தி.ஜ.ர/காக்கை ராஜ்யம்

என்ன விநோதமான கனவு!
சாரநாதனுக்கு மூடநம்பிக்கை எதுவும் கிடையாது. நிச்சயமான ருசு இல்லாத எதையும் அவன் நம்பமாட் டான். ஆனால், நுட்பமான விஷயம் எதற்குத்தான் நிச்சயமான ருசு அகப்படுகிறது? விஞ்ஞானிகள் கூட ஓர் எல்லைக்கு அப்பால் தர்க்க சாஸ்திரத்தை அந்தரத்தில் நிறுத்திவிடுகிறார்கள். யுக்திக்கும் அநுபவத்துக்கும் எட்டாத கற்பனை தான் அங்கே அவர்களுக்குப் புகலாக இருக்கிறது.கனவு என்பது என்ன? அது அந்தர்யாமியின் ஒளியா? ஆண்டவனின் அருளா? சென்ற காலம், வருங் காலம், கண்ணுக்கெட்டாத தூரம், கண் முன் இருந்தாலும் புலப்படாத அணுக்கரு இவைகளையெல்லாம் ஞான திருஷ்டி காணும் காட்சியா அது? அறியாத பொருளை அறிவிலே தோன்றச் செய்யும் வல்லமை அதற்கு உண்டா? கனவு பலிக்குமா? எந்தக் கனவாவது பலிக் குமா? அல்லது அது வெறும் பிரமையா? கேவலம் நரம்புக் கோளாறுதானோ? இந்த விஷயத்தைப்பற்றி எத்தனையோ தடவை சாரநாதன் சிந்தித்திருக்கிறான். அவன் என்ன? புராதன வேதாந்திகள், ஜோஸ்யர்கள் தொடங்கி, நவீன விஞ்ஞானிகள், வைத்தியர்கள், கவிஞர்கள், பிறர் ஆகிய எத்தனையோ பேரும் கனவைப்பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள். புராதன ஹிந்து வேதாந்திகள் கனவை ஆத்மாவின் ஓர் அவஸ்தை என்று மதித்தார்கள். அது கால தேவதையின் மணியோசை என்பது ஜோஸ்யர்களின் கருத்து. அடக்கிய அவல ஆசையின் அந்தர்முகப் போராட்டத்தில் கொந்தளித்தெழுந்த திரை என்பதுபோல் அதை ஆராய்கிறார்கள் மனத்தத்துவ சாஸ்திரிகள். அஜீர்ணம் முதலிய தேக அவஸ்தைகளின் விளைவே கனவு என்று வைத்தியர்கள் எண்ணுகிறார்கள். பிரபஞ்சமே ஓர் இன்பக்கனவு என்று குதூகலம் அடைபவர் கவிஞர். கனவு! அது ஓர் அற்புத நிகழ்ச்சி; நித்த நித்தம் நம் வாழ்க்கையின் துன் பங்களையெல்லாம் சுட்டெரித்து, நம்மைப் பரவச இன்ப உலகம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லும் ஒரு மந்திரசக்தி! அவனுக்குச் சிரிப்பு வந்தது. கனவு ஆத்மாநுபவம். அதைப்பற்றி வர்ணிப்பதெல்லாம் விளக்க ஒன்றை விளக்க முயலும் அசாத்தியமான காரியம். மாயையின் மாயை அநிர்வசநீயம் என்றார் சங்கரர். குழந்தைதானே கனவு! ஆமாம்,அது எப்படிப் போனாலும் போகிறது. நேற்றிரவு அவன் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம்? வேடிக்கைதான். அன்றொரு நாள் கேட்ட செய்தி, முதல்நாள் முன்னிரவில் கண்ட காட்சி, எப்போதோ ஒரு சமயம் படித்த ஒரு கட்டுரை, நேற்றுக் காலையில் தன் காலடியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் – இந்த நான்கும் சேர்ந்தே இந்தக் கனவுக்கு உருக் கொடுத்திருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். இருந்தாலும் சித்தக் கடலின் மேற்பரப்பிலே திரைத்தெழுந்த ஒரு குமிழி அல்ல இது, அதன் அடி ஆழத்திலே வெடித்துக் கிளம்பிய ஒரு சிப்பி முத்து என்றே அவன் உள்ளத்தில் எதனாலோ ஓர் உணர்ச்சி உண்டாயிற்று.
வெகுநேரம் கழித்து, நேற்றிரவு அவன் படுத்துக் கொண்டான். அதுவரைக்கும் விழித்திருக்க, அவனை அவன் மனைவி கனகம் விடுவதில்லை. பத்து மணிக்குப் பிறகு அவன் படித்தால், எலெக்ட்ரிக் மெயின் ஸ்விட்சை அழுத்திக்கூட விளக்கை அவள் அணைப்பதில்லை; ப்யூஸ் கம்பியையே அறுத்துவிடுவாள். இது அவனால் வந்த வினைதான். தீபாவளியன்று பாதி ராத்திரி வரைக்கும் அவள் வேலை செய்துகொண்டிருந்தது கண்டு அவனுக்குச் சகிக்கவில்லை. அன்று அவன் இப்படிச் செய்ததைப்
பார்த்ததிலிருந்து, ப்யூஸ் அறுக்கும் வித்தையை அவளும் கற்றுவிட்டாள். நேற்றிரவு விழித்திருந்ததற்கே அவள் தான் காரணம்.
அவன் ஒரு ரசமான நாவலைப் படித்துக்கொண்டிருந்த போது, வாசல் பால்கனியிலிருந்து, “இதோ பாருங்கள்! இங்கே வந்து பாருங்களேன்!” என்று ஆச்சரியத்துடன் அவள் அழைக்கும் குரல் கேட்டது. சாரநாதன் அங்கே போய்ப் பார்த்தான். அவர்கள் வீட்டு ரேடியோவின் ஆகாயக் கம்பியை ஒரு குச்சியுடன் இணைத்துக் கட்டி யிருந்த சிறு கம்பி துவம்சம் ஆகிக்கொண்டிருந்ததை அவன் கண்டான். ஒரு காக்கை அந்தக் கம்பியுடன் . மல்லுக்கட்டி, அதைக்கொத்திக் குளறி இழுத்துக்கொண் டிருந்தது.
”அடடா! என்ன இது! வேடிக்கை பார்த்துக்கொண் டிருக்கிறாயே!… சூ! சூ! ஹோஷ்!” என்று அவன் அந்தக் காக்கையை விரட்ட ஓடினான்.
‘நில்லுங்கள்! விரட்டாதீர்கள்! ஐயோ பாவம்! சின்னக் குஞ்சு இது. உங்களுக்குத் தெரியுமா?” என்று கனகம் தடுத்தாள்.
பிறகு, “அதோ பாருங்கள்!” என்று வாசல் பக்கம் இருந்த அரசமரத்தை அவள் சுட்டிக் காட்டினாள்.
‘அதில் என்ன?”
“ஆயிரக்கணக்கான காக்கைக் கூடுகள் அதில் தொங்குகின்றன. தாய்க் காக்கை தன் குஞ்சுக்குப் பறக்கும் சக்தி வந்ததும், அதைக் கூட்டை விட்டு வெளியே விரட்டிவிடுகிறது. குஞ்சு இனி எங்கே தங்குவது? தானே தன் கூட்டைப் புதிசாய்க் கட்டிக்கொள்ளத் தொடங்கு கிறது. என்ன உறுதியான கூடு! ஆமாம், இந்தக் காக் கைக்குஞ்சுக்கு யார் இதெல்லாம்சொல்லித்தருகிறார்கள்?”
உண்மைதான். மனிதனுக்கு வீடு கட்டித் தர அப்ப னிடம் கற்ற கொத்தனோ, கல்லூரியில் படித்த எஞ்சி
னீரோ வேண்டும். இன்று பார்த்தால், உலகத்திலுள்ள அத்தனை நகரங்களிலும் வீட்டுப் பஞ்சம். எத்தனை லட் சம் ஜனங்கள் ‘குடியிருக்க நிழல் இல்லை’ என்று தவிக்கிறார்கள்! எவர் உதவியும் எந்தப் படிப்பும் இல்லாமல் தன் குடிசையைத் தானே அமைத்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறான் மனிதன். இது அவன் நாகரிகத்தின் விளைவு ; இயற்கையின் நியதி அல்ல. மனிதனின் பிரபஞ்சம் தனிப் பிரபஞ்சம்…
எங்கும் இரவு பதினொன்றரை மணி ஆகிவிட்டது. காக்கைக ளெல்லாம் அரசமரத்தில் முடங்கிவிட்டன. அமைதி சூழ்ந்தது. வாசலில் ஓடிய ஏதோ ஒரு மோட்டா ரின் டயர் வெடித்த சத்தம் ‘படீர்’ என்று கேட்டது. அரசமரத்திலிருந்த காக்கைகள் எல்லாம் அவ்வளவுதான். குபு குபு என்று கிளம்பி, “கா! கா! கா!” என்று கத்திக் கொண்டு சுற்றிலும் வட்டமிட்டுப் பறந்தன.
இந்த வேடிக்கையையும் கனகம்,சாரநாதன் இருவரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். இன்னும் அவர்கள் தூங்கவில்லை.
“காக்கைக் கூட்டம் என்பது சரியாயிருக்கிறது’ என்று சொல்லிச் சிரித்தான் சாரநாதன்.
“பயமாயிருக்காதா? என் சின்ன வயசில் மழை பெய்து இடி இடித்தால் எனக்குக் கதி கலங்கிவிடும். என் சுட்டு இரண்டு காதையும் பொத்திக்கொண்டு விரல்களால் கண்ணை மூடிக்கொண்டு, அம்மா மடியில் குப்புறப் படுத் துக்கொள்ளுவேன்.”
“நீயா! உனக்குக்கூட அப்படி ஒரு பயம் இருந்ததா?”
“இருந்தது. இப்போதுதான் போயிடுத்து.’
“எப்படி?”
‘உங்களோடு பழகியதால். புலியிடம் பழகிய பிறகு பூனைக்கு யார் பயப்படுவார்கள்?”
என்று சொல்லிக் ‘கொல்’ என்று சிரித்தாள் கனகம்.
சாரநாதனுக்கு அது பேரின்பமாக இருந்தது.
சற்று நேரத்தில் காக்கைகளின் ஆரவாரம் சிறிது சிறிதாக மங்கிக்கொண்டே வந்தது; அவைகள் ஒவ்வொன் றாக மீண்டும் கூட்டில் புகுந்தன. கடைசிக் காக்கையின் தனிக் குரலும் அவரோகண கதியில் செல்லும்போது தான் அவன் இமைகள் மூடின. அன்றொரு நாள் கேட்ட செய்தியைப்பற்றி யோசிக்கத் தொடங்கினான்.
ஜவாஹரின் கல்கத்தா விஜயத்தில் நிகழ்ந்த அந்தச் செய்தி எப்படித்தான் ‘ஹிந்து’வில் அவன் கண்ணுக்குப் படாமல் தப்பியதோ தெரியவில்லை. “லட்சம் ஜனங்கள் ஒரு கூட்டம் கூடுகிறார்கள்; அதில் நூறு குண்டர்கள் புகுந்து காலித்தனம் செய்து கலைத்துவிடுவதா? அதற்கு இடங்கொடுத்தால் ஜன சமுதாய வாழ்வே சாத்தியமல்ல. விஷமிகளுக்கு அஞ்சிப் பீதி கொள்ளாமல் ஜனக் கூட்டமே சமாளிக்க வேண்டும்; அந்தக் குண்டர்களைச் சமாளிக்க வேண்டும். போலீஸ் உதவி கூடாது” என்றாராம் மனிதகுல மாணிக்கமான ஜவாஹர். ஜனங்களே அற்புதமாய் அமைதியை சத்தம் கேட்டால் ஓடும் நிலைநாட்டினார்களாம். ஒரு காக்கைக் கூட்டமா மனிதர்கள்? அல்லவே! இந்தச் செய்தியை யாரோ அவனுக்குச் சில நாளைக்கு முன் சொன்னார்களே.அப்பாடா! அவனுக்குத்தான் என்ன அசதி! கண் கெஞ்சுகிறது.
“என்ன,தூங்கிவிட்டீர்களா? அடேயப்பா! கும்ப கர்ணன் தோற்றான்” என்றாள் கனகம்.
பதில் இல்லை.
அவளும் விளக்கை அணைத்துப் படுத்துவிட்டாள். நல்ல தூக்கம், நிம்மதியான தூக்கம் என்றுதான் அவன் எண்ணம். என்றாலும் அந்தக் கனவைக் கண்டிருக்கிறான். காலையில் எழுந்ததும் நன்றாக நினைவுக்கு வந்தது.
எங்கேயோ மலை. அது மலை மாதிரியும் இருந்தது, மாளிகை மாதிரியும் இருந்தது. பின்னும் மேலே ஓங்கி வளர்ந்து அதற்கும் நிழல் கொடுத்துக்கொண் டிருந்தது ஒரு மரம். அது கற்பக விருட்சமா? அல்லது அசுவத்த விருட்சமா? அசுவத்தம்தானே அரசமரம்? அந்த மரத்தின் மேலே காக்கைகளின் தர்பார் நடந்துகொண்டிருந்தது. வீடுகளின் உச்சியிலே, வரிசையாகப் பல காக்கைகள், ‘ கா…கா என்று குரல் கொடுத்துக்கொண்டு இரைத் தேடப் புறப்படுவதையும் மாலையில் திரும்பிவந்து இதேபோல் கூடுவதையும் விழிப்பு நிலையில் எத்தனையோ தடவை அவன் கண்டிருக்கிறான். ஆனால், இந்த மரத்தில் உள்ள காக்கைகள் மனிதரைப்போல் பேசுகின்றன. ஏதோ பஞ்சாயத் கோர்ட் அல்லவா நடத்துகின்றன! விசாரணை நடக்கிறது; கைதிக் கூண்டில் ஒரு காக்கை நிற்கிறது. ‘இப் படிக் காக்கைகளும் கோர்ட் நடத்துவதுண்டு; அவை களுக்கும் நகைச்சுவை உண்டு; விளையாட்டு உண்டு. சமு தாய வாழ்க்கை உண்டு’ என்றெல்லாம் விழிப்பு நிலையில் சமீபத்தில் ஒரு கட்டுரையில் அவன் படித்திருக்கிறான். அதனால் கனவிலே இதுவரைக்கும் கண்டதெல்லாம் இயற்கை. ஆனால் இந்தக் கட்டத்தில் நீதிபதிக் காக்கை சொன்ன துடுக்குத்தனமான வார்த்தைதான் அவனுக்கு ஆச்சரியமூட்டியது.
“இதோ இந்தக் கைதி மனிதக் கும்பலைப்போல் நடந்துவிட்டான். பேடி! இவன் ஒரு வாரகாலம் பூச்சி புழுக்களே இல்லாமல் வெறும் தானியங்களைத் தின்று வாழும்படி சிறையில் தள்ளுங்கள்” என்று அது தீர்ப் பளித்தது.
மனிதக் கும்பல்! என்ன அலட்சியம்!
ஆம்! இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. இப் போது ஞாபகம் வந்துவிட்டது. நேற்றுக் காலையில் அவன் காலடியில் நடந்ததே, அந்தச் சம்பவந்தான்.
சாரநாதனுக்குப் போட்டோ எடுக்கத் தெரியும். ஆனால், பெரும்பாலும் பெட்டியில் தூங்கிக்கொண்டிருக்கும் அவன் காமிரா. திடீரென்று மூன்று மாதத்துக்கு ஒரு தடவை, தான் பெரிய போட்டோ நிபுணன் ஆகிவிட வேண்டும் என்று அவனுக்கு ஆசை வரும். இரண்டு பிலிம் நாசமாகும்; பத்து ரூபாய் வரைக்கும் கையைக் கடிக்கும். அப்புறம் காமிரா பழையபடி பெட்டிக்குள் போய் மூன்று நாலு மாதம் முடங்கிவிடும். இப்படியே பல தடவை பெட்டிக்கு உள்ளும் புறமுமாக அந்தக் காமிரா நடமாடிவிட்டது. நேற்றுக் காலை இப்படியே போட்டோ எடுக்கும் ஆசை வந்தது அவனுக்கு. தெருவிலே ஏதாவது விசேஷக் காட்சி நடந்தால், அதைப் படம் பிடித்து ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற தீர்மானத்துடனே, தோளிலே காமிராவை மாட்டிக் கொண்டு அவன் கிளம்பினான். எங்கே போவது? பஸ்ஸில் ஏறிக் கடற்கரைக்குப் போனால் என்னவாவது காட்சி கிடைக்கலாம் என்று எண்ணி, பஸ்-ஸ்டாப் அருகே ஒரு மரத்தடியில் நின்றான்.
அப்போது திடீரென்று மகா பரிதாபமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அவன் எதிர்பாராத விதமாய் மரக் கிளையிலிருந்து ‘பொத்’ என்று ஒரு காக்கைக் குஞ்சு அவன் காலடியில் வந்து விழுந்தது. அது என்ன என்று அவன் குனிந்து பார்த்துக்கொண்டே யிருக்கையில், எங் கிருந்தோ ‘குடு குடு’ என்று ஒரு சொறி நாய் ஓடிவந்தது. அந்தக் காக்கைக் குஞ்சின் குரல் வளையைக் கௌவிக் கொண்டது. பனை வேர் பிளந்ததுபோல், குஞ்சின் மூக்குப் பிளந்தது. அதற்குள்ளே அவன் கண்ட அந்தச் செம்பழுப்பு நிறந்தான் என்ன பயங்கரமாய் இருந்தது! அவன் பிரமித்து அசைவற்று நின்றுவிட்டான். நாய் அங்கே அரைக் கணமும் நில்லாமல் ஓடியது. அதன் மேலே பல காக்கைகள், படையெடுத்த விமானங்களைப் போல் பறந்து, நாயின் மூஞ்சியையும் முதுகையும் வாலையும் பாய்ந்து பாய்ந்து கொத்தின. அப்படியும் நாய்
குஞ்சை விடவில்லை. அதை வாயில் கௌவியபடியே காக்கைகளும் அங்கே ஒரு சந்தில் புகுந்துவிட்டது. அதைத் துரத்திக்கொண்டுதான் சென்றன. அதற்கு மேல் என்ன நடந்ததோ, அவனுக்குத் தெரியாது. பிர மிப்பு நீங்கியதும், ‘ஆஹா! இதை ஒரு போட்டோ பிடிக் காமல் போனோமே!’ என்று ஒரு நிமிஷம் எண்ணினான். ‘ஐயோ பாவம்! ஒரு ஜீவனின் மரண வேதனையை, பயங் கரமான ஒரு சித்திரவதையைப் படம் எடுத்து அதைப் பணத்துக்கு விற்பதா?” என்று அடுத்த நிமிஷம் தோன்றி யது. அவன் தனக்குத்தானே சிரித்துக்கொண்டான் ஆனால், அந்தச் சிரிப்பிலே துளியும் இன்பம் இல்லை; சங்க டந்தான் நிறைந்திருந்தது. என்றாலும், ஒரு குஞ்சு விழுந்த கொளுத்துகிற வெயிலிலேகூட எங்கிருந்தோ பல நூறு காக்கைகள் திரண்டு வந்து, நாயைத் தாக்கியது மட்டும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. காக்கை சமுதாய உணர்ச்சி நிறைந்த வீரப் பட்சி என்று அவன் கண்டான். ஆகவே ‘மனிதக் கும்பல்’ என்று இழிவாகப் பேச அதற்கு உரிமை உண்டு என்று இப்போது அவனுக்குப் புலப்பட்டது.
விநோதமான கனவு. ஆனால்,தனக்கு ஏற்பட்ட சில அநுபவங்களால் தனக்குள்ளே தன்னையும் அறியாமல் நிகழ்ந்துகொண் டிருக்கும் சித்தக் கடலின் கொந்தளிப்பே அது என்று அவனுக்குத் தெளிவாய்ப் புலனாயிற்று. ‘சமுதாய வீரம்’ என்ற நல் முத்தை அவன் கண்டெடுத்து விட்டான்.
நாலு நாள் கழித்து, அதே மரத்தடிக்கு அவன் போனபோது, ஐயோ! என்ன துர்க்கந்தம்! என்ன அரு வருப்பான காட்சி! அங்கே அந்த நாய் செத்துக் கிடந்தது. பல நூறு காக்கைகள் அதைச் சூழ உட்கார்ந்து, ‘கா! கா!’ என்று கத்திக் கொத்திப் பிடுங்கித் தின்றுகொண் டிருந் அது சமுதாய வீரம்; இது? இது என்ன?- ஆம்..அபாயத்திலே பிறந்த வெறி வீரம். பசியிலே அடக்க முடியாத சபலம் கோரம். அநுபவ அவஸ்தையிலே பிறப் பது கற்பனை; அதுவேதான் கனவும். எல்லாம் இயற்கையின் அடிப்படை உணர்ச்சிகளால்தான் விளைகின்றன. அந்த உணர்ச்சிகளுக்கு நடுவிலே சாவும் வாழ்வும் ஊசலாடுகின்றன.
சாரநாதன் மறுபடியும் தனக்குள் தானே சிரித்துக் கொண்டான். பிரபஞ்ச ரகஸ்யம் அவனுக்கு விளங்கி விட்டதா? இல்லை, ஆனால், கனவு புரிந்துவிட்டது.

தி.ஜ.ர/வாசலில் சிங்கம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “தி.ஜ.ர/காக்கை ராஜ்யம்”

Comments are closed.