போய்விட்டாள் சுந்தரத்தின் மனைவி. ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டாள்.
.சுந்தரத்துக்குப் புராணமெல்லாம் வெறும் கட்டுக் கதை என்று நிச்சயமான தீர்மானம் உண்டு. என்றாலும் நளாயினியையும் சாவித்திரியையும் போன்றவளாகத் தன் மனைவி இருக்க வேண்டும் என்ற அளவற்ற ஆசையும் உண்டு. இவன் தனக்குத் தலைவலி வந்ததுபோலப் பாசாங்கு செய்வான். அவள் உடனே இவனுக்குச் சைத் தியோபசாரம் செய்யத் தொடங்க வேண்டும். இல்லாவிட் டால், ‘இவளுக்கு என்மீது காதல் இல்லை; இவளுடைய காதல் வேறு எங்கேயோ லயித்திருக்கிறது’ என்று அநு மானம் செய்துகொள்வான். பிறகு ஒரே ஆர்ப்பாட்டங் தான். சுந்தரம் என்ன இருந்தாலும் ஒரு மேதை அல்லவா? அவன் வழிகளே அலாதியாயிருக்கும். சிறிது காலம் வரைக்கும் மனைவிக்கு இதெல்லாம் என்ன வென்றே புரியவில்லை; தான் இன்னது செய்வதென்றும் புரியவில்லை. அப்புறம் அவளுக்கு இந்த மேதையின் வழிகள் தெள்ளத் தெளியப் புலப்பட்டுவிட்டன. இந்த வழிகளிலே நடக்க ஆரம்பித்தாள்.
தானும் தனக்குக் காய்ச்சல் வந்ததுபோல இவன் பாசாங்கு செய்தால், அவள் பெருங் கவலை பிடித்தது போலப் பாவனை செய்து, “ஐயோ! இனி நான் என்ன செய்வேன்” என்று (ஒரு துளிக் கண்ணீரும் விடாமல்தான்) கதறி, தன் காதலை இவனுக்கு நிரூபணம் செய்வாள். ஐந்து வயது ஆண்பிள்ளையைக் கண்டாலும், ‘அட்டா! இது என்னைத்தான் துரத்திப் பிடிக்க வருகிறது’ என்று கெஞ்சுவதுபோல, (சுந்தரத்தின் முன்னிலையில் மட்டுமே) ஓட்டம் பிடிப்பாள். இவன் இரண்டு நாள் அயலூருக்குப் போய்விட்டு வந்தால், அவள் (இவன் திரும்பிவருகிற சம யம் பார்த்து), தலையைப் பரட்டையாகப் பறக்கவிட்டுக் கொண்டு கை, கழுத்திலுள்ள விசேஷ நகைகளையெல்லாம் கழற்றி வைத்துவிடுவாள். மொத்தத்தில் தான் இவனுக்காகவே உயிர் வாழ்வதுபோலவும், இவனுடன் உடன் கட்டையேறும் அரிய சந்தர்ப்பத்துக்காகச் சதாகாலமும் ஆவலோடு காத்திருப்பதுபோலவுமே அவள் நடந்து கொண்டாள். இப்போது சுந்தரத்துக்கு ஓரளவு திருப்தி உண்டாயிற்று. ஆயினும் ஆரம்பம் முதலே இவன் ஏற் படுத்தியிருந்த கட்டுக் காவல்கள் துளியும் தளரவில்லை.
வீட்டிலே தன்னைத் தவிர வேறு ஆண் வாசனையே இருக்கக் கூடாது என்பது இவனுடைய திடமான அபிப் பிராயம். சமையலுக்குப் பெண், குற்றேவலுக்குப் பெண், தோட்ட வேலைக்குப் பெண் – இப்படி அத்தனை வேலைக் கும் பெண்களையே அமர்த்தியிருந்தான். ஆஹா! அந்தப் பெண்களின் முகமெல்லாந்தான் எப்படி. இருக்கும் தெரியுமா? அந்த முகங்களை நீங்கள் ஒரே ஒரு முறை பார்த் தால் போதும், அசோக வனத்தில் சீதை சிறையிருந்த கதையில் உங்களுக்குப் பரிபூர்ண நம்பிக்கை உண்டாகி விடும்.
சுந்தரத்தின் மனைவி அடுப்பங்கரையை விட்டு வெளியே வரமாட்டாள். தன்னைத் தவிர வேறு எந்த ஆணும் முன் ஹாலைத் தாண்டி உள்ளே வரச் சுந்தரம் அநுமதிப்பதில்லை. நண்பரோ, உறவினரோ ஆண் ரூபத் தில் எவர் வந்தாலும் சுந்தரம் இல்லாதபோது பங்களா காம்பவுண்ட் ‘கேட்’டைத் தாண்டியே உள்ளே புக முடியாது.சுந்தரம் வெளியே போகும்போதெல்லாம் காம்பவுண்ட் கேட்டுக் கதவைச் சாத்தி வெளிப்புறம் இழுத் துப் பூட்டிக்கொண்டு போய்விடுவான். அப்போ உள்ளே இருந்த வேலைக்காரிகளெல்லாம் இவன் திரும்பி வரும்போதும் உள்ளேயே ஆஜர் கொடுக்க வேண்டும். இது தெரியாத புது வேலைக்காரி ஒருத்தி ஒரு சமயம் காம்பவுண்ட் சுவர்மீது ஏறிக்குதித்து வெளியே போய்விட் டாள். சுந்தரத்துக்கு அன்று மகத்தான சந்தேகம் வந்து விட்டது. வீடு நிர்த்தூளிப்பட்டது. மனைவிக்குப் பலத்த உதை விழுந்தது. வேலைக்காரிகள் அத்தனை பேருக்கும் ‘கல்தா’ கிடைத்தது.
இவ்வளவு களேபரமாகச் சுந்தரம் இல்லறம் நடத்தியும், கல்யாணமான அடுத்த வருஷத்திலேயே இவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது; வளர்ந்தது. அதற்கடுத்த வருஷம் ஓர் ஆண்குழந்தை பிறந்தது; வளர்ந்தது. இப்படியே ஏழெட்டு வருஷகாலம் வரைக்கும் வருஷக் கணக்கும் குழந்தைக் கணக்கும் சரி நிகர் சமானமாகச் சென்று கொண்டிருந்தன. அப்புறம் ஒரு சமயம் வருஷக் கணக்கைக் குழந்தைக் கணக்குச் சிறிது மிஞ்சிவிடும் போல் கூடத் தோன்றியது. மொத்தம் பத்துப் பன்னிரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால், மூன்றே மூன்றுதான் தக்கின; முதலில் பிறந்த பெண்ணும் மூன்றாவது ஐந்தாவது பிறந்த பையன்களுந்தான் அவை.
சுந்தரத்துக்குப் பெண்ணிடம் பேரன்பு. அவளுக்குக் ‘கல்யாணி’ என்று பெயர் வைத்தான். சுந்தரத்தின் மனைவிக்கும் பெண்ணிடம் மிகுந்த பிரியந்தான். அவள் மற்றொரு பெயர் வைத்தாள். ‘சிவகாமி’ என்ற தன் வைதீகப் பெயரைப் போல் இராமல் ‘லீலாவதி’ என்ற நாகரிக மான பெயர் வைத்தாள். ஆனால், கல்யாணியைச் சுந்தரமும் சிவகாமியும் கூப்பிடுவதிலே கவிநயம் ஒன்று ஏற் பட்டுவிட்டது. ‘கல்லி’ என்று சுந்தரம் கூப்பிடுவான். அதற்கு எதுகையாக ‘லல்லி’ என்று சிவகாமி கூப்பிடுவாள்.
பிள்ளைகள் மீது இருவருக்கும் பற்றில்லை. சுந்தரத்துக்கு ஓரளவு வெறுப்புக்கூட உண்டு. அதனால் சிவகாமிக்கு அவர்களிடம் சிறிது அனுதாபம் மட்டும் ஏற் பட்டது. இரண்டு பிள்ளைகளுக்கும் ஒவ்வொரு பெயர்தான் உண்டு. ஆனால் அழகான பெயர்கள். பெரியவன் சந்திரன்; சின்னவன் இந்திரன்.
வருஷங்கள் பல சென்றுவிட்டன. பெண்ணுக்குக் கல்யாணங்கூட ஆகிவிட்டது. இன்னமும் சுந்தரத்தின் வீட்டில் பழைய கெடுபிடிகளுக்குக் குறைவில்லை.
இப்பேர்ப்பட்ட பிரதாபங்களை உடைய சுந்தரத்தின் வீட்டில் ஒரு நாள் ஒரு விநோத சம்பவம் நடந்து விட் டது. அந்தக் கதையைச் சொல்வதற்காகத்தான் இத் தனை தூரம் இவனை உங்களுக்கு அறிமுகம் செய்வித் தேனே தவிர, வேறொன்றும் இல்லை.
சுந்தரம் அன்று கிராமத்துக்குப் போய் இருந்தான். நிர்வகிக்கும் காரியஸ்தனை மேற்பார்வை நிலங்களை செய்து வருவதற்காகத்தான்.
தான் வெளியே போய்விட்டால், வீடு ஒரேயடியாய் அழுது வடியும் என்பது சுந்தரத்தின் கற்பனை. உண்மையில் அப்படி இல்லை. அப்போதுதான் வீட்டிலே பெருங் குதூகலம் நிறைந்திருக்கும். பெண் நாட்டியம் ஆடுவாள். பிள்ளைகள் பாட்டுப் பாடுவார்கள். அம்மா பட்சணம் பண்ணுவாள். வேலைக்காரிகளெல்லாங்கூட
ஒரே உற்சாகமாயிருப்பார்கள். ஆனால், பிள்ளைகளில் ஒருவனோ, பெண்ணோ, வேலைக்காரிகளில் ஒருத்தியோ மாத்திரம் ‘ஐயா தெருக்கோடியில் வருகிறாரா?’ என்று வேவு பார்த்துக்கொண்டிருப்பது வழக்கம். ஐயாவின் தலை தெருக்கோடியில் தெரிந்தால், உடனே வீடு ‘சத்தோ சத்து’ என்று அடங்கிவிடும். பிள்ளைகள் முணுமுணுத்த குரலில் பாடம் படிப்பார்கள். பெண் பிடிலை வைத்துக் கொண்டு கிர் புர்’ என்று இழுப்பாள். வேலைக்காரிகள் மும்முரமாக வேலை செய்வார்கள். சிவகாமி கூந்தலைக் கலைத்துப் பரட்டை செய்துகொண்டு, அடுப்பங்கரை மூலை ஒன்றில் படுத்துவிடுவாள். வாசற்கதவு, ஜன்னல் கதவுகள் எல்லாம். ‘பட பட’வென்று சாத்தியாகிவிடும். இந்த நிலையில் வீட்டை வந்து பார்த்தால் சுந்தரத்துக்குப் பரம திருப்தி.
சுந்தரம் கிராமத்துக்குப் போயிருந்த அன்று, வீட்டில் வழக்கப்படி பரம குதூகலம் நிலவத் தொடங்கியது.
கல்யாணிக்குக் கொஞ்சம் கொஞ்சம் இங்கிலீஷ் தெரி யும். அன்று வந்த ‘ஹிந்து’ பத்திரிகையில், ஒரு செய்தி இருந்ததை அவள் படித்தாள். ‘நகரத்துக்கு வந்திருக்கும் ஸர்க்கஸ் சிங்கம் ஒன்று கூண்டை விட்டுத் தப்பியோடி விட்டது. இன்னும் அகப்படவில்லை’ என்பதுதான் அந்தச் செய்தி.
“அம்மா,அம்மா, நாங்கள் நேற்று ஸர்க்கஸ் பார்த்தோமே: அதில் இருந்த ஒரு சிங்கம் தப்பியோடிவிட்ட தாம். ஊரெல்லாம் திரிகிறதாம்” என்றாள் கல்யாணி.
”நாளைக்கு அப்பா திரும்பிவரும்போது அவரை அது விழுங்கிவிட்டால், நாம் என்ன செய்வோம், அம்மா ?” என்று கேட்டான் பெரிய பிள்ளை.
“அட போடா முட்டாள் ! கிராமத்துக்குப் போய் விடுகிறோம். இது தெரியவில்லையே உனக்கு !” என்றான் சின்னப் பிள்ளை.
“சீ! இப்படியெல்லாம் சொல்லாதே. என்ன இருந்தாலும் அவர் உங்கள் அப்பா” என்று செல்லக்குரலிலே கண்டித்தாள் தாய்.
“பின்னே என்ன, அம்மா ! எப்போது பார்த்தாலும் ஜெயிலா?” என்று கொஞ்சும் குரலில் சின்னவன் சொன்னான்.
இந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சமையல்காரியிடமிருந்து சிங்கத்தைப்பற்றிய செய்தி மற்ற வேலைக்காரிகளிடமும் பரவியது.
இது நடந்த அரைமணி நேரம் கழித்து, “ஏ அம் மாடி !” என்று ஓர் அலறல் கேட்டது. அது தோட்டக் காரியின் குரல்தான்.
இரண்டொரு நிமிஷத்தில் வாசல்கதவு படீரென்று சாத்திய சத்தம் கேட்டது. தோட்டக்காரி இரைக்க இரைக்க வீட்டுக்குள்ளே ஓடிவந்தாள்.
”அம்மா! அம்மா! அந்தச் சிங்கம் நம்ம வீட்டு வாசலில் வந்திடுச்சு !” என்றாள்.
“நம்ம வீட்டு வாசலிலா? அடி லல்லி, சந்திரனும் இந்திரனும் எங்கேடீ? அந்த வானரங்கள் தோட்டத்தில் திரிகின்றனவோ, என்னவோ ! பாரடீ!” என்று
கத்தினாள் சிவகாமி.
“என்ன, என்ன அம்மா? எல்லாரும் வீட்டுக்குள்ளே தான் இருக்கிறோம். கட்டம் ஆடிக்கொண்டிருக்கிறோம்” என்று சொல்லிக்கொண்டே மாடியிலிருந்து ஓடி வந்தாள் லீலாவதி.
அந்தச் சிங்கம் நம்ம வீட்டு வாசலில் வந்துடுத் தாமே! என்னடீ பண்ணறது ?” என்றாள் அம்மா.
நல்ல வேளையாகக் குழந்தைகள், வேலைக்காரிகள், அம்மா எல்லாரும் வீட்டுக்குள்ளேயே இருந்தார்கள் தெருக்கோடியிலே அப்பா வரும்போது எப்படி வீட்டுக்
கதவுகளையெல்லாம் பந்தோபஸ்தாகச் சாத்தி வைப்பார்களோ அதே போலத்தான் இப்போது சிங்கம் வந்ததும் சாத்திவிட்டார்கள்.
வாசலில் சிங்கம் வந்துவிட்டதென்றால், பெரியவர்களுக்குத்தான் பெரும் பயம். சிறுவர்களுக்கு ஒரு பக்கம் சிறிது பயமே என்றாலும், மறுபக்கம் ஓர் உற்சாகமும் உண்டாயிற்று. சிங்கத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவல்கொண்டு, பெண்ணும் பிள்ளைகளும்
துடித்தார்கள்.
அது சிங்கந்தானா என்பதை நிச்சயம் செய்துகொள் ளும் ஆசையால், சந்திரன்,”அம்மா, அது காட்டுப்பூனையாய் இருக்கும். இவள் சும்மா உளறுவாள்” என்றான்.
“இருக்கலாம்; இருக்கலாம்” என்றாள் சமையல்காரி. பெரியவர்களுக்கு அது சிங்கமாக இருக்கக்கூடாது. என்று ஆசை. சிறியவர்களுக்குக் கட்டாயம் அது சிங்க மாக இருக்க வேண்டும் என்று ஆசை. இந்த ஆசைகள் காரணமாக வாதம் நடந்தது; பரீட்சிக்க முயற்சிகளும்
எங்கே இருக்கிறது அந்தச் சிங்கம் ?” என்று கேட் டான் சந்திரன்.
“கொல்லைக் கிணற்றங்கரைக்கு அப்பால் உள்ள அரளிச்செடிக்குக் கீழே போய்ப் படுத்திருக்கிறது” என் றாள் தோட்டக்காரி.
“நான் மெள்ளப் பதுங்கிப் பதுங்கிக் கிணற்றின் கைபிடிச்சுவருக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டு அதைப் பார்த்துவிட்டு வரட்டுமா?” என்றான் இந்திரன்.
“இந்தாடா குரங்கு, உன் அசட்டுத் துணிச்சலை யெல்லாம் இதிலே காட்டாதே. வாலைச் சுருட்டிண்டு உள்ளேயே இரு” என்று அடக்கினாள் அம்மா.
“இந்தச் சந்தேகமெல்லாம் என்னத்துக்கு? அரளி மரத்தடியில்தானே அது படுத்திருக்கு? இதோ நான் மாடியில் போய்க் கொல்லைப்புற ஜன்னல் வழியாகப்
பார்க்கிறேன். அங்கிருந்து அரளிமரத்தடி தெரியும்” என்றாள் லீலாவதி.
நன்றாகத்
“அடியே, சிங்கம் பத்தடி உயரம் பாயும். நம்ம மாடி ஜன்னல் எட்டடி உயரத்தில்தான் இருக்கிறது” என்று குருட்டாம்போக்கில் ஒரு சரடு விட்டான் சந்திரன்.
“அப்படியானால் போகாதேடீ” என்றாள் சிவகாமி.
‘இவன் சொல்வது வெறும் புளுகு, அம்மா. சிங்கம் உயரம் தாண்டாது; நீளந்தான் தாண்டும்” என்று சொல்லிக் குடு குடு என்று மாடிக்கு ஓடினாள் லீலா. அவள் பின்னாலேயே மற்ற இரண்டு சிறுவர்களும் ஓடினார்கள். சில நிமிஷ நேரத்தில் மூன்று பேரும் திரும்பி வந்தார்கள். என்று “அது சிங்கந்தான், அம்மா; சிங்கந்தான்” மூன்று பேரும் சேர்ந்தாற்போலக் கூவினார்கள்.
“அது ஆண் சிங்கம். அதற்குப் பிடரி மயிர் இருக்கிறது. . என்ன முழி முழிக்கிறது! நல்ல வேளையாக அரைத் தூக்கத்தோடு பார்த்தது. ரொம்பப் பயங்கரமா யிருக்கிறது” என்று மேலும் வருணித்தாள் லீலாவதி. “பொழுது விடிந்தால், அப்பா வருவார்; அவருக்குப் பின்னாலே மாப்பிள்ளையும் வந்துவிடுவார். காம்பவுண் டிலே இப்படிச் சிங்கம் வந்து போது என்னடீ செய்கிறது ?” கேட்டாள் தாய்.
“இதோ டெலிபோனை எடுத்து, போலீஸுக்குச் செய்தி சொன்னால் போகிறது. ஜவான்கள் வந்து சுட்டு விடுகிறார்கள்” என்றாள் பெண்.
லீலாவதி போன் செய்யத் தொடங்கினாள்; ‘போலீஸ் ஸ்டேஷன்தானே – ‘அமிர்த விலாஸ்’ பங்களாவிலிருந்து பேசுகிறேன். கௌரீ ரோட், எழுபத்தஞ்சாம் நம்பர் கட்டிடம் – ஸர்க்கஸ்லிருந்து தப்பியோடிய சிங்கம் எங்கள் காம்பவுண்டில் வந்திருக்கிறது- ஆமாம்; சிங்கந்தான்- வந்து சுடுகிறீர்களா ?-உடனே வர முடியாதா? – ஸப்
இன்ஸ்பெக்டர் இல்லையா ?… வந்துவிட்டாரா?- ஆமாம், ஸார் – சிங்கந்தான்-உடனே, சரி; சரி. வாருங்கள்”
போன் பேசி முடிந்தது. “அம்மா, இனிப் பயப்பட வேண்டாம். துப்பாக்கிகள் சகிதமான ஜவான்களுடன் போலீஸ் ஸப் இன்ஸ்பெக்டர் சிறிது நேரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டார்” என்றாள் தாயிடம் லீலாவதி. போலீஸ்காரருக்கும் சிங்கத்துக்கும் நடக்கும் ‘யுத்த’த்
தைப் பார்க்க இரண்டு சிறுவர்களும் மாடிக்குப் போய்விட்டார்கள். கீழே உள்ள ஜன்னல் கதவு எதையும் திறக்கக்கூடாதென்று அம்மா கண்டிப்பாகச் சொல்லி விட்டாள். வேலைக்காரிகள் சுகமாகக் கையைக் கட்டிக் கொண்டு ஹாலிலே உட்கார்ந்துவிட்டார்கள். லீலாவதி மாத்திரம் அப்பாவின் புத்தக அலமாரியைச் சோதித்து, சிங்கத்தைப்பற்றி ஏதாவது புத்தகம் அகப்படுகிறதா என்று தேடினாள். ஒன்றும் அகப்படவில்லை : கடைசி யில் அவளும் மாடிக்குப் போய்ச் சேர்ந்துவிட்டாள்.
“அடே சந்திரா, பின் ஜன்னல் பக்கம் நின்று கொண்டு நீ சிங்கத்தைக் கவனித்துக்கொண்டிரு. நான் முன் ஜன்னல் பக்கம் நின்றுகொண்டு, போலீஸ் ஜவான் கள் வருகிறார்களா என்று கவனிக்கிறேன்” என்றாள் லீலா.
அப்படியே பின் ஜன்னல் பக்கம் நின்றுகொண்டு, “சிங்கம் இப்போது எழுந்துவிட்டது… அரளிச் செடியை விட்டு ரோஜாச் செடியின் கிட்ட வந்துவிட்டது இப் போது காம்பவுண்ட் சுவர் ஓரம் போய்விட்டது. படுத்துவிட்டது… மறுபடியும் தூங்கத் தொடங்கிவிட் டது…’ என்று சந்திரன் அடிக்கடி தகவல் கொடுத்துக் கொண்டிருந்தான்.
முன்பக்க ஜன்னலுக்குப் பின் நின்றுகொண்ட லீலாவதி, வாசலையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தாள்.
கடைசியில், போலீஸ் ஸப் இன்ஸ்பெக்டர் ஆயுத பாணிகளான ஒரு டஜன் ஜவான்களுடன் ‘லெப்ட், ரைட்’ போட்டுக்கொண்டு வாசலிலே வந்து சேர்ந்தார்.
இவர்களுடைய பங்களா வாசலில் உள்ள எழுபத்தைந்தாம் நம்பரைச் சற்று நின்று ஸப் இன்ஸ்பெக்டர் கவனித்தார். ஆனால், ‘கேட்’ கதவோ பூட்டியிருக்கிறது. அதனால் சிறிது தயக்கத்துடன் அப்பால் நகர்ந்தார்.
இதைக் கண்ட லீலாவதி, “ஸார், ஸார், இந்தப் பங்களாதான். சிங்கம் இங்கேதான் இருக்கிறது என்று கத்தினாள்.
ரஸ்தாவிலிருந்தபடியே இன்ஸ்பெக்டரும், “ஆனால் கேட் கதவு பூட்டி யிருக்கிறதே! எப்படி உள்ளே வரு வது ?” என்று பதிலுக்குக் கத்தினார்.
“பூட்டை உடைத்துவிட்டோ, கேட்டை முறித்து விட்டோ வாருங்கள்” என்று மறுபடியும் கூச்சல் போட் டாள் லீலாவதி.
“இதென்னடா இழவு ! பங்களாவுக்குள்ளே ஒரு பெண் இருக்கிறது. ஆனால் கேட் கதவு வெளியிலே பூட்டியிருக்கிறது. ஒருவேளை குடி இல்லாத வீட்டிலே புகுந்த மோகினிப் பிசாசோ இது!” என்று சற்றுத் திகைத்தார் ஸப் இன்ஸ்பெக்டர்
இதற்குள்ளே, “ஆமாம், ஸார். உடையுங்கள் கேட் கதவை” என்று மற்ற இரண்டு சிறுவர்களும் குதூகலமாகக் கூச்சலிட்டுக்கொண்டே லீலாவதியின் பக்கத்தில் வந்து நின்றார்கள்.
இந்தச் சந்தடியையெல்லாம் கேட்ட வேலைக்காரிகளும் மாடிக்கு வந்துவிட்டார்கள். அம்மா மாத்திரம வரவில்லை. இப்படிப் பல ஆண்பிள்ளைகள் வந்திருக்கும் வேளையில் அவள் மாடியில் நின்று வேடிக்கை பார்க்க லாமா? அப்படிப் பார்க்கையில் சுந்தரம் தற்செயலாய் வந்து சேர்ந்துவிட்டால் அவள் கதி என்ன ?
போலீஸ் படை ‘கேட்’ கதவை உடைத்துவிட்டது. உடனே ஸப் இன்ஸ்பெக்டரின் உத்தரவுப்படி ஜவான்களெல்லாம் துப்பாக்கியைத் தூக்கிச் சுடுவதற்கு ஆயத்த மான நிலையில் வைத்துக்கொண்டார்கள்.
‘”சிங்கம் இங்கே இல்லை, ஸார். கொல்லைப் பக்கத்தில் காம்பவுண்ட் சுவர் ஓரம் படுத்திருக்கிறது, ஸார்” என்று லீலாவதி கத்தினாள்.
‘சரி, சரி’ என்னும் பாவனையில் தலையாட்டினார் ஸப் இன்ஸ்பெக்டர்.
போலீஸ் படை நான திசையிலும் பார்த்துக் கொண்டு, பங்களாவின் கொல்லைப்புறம் போய்ச் சேர்ந் தது. சுவரோரத்தில் சிங்கத்தையும் பார்த்துவிட்டது. ‘ஷூட்’ என்று ஸப் இன்ஸ்பெக்டர் உத்தரவு கொடுக்க வேண்டியதுதான் பாக்கி. இந்தச் சமயத்தில் ஓர் ஆச் சரியம் நிகழ்ந்தது. இவர்களுடைய அரவம் கேட்ட சிங்கம் விழித்தது; எழுந்தது; ஒய்யாரமாக நின்றது; பார்த்தது; ‘ லொள் லொள்’ என்று குரைத்தது. கர் ஜிக்கவில்லை; குரைக்கத் தான் தொடங்கியது.
,”இதென்னடா இந்த வீட்டிலே எல்லாம் விநோதமா யிருக்கிறது. ‘கேட் கதவு பூட்டியிருக்கிறது; உள்ளே ஆசாமிகள் இருக்கிறார்கள் ! காம்பவுண்டில் ஒரு சிங்கம் நிற்கிறது; அது கர்ஜிக்காமல் குரைக்கிறது! ஸர்க்கஸ் சிங்கம் அல்லவா? ஒருகால் குரைக்கப் பழக்கியிருக்கிறார்களோ, என்னவோ ! இது குரைத்து நம்மை ஏமாற்றப் பார்க்கிறதோ?” என்று மலைத்துக்கொண்டே நின்றார். ஸப் இன்ஸ்பெக்டர்.
சிங்கம் குரைப்பை நிறுத்தாமல் அப்படியே ஓட்டம் பிடித்தது. அப்போது அதன் பிடரி மயிர், ஒரு ரோஜாப் புதரில் மாட்டிக்கொண்டு அங்கேயே விழுந்து விட்டது.
இதென்ன விநோதம்! அபாயம் வந்தபோது, பல்லி வாலைக் கழற்றி எறிவதுபோலச் சிங்கம் தன் பிடரி மயிரைக் கழற்றியெறியுமா என்ன ? அதெல்லாம் இல்லை. இது உண்மையிலே சிங்கம் அல்ல : சாயம் பூசிய நாய்! அந்தப் பிடரி மயிரை எடுத்துப் பார்த்தபோது, அது வெறும் சணல் குஞ்சமாக இருந்தது!
தாம் வேட்டையாட வந்த சிங்கம் கடைசியில் ஒரு சாதாரண நாயாகப் போனதில் ஸப் இன்ஸ்பெக்டருக்கு ஆத்திரமும் அவமானமும் ஒருங்கே மூண்டன.
வெகு கம்பீரமாகப் பங்களாவின் வாசற் கதவை வந்து தட்டினார். அம்மா குடுகுடு என்று சமையலறைக்கு ஓடிவிட்டாள். மாடியிலிருந்து குழந்தைகளும் வேலைக்காரிகளும் கீழே இறங்கி ஓடிவந்தார்கள். சமையல்காரி கதவைத் திறந்தாள்.
ஸப் இன்ஸ்பெக்டர் கேள்விமேல் கேள்வி கேட்கத் தொடங்கினார்.
“யார் இந்த வீட்டுக்காரர்? இப்படிக் கேலி செய்தவர் களை நான் சும்மா விடப்போவதில்லை. எங்கே, இந்த வீட்டில், பெரியவர்கள் யாரும் இல்லையா?” என்று கடகட வென்று கேட்டார்.
‘ஐயா இல்லீங்க. ஊருக்குப் போயிருக்காங்க. காலை யில்தான் வருவாங்க” என்றாள் தோட்டக்காரி.
“ஐயா இல்லாவிட்டால் அம்மாவைக் கூப்பிடு.” ‘”அம்மா… அவங்க அவங்க ” என்று இழுத்தாள் சமையல்காரி.
”உள்ளே இருக்கிறார்களா, இல்லையா? கேட் கதவு ஏன் வெளியிலே பூட்டியிருந்தது?” என்று சரமாரியாக வெகு உக்கிரத்துடன் கேள்விகளைப் பொழிந்தார் சப் இன்ஸ்பெக்டர்.
சமையல்காரி கொஞ்சம் கெட்டிக்காரி. அவள் இன்ஸ் பெக்டரிடம், “கொஞ்சம் ஒதுக்குப்புறமாக வாருங்கள். தனியாக விவரம் சொல்லுகிறேன்” என்று நயமாகச் சொல்லி அழைத்துச் சென்றாள்.
ஐயாவின் போக்கையும் அம்மாவின் நிலைமையையும் தளுக்காகவும் விவரமாகவும் அவரிடம் எடுத்துச் சொன் னாள். இந்த வீட்டில் உள்ள எவரும் நாய்க்கு இந்தச் சிங்க வேஷம் கட்டிவிடவில்லை என்பதையும் அவருக்குப் பிரமாண பூர்வமாகச் சொல்லி அவரை நம்பச் செய்தாள்.
பிறகு ஸப் இன்ஸ்பெக்டர், “பாவம்! இப்படியும் ஒரு மனிதர் உண்டா?” என்று அங்கலாய்த்துவிட்டுத் தமது படையை அழைத்துக்கொண்டு அகன்றார்.
மறுநாள் காலையில் சுந்தரம் வந்து சேர்ந்தான். அவன் வந்த அடியிலேயே மாப்பிள்ளையும் வந்து சேர்ந்தார்.
முதல் நாள் நிகழ்ந்த ரகளையை லீலாவதி தன் கணவ ரிடம் ரகசியமாகச் சொன்னாள். இதைக் கேட்டதும் அவருக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. உரக்கச் சிரித்து விட்டார். அடுத்த அறையிலிருந்த சுந்தரம் இதைக் கேட்டு, “அங்கே என்ன சிரிப்பு?” என்று அதட்டிக் கேட்டான்.
மாப்பிள்ளையாயிருந்தாலும் சுந்தரத்திடம் ஓரளவு பயப்படத்தான் வேண்டும். “ஒன்றுமில்லை இ இ… நான் தான்….’ என்று இழுத்துக்கொண்டே மாப்பிள்ளை வெளியே வந்தார். விஷயத்தைப் பக்குவமாகச் சுந்தரத் திடம் சொன்னார்.
இதைக் கேட்டதும் அவன் என்ன அட்டகாசம் செய்வானோ என்று வீட்டிலுள்ள எல்லாரும் நடுங்கிக்கொண் டிருந்தார்கள். அதற்கு நேர்மாறாக, அவன் பரமசாந்தத் தோடுசிந்தனையில் ஆழ்ந்துவிட்டான். “கேட் கதவு… கேட் கதவு…அதை உடைத்தார்களா!… பின்னே என்ன செய்வார்கள்?” என்று தனக்குத் தானே முனகிக் கொண் டான். கோபம், எரிச்சல், வெட்கம், வேதனை முதலிய பல உணர்ச்சிகள், அவன் மனக்கடலிலே திரைத்தெழுந்து அதிலேயே அடங்கிவிட்டன. அன்று முதல் சில நாள் வரைக்கும் அவனுக்குத் தன்னைப் பார்த்து முழு உலகமுமே பரிகசிப்பது போல் ஓர் உணர்ச்சி உண் டாயிற்று. இந்தச் சம்பவத்தைப்பற்றிப் பின்னால் யாரிட மும் அவன் அதிகமாகப் பேசவில்லை. ஆனால் அவன் நட வடிக்கைகளில் மட்டும் இதிலிருந்து ஓர் ஆச்சரிய மாறு தல் ஏற்பட்டது. அவனை அறியாமலே அவனுடைய கெடுபிடிகளெல்லாம் தளர்ந்தன. கடைசியாக இப்போது மனைவி எப்படி ஆட்டிவைப்பாளோ அப்படியே ஆடும் சூத்திரப்பொம்மையாக அவன் மாறிவிட்டான். அதற்கு இந்தச் சம்பவமே காரணம். இதை நம்மால் நம்பமுடி யாமல் இருக்கலாம். ஆனால், சில சமயம் மிக அற்பமான ஒரு நிகழ்ச்சி – நாம் எதிர்பாராத – எதிர்பார்க்கவே முடி யாத-மகத்தான பலனைத் தந்துவிடுகிறது. அது இந்தப் பிரபஞ்ச விந்தைகளுள் ஒன்று.
‘இதெல்லாம் சரி. அன்று அந்த நாய் எப்படிச் சிங்க வேஷம் போட்டுக்கொண்டு வந்தது?” என்று “நண்பர்கள் கேட்கலாம். ஸர்க்கஸ் சிங்கம் தப்பியோடியதை மற்றவரைப் போலவே கேள்விப்பட்ட எவனோ ஒரு விஷமக்காரன் (கம்யூனிஸ்டோ ஒருவேளை? ) செய்த வேலையாக இருக்கலாம். இல்லாவிட்டால் நாய் தானாகவா வேஷம் கட்டிக்கொண்டு வந்திருக்கப்போகிறது?

2 Comments on “தி.ஜ.ர/வாசலில் சிங்கம்”

  1. அந்தக்கால ஆண்கள் மனோபாவத்தையும் பெண்கள் மீதான அவர்கள் அடக்குமுறையையும் ஒருங்கே காட்டும் கதை.

Comments are closed.