
அன்று ஒரே ஒரு நாள் வீடு என்ன அவந்தரையாகிவிட்டது! எங்கே பார்த்தாலும் வீட்டிலே அவள் இல்லை. குப்பை. சாமான்களெல்லாம் தாறுமாறாகக் கிடக்கின் றன. என்ன போச்சோ? என்ன இருக்கிறதோ ?-இத் தனையும் பங்கஜத்தம்மாளின் எண்ணம். அத்தனை எண்ணமும் பலவிதக் கூச்சலாக குட்டிகளெல்லாம் கதி கலங்கித்தான் போயிருக்கும், இன்னொரு வீடாக இருந்தால். . இந்த வீட்டிலே அந்த வழக்கம் இல்லை. ஒரு நாள் அப்பா கத்துவார்; ஒருநாள் அம்மா கத்துவாள்; இரண்டுபேரும் கத்தாவிட்டால், குழந்தைகள் தாங்களே கத்திவிடும்; ஒரு கத்தலும் இல்லாவிட்டால் ரேடியோவாவது அந்தத் தெரு முழுதும் அதிரும்படி இந்த வீட்டிலிருந்து கத்தித் தீர்க்கும். சங்கீத ரூபத்தை விட்டு வேறு சகல ரூபத்திலும் நாதப் பிரம்மம் சதாகாலமும் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் வீடு இது. ஆகவே கூச்சல் என்பது இங்கே சர்வ சகஜம்.
“அடி சீதேவி…”
மகளைக் கூப்பிடுகிறாள் பங்கஜத்தம்மாள். ‘ஏ சீதேவி’ என்று கோபத்தோடு அவள் கூப்பிட்டால், அதற்கு ‘ஏ மூதேவி’ என்று அர்த்தம். உண்மையைச் சொன்னால் இந்த ரண்டு வார்த்தைகளுக்கும் உள்ள அர்த்த வித்தியாசம் அவளுக்குத் தெரியாது. சொல்லிக் கேட்டுக்கொள்ள மாட்டாள். சொல்லி கொடுத்தாலும் இதெல்லாம் எனக்குத் தெரியவேண்டிய அநாவசியம் இல்லை
என்று சொல்லி விடுவாள். சீதேவி மூதேவி போலவே, அவசியம் அநாவசியம் என்ற சொற்களும் அவளிடம் பேதமற்ற துரிய நிலையை அடைந்துவிடுகின்றன. ஆனாலும் சொற்களைக் கணீர் என்று வெகு சுத்தமாகவே அவள் உச்சரிப்பாள்.
“அடி சீதேவி…”
இது இரண்டாவது கூப்பாடு.
அடுத்த அறையில் ‘ஹிந்து’ படித்துக்கொண்டிருந்த அப்பா கோபாலசாமி, “எரிமலை வெடித்துவிட்டது” என்று தமக்குள் முணுமுணுத்துக்கொண்டார்.
பத்துத் தடவை கூப்பிட்ட பிறகுதான் அந்தப் பெண் கோமளம் ஏன் என்று கேட்பாள். பள்ளிக்கூடத்துக்குப் போன நேரம் போக மீதி நேரம் எல்லாம் அவளுக்கு ஒரே ஒரு வேலை உண்டு: அதுதான் அலங்காரம். வாரிப் பின்னிக்கொள்ளுவாள்; பின்னலை அவிழ்ப்பாள் : மறுபடி தலையை பின்னிக்கொள்ளுவாள். இப்படிப் பல தடவை நடந்த பிறகு, தாவணியை மாற்றி மாற்றிப் பல விதமாய் உடுத்துப் பார்ப்பாள். இது முடிந்ததும் பழையபடி பின் னலுக்குத் திரும்பிவிடுவாள். பின்னல் தாவணி, தாவணி பின்னல் இந்த இரட்டைகளில் வெகு நேரம் மாறி மாறி ஈடுபாடு. அப்புறந்தான் மற்ற வேலையைக் கவனிப்பாள். அது என்னவென்றால், முதலில் கனகாம்பரம் காகிதப்பூ, காகிதப் பூ கனகாம்பரம், பிறகு வெள்ளைத்தோடு சிவப் புத் தோடு, சிவப்புத் தோடு வெள்ளைத்தோடு (எல்லாம் வெறும் கண்ணாடிக் கல்தான் ) இந்த ஜோடிகளில் ஈடு பாடு. சூடிக்கொடுத்த நாச்சியாருக்கு நேர் வாரிசு இந்தக் கோமளம்.
“அடியம்மா சீஇதேவீ…” என்று கார்வை, நிரவல், சங்கதி, கமகம் இவைகளோடு மூன்றாவது கூப்பாடு புறப் பட்டது.
அழகு காட்டுகிற தொனியில், “என்ன?” என்று பதில் குரல் கொடுத்தாள் கோமளம். “ஏன்?”” என்று கேட்க அவளுக்குத் தெரியாது; “இதோ வருகிறேன்” என்று சொல்வதும் இல்லை. நின்ற நிலை பெயராமல்,
“என்ன?” என்று கேட்பாள். கூப்பிட்டவர் மறுபடி கூப்பிடாவிட்டால், அவளும் இதை மறந்தே போய்விடுவாள்.
“இங்கே வா; உன் மென்னியை முறிக்கிறேன். வெள்ளிக் கரண்டி எங்கேடீ?” என்று கத்தினாள் பங்கஜத்தம்மாள்.
‘சரி. பூகம்பம் தொடங்கிவிட்டது !’ என்று எண்ணி அடுத்த அறையிலே அப்பா உதட்டைக் கடித்துக்கொண் டார்
பங்கஜத்தம்மாளுக்குக் கோபம் வந்தால் அப்புறம் நடப்பதை எந்தக் கவிஞனாலுங்கூட வர்ணிக்க முடியாது. கைகேயியின் சாகசத்தைக் கம்பர் வர்ணிக்கலாம்: நீலி வசீகரத்தை ஷேக்ஸ்பியர் சித்திரிக்கலாம். அவர்கள் சாமர்த்தியமெல்லாம் இங்கே பலிக்காது. ஒரே ஓர் உதாரணம் வேண்டுமானால் சொல்லலாம். முன் காலத்தில் கிராமத்துக் கூத்திலே,
“பரதமுப்புரி நூலும் சடையும்
பஞ்சாட்சரமும் பரிவுடனே
வேதமான கீதம் ஓதி விச்வாமித்ரர்
தோன்றினார்! தோன்றினார்!! தோன்றினார்!!!”
என் று பாடிக்கொண்டே ‘தொம், தொம், தொம்’ என்று கூத்தாடிக்கொண்டு மேடை மேலே தோன்றுவாரே ஒரு நடிகர், அந்த நடிகருக்குச் சரியான தங்கச்சியோ இந்த அம்மாள் என்று சொல்லும்படி இருக்கும் பங்கஜத்த மாளின் கோபக் கோலம்.
வெள்ளிக் கரண்டி காணாமல் போய்விட்டது. பங்கஜத்தம்மாளுக்குக் கோபம். இல்லை, ஆவேசம் வந்துவிட் டது. அம்மாளுக்குக் கோபம் வந்தால், கொஞ்சும் குதலை மொழியின் லாகிரிக்குச் சிறிதும் இடம் இராதபடி, கைக் குழந்தையின் முதுகிலேதான் முதல் முதலில் இரண்டு அறை விழும். மேளக் கச்சேரி ‘டும்டும்’ என்று தொடங்குவதற்கு முன் ஊத ஆரம்பிக்கும் ஒத்துக்காரனைப்போல,
மூலையிலே உட்கார்ந்து சுரம் வைத்துவிட்டாள் பேபி. அவள் முதுகிலே லய விந்நியாசம் நடந்தாயிற்று என்று இதற்கு அர்த்தம்.
அந்தச் சுருதியோடு கச்சிதமாய் இழைந்தபடி, “ஏ கழுதை கோமளம், வெள்ளிக் கரண்டி எங்கேடீ ?” என்று மறுபடியும் சேட்டாள் அம்மாள்.
இப்போதுதான் கோமளத்துக்கு ஸ்மரணை வந்தது. விஷயம் பெரிய விஷயம் என்று அவள் உணரத்தொடங்கினாள். உணர்ந்தவுடனே சிறிதும் தாமதிக்காமல் பர பரப்புடன் பதில் சொன்னாள்: “எனக்குத் தெரியாதே !”
இது இந்த வீட்டிலே எல்லாருக்குமே மனப் பாட மான சூத்திரம். அண்ணா ராமு, தம்பி முத்து, அலங்காரி கோமளம், அம்மாள் பங்கஜம் உள்பட அத்தனை பேருக்குமேதான் பாடம். இவர்களில் யாரை யார் அசப் பிலே என்ன கேட்டாலும் சரி, முதல் தற்காப்பாகச் சட் டென்று இந்தச் சூத்திரத்தை ஒப்பித்துவிடுவார்கள்.
“ஏண்டா, என் பேனாவைப் பார்த்தாயோ?” என்று ராமுவை அப்பா கேட்டால், “எனக்குத் தெரியாதே” என்ற பதில் வரும். “ஏண்டா முத்து, நீ சாப்பிட் டாயோ?” என்று திடீரென்று கேட்டால், அவனும், எனக்குத் தெரியாதே” என்றுதான் பதில் கொடுப்பான். வெள்ளிக் கரண்டி போன விதம் தனக்குத் தெரியாது என்றாள் கோமளம்.
தான் அதைப் பார்க்கவே இல்லை என்றான் ராமு. அப்படியும் ஒரு சாமான் வீட்டிலே இருந்ததா என்று ஆச்சரியப்படுகிறவனைப் போல் நடித்தான் முத்து.
வெள்ளிக் கரண்டி எந்த மூலை முடுக்கிலாவது கிடக் கிறதா என்று தேடிப்பார்க்கத் தொடங்கினாள் அம்மாள். ‘மானாட, மயிலாட, மழுவாட, புனலாட, மங்கை சிவகாமி யாட என்றபடி, சிவபெருமான் ஆடத்தொடங்கியவுடனே அகில லோகமுமே ஆடியாகவேண்டும். அம்மாள் தேட ஆரம்பித்தால்,ராமு தேட, முத்து தேட, கோமளம் தேட இப்படி எல்லாரும் தேடுவதாகப் பாசாங்கு புரிந்தாக வேண்டும்; புரிந்தார்கள்.
மக்களைச் சொல்லுவானேன்? அடுத்த அறையிலிருந்த அப்பாவே வந்து இந்தத் தேடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். என்றாலும் அம்பலக் கூத்தனின் அடிமுடி தேடிய படலம் மாதிரிதான் விஷயம் முடிந்தது. கடைசி வரைக்கும் வெள்ளிக் கரண்டி அகப்படவில்லை. ஆனால், இதற்கிடையில் பலவிதமான கலாட்டாக்கள் மட்டும் நடந்துவிட்டன.
அப்பாவுக்குக் கண்ணாடிக் குப்பிகளில் அலாதி மோகம். எங்கேயாவது குப்பைத் தொட்டியில் ஒரு குப்பியைக் கண்டாலும் அதை எடுத்து வந்துவிடுவார். விதம் விதமான குப்பிகளைச் சம்பாதித்துத் தனி அலமாரி யில் வரிசை வரிசையாக அவர் வைத்திருந்தார். சாதாரண நிலைமையில் அதை யாரும் திறக்கக்கூடாது. இந்த விசேஷ நெருக்கடியான நிலைமையை, அந்தக் காரியத்துக் குப் பயன்படுத்திக்கொண்டான் ராமு. அப்பா அலமாரியில் வைத்து மூடியிருக்கும் குப்பிகளைப் பார்க்கவேண்டும். என்று அவனுக்கு வெகு நாளாகவே ஆசை. வெள்ளிக் கரண்டியைத் தேடும் அவசரத்தில் அப்பாவின் குப்பிக் கண்காட்சி அலமாரியை அவன் திறந்தான். அழகான மூன்று குப்பிகளைப் போட்டு உடைத்தான். ஆனால். அதை வெளியில் சொல்லாமல் ‘கமுக்கமாய்’ இருந்து
விட்டான்.
அவனைப் போலவே, அம்மாவின் பெட்டியைத் திறப் பதற்கு வாய்த்த அரிய சந்தர்ப்பமாக இதை மதித்தாள் கோமளம்: ஆகிவந்த சங்குப் பாலாடையை அவள் உடைக்கப் போகிற சமயத்தில், நல்ல வேளையாக அம்மா வந்து அவளுடைய பின்னலைப் பிடித்து இழுத்து அப்பால் தள்ளிவிட்டாள். பின்னலில் தொங்கிய ஜடைக்கொச்சு அறுந்ததென்றாலும், பாலாடை தப்பியது.
முத்துவுக்கு இந்தமாதிரி ஆசையெல்லாம் கிடையாது. ‘உள்ளுக்குடைவது’ ஒன்றுதான் அவனுக்குப் பிரியமான காரியம். கரண்டி தேடும் சாக்கில் சமையல் அறையில் புகுந்து உப்பு, புளி, பருப்பு, சர்க்கரை எது அகப்பட் டதோ அதை வாயில் அள்ளிப் போட்டுக்கொண்டு
‘ஹாய்’ ஆக அவன் குதப்பிக்கொண் டிருந்தான்.
வெள்ளிக் கரண்டி இன்னும் அகப்பட்டபாடில்லை. கச்சேரிக்குப் போக அப்பாவுக்கு நாழிகை ஆகிவிட்டது. வீடு நிர்த்தூளிப்படுகிறதே ஒழிய, அடுப்பிலே புகையைக் காணவில்லை. இந்த இழவு கரண்டியைத் தேடித் தேடி அப்பா சலித்துப் போனார்.
“அது தொலையட்டும், சனியன்! சமையல் ஏதாவது ஆகப்போகிறதா, இல்லையா ?” என்று கத்தினார் அவர். ஏன் தொலையவேண்டும்? உங்கள் பொறி உங்களுக்கு; என் பொறி எனக்கு. இந்த அடங்காப் பிடாரிக் குழந்தைகளையும், ‘தாடி பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்புக் கேட்கக்கூடிய உங்களையும் வீட்டிலே வைத்துவிட்டு, என் தங்கையைப் பார்க்கப் போனேன் இல்லையா, தங்கையை! என் புத்தியைத்தான் நோக வேண்டும். எல்லாம் இரண்டு நிமிஷத்துக்குள் வடித்துப் போடுகிறேன். உங்கள் பாட்டைப் பார்த்துக்கொண்டு போங்கள். அதற்காகக் கரண்டி தொலையவேண்டாம்” என்று பொரிந்தாள் அம்மாள்.
அப்பா மௌனமாய் இருக்கப்படாதா?
“ஆமாம். குழந்தைகள் என்ன செய்யும்? வீட்டிலே நீ இருக்கிற போதெல்லாம் மாத்திரம் என்ன வாழ்ந்தது? ஒரு பண்டத் துக்கு ஓர் இடம் என்று இந்த வீட்டிலே கிடையாது. எதுவும் எங்கே வேண்டுமானாலும் இறையும்; யாரும் எதை வேண்டுமானாலும் தொடுவார்கள். இந்தத் தாறுமாறுகளையெல்லாம் உன்னைப் பார்த்துத்தானே குழந்தைகள் கற்றுக்கொண்டன ?” என்று சொல்லிவிட்டார்.
அம்மாளுக்கு வந்ததையா கோபம், ரௌத்ராகாரமாக! சண்டித்தனமான வக்கீல்களைப்போல, அப்பாவின் வார்த்தைகளில் ஒரே ஒரு வாக்கியத்தை மாத்திரம் பிடித் துக்கொண்டாள்; அதை ‘எடிட்’ செய்துகொண்டாள்: “நீ இருக்கச்சே இந்த வீடு எப்படி வாழும்?” என்று அதற்கு உருக்கொடுத்தாள்; முன் பின் வாக்கியங்களைக் கைவிட்டாள்; சரமாரியாக ‘ஆர்குமெண்ட்’ செய்யத் தொடங்கிவிட்டாள்.
“ஆமாம், நான் இருக்கப்படாது. இப்படி இடிபட்டுக் கொண்டு, உயிர் வாழ்ந்து எனக்கு என்ன ஆகவேண்டும்? ‘நீ இருக்கச்சே. நீ இருக்கச்சே!’ என்று ஏன் இப்படிக் கரிக்கிறீர்கள்? நான் போகிறேன்; தொலைகிறேன். அப்புறம் எவளாவது ஒருத்தி வருவாள் !……”
”என்னடி இது? எட்டுக் குழந்தைகளைப் பெற்ற பிறகா?…..” என்று அப்பா தமாஷ் செய்ய முயன்றார்.
“அதனால் பரவாயில்லை. உங்கள் தாடி நரைத்தால் என்ன? மீசை நரைத்தால் என்ன? அதுதான் ஸேப்டி ரேஸர் வாங்கி வைத்திருக்கிறீர்கள். மழ மழ என்று முக க்ஷவரம் செய்துகொள்ளுங்கள். குழந்தையின் டாயிலெட் பவுடர் இருக்கிறது. அதைப் பூசிக்கொள்ளுங்கள். மன்மதன் ஆகிவிடுகிறீர்கள். ஆனால் ஆணுக்கு அறுபது வயசானாலும் ஆண்மை போகாது….
‘இவள் மூலைக் கோடு பாய்கிறாள். இவளிடம் கேலி பேசிப் பயனில்லை. நயமாய்ச் சொல்லிப் பார்ப்போம்’ என்று எண்ணினார் அப்பா. “அதற்கில்லையடி. ஒரு கரண்டிதானே? போனால் போகட்டும். அதோடு உயிரை விட்டுவிடுவதா?” என்றார்.
“ஓஹோ! நான் வாங்கிய கரண்டிதானே ? வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி நான் வாங்கிய கரண்டி போகட்டுமே; உங்களுக்கென்ன? அன்றைக்கு உங்கள் பவுண்டன் பேனா போனபோது எப்படியெல்லாம் குதித்தீர்கள்? பகவத் கீதைப் புஸ்தகத்தில் ஓர் ஏடு கிழிந்தது; உலகமே அஸ்தமிச்சுப் போச்சு என்றீர்களே; அன்றெல்லாம் வீடு வீடாகவா இருந்தது? பாரத யுத்தம் நடந்த ரணகளம் மாதிரி ஆகிவிட்டதே. இன்றென்ன? என் வெள்ளிக் கரண்டி போச்சு. ‘நீ இருக்கச்சே, நீ இருக்கச்சே’ என்று கரிக்கிறீர்கள்: உறுமுகிறீர்கள்…’
அப்பா ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டார். “குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் எப்படி வரும்? நாம் செய்வதைப் பார்த்து எதையும் அவை பழகுகின் றன. நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று சொன் னேன். உன்மேலே குற்றமா சொன்னேன்?” என்று இதமான குரலில் ஆரம்பித்தார்.
“என்னைப் பார்த்து அவை கெட்டுத்தான் போகும். இதோ பாருங்கள்: சாயங்காலம் நீங்கள் ஆபீசிலிருந்து வருவதற்குள் நான் எதையாவது தின்று எப்படியாவது தொலைந்து போகிறேன். நீங்கள் சௌக்கியமாக வாழுங் கள்: கவலையற்ற வாழ்க்கை ……”
இந்த ரீதியிலே அவள் பேச்சு மேல் ஸ்தாயிக்குப் போய்க்கொண்டிருந்தது. ஆனால், இத்தனைக்கு நடுவிலும் அடுப்புக் காரியத்தை அவன் விடவில்லை. சமைத்து விட் டாள். கோபாலசாமி வர வரப் பரிபூர்ண மோன நிலையை அடைந்தார். சாப்பிட்டார். கச்சேரிக்குக் கிளம்பிவிட்டார். போகும் வழியெல்லாம் அவருக்கு என்ன என்னவோ சிந்தனை எழுந்தது. மனத்தில் நிம்மதியே இல்லை. வெள்ளிக் கரண்டி எப்படிப் போச்சு? அது போனால்தான் என்ன? அதற்காகப் பங்கஜம், ‘உயிரையே விட்டுவிடுகிறேன்’ என்கிறாளே, ஏன்? இரண்டையும்பற்றிய சிந்தனையில் கிளை எண்ணங்கள் பல எழுந்தன. எல்லா எண்ணங்களும் ஒன்றோடு ஒன்று குழம்பின ; தெளிவாக இல்லை.
இவர்களுடைய வீட்டுக்கு யாரும் வருவதில்லை. அக்கம் பக்கத்து வீட்டுக்காரி எவளுடனும் பங்கஜம் நெருங்கிப் பழகமாட்டாள். வேலைக்காரிகூட இல்லை. கரண்டி எப்படி மாயமாய் மறைந்தது?
‘உயிரை விடுகிறேன்’ என்று பங்கஜம் பயமுறுத்தி யதற்கு இந்தக் கரண்டி போனதுமட்டும் காரணமாக இருக்காது. முப்பது வருஷங்களாகத் தம்முடன் வாழும் ஒருத்திக்குத் தம்மிடம் எத்தனையோ குறைகள் இருக்க லாம். உள்ளத்தின் அடித் தளத்தில் புதைந்து கிடக்கும் எண்ணங்களெல்லாம், உணர்ச்சி கொந்தளிக்கும்போது, அறுபட்டு விடுபட்டு அலைபட்டு மேலெழுந்துவிடுகின்றன. இந்தக் கரண்டி தொலைந்தது ஒரு வியாஜம்; அவ்வளவே. கச்சேரிக்குப் போய் நாற்காலியிலே உட்கார்ந்தார் கோபாலசாமி. அங்கேயும் இந்தச் சிந்தனை அகலவில்லை. ஒரு வேலையும் ஓடவில்லை.
கரண்டி காணாமற் போனதற்குச் சாத்தியமான நேர்க் காரணம் அவருக்குப் புலப்படவேயில்லை. அது வீட்டை விட்டு வெளியே போயிருக்கவே முடியாது என்று மட்டும் தோன்றியது. மூலைமுடுக்கெல்லாம் குடைந்து பார்த்தாயிற்று. ஆனால், ஒன்று; நேற்று இவர் கச்சேரிக்குப் புறப்பட்டபோது ஒற்றைப் பிராம்மணர் எதிரே வந்தார். அவருக்குப் பின்னால் ஓர் அமங்கலி வந்தாள். அவள் தான் தினந்தோறும் இவர் புறப்படுகிற சமயம் பார்த்துக் கணக்காக எதிரே வருகிறவள் ஆச்சே! எப்படியானாலும் நேற்று மகா மோசமான அபசகுனம். அதன் பலன் நேற்றே நிகழ்ந்திருக்கிறது; ஆனால் தெரியவில்லை. இன்று தெரிந்துவிட்டது!
சட்டென்று கோபாலசாமிக்குச் சிரிப்பு வந்தது. ‘வெள்ளிக் கரண்டியும் பகவத்கீதையும் ஒன்று என்று பங்கஜம் சொல்லிவிட்டாளே!’ என்று முணுமுணுத்துக் கொண்டார். அவளுக்குப் பகவத்கீதையின் அற்புத
தத்துவங்களைப்பற்றி என்ன தெரியும்? சரிதான், இவ ருக்கு மட்டும் வெள்ளிக் கரண்டியின் பெருமையெல்லாம் தெரிந்துவிட்டதோ? எல்லாம் பாசத்தின் விளைவுதான். பிராணிகளுக்குள்ளே மகா விசித்திரமான பிராணி மனிதன். தெருவிலே, மரத்தடியிலே, குடிசையிலே, மாளிகையிலே எங்கும் அவன் வாழ்ந்துவிடுவான். இன்ன இடந்தான் வேண்டும் என்ற நிச்சயம் அவனுக்கு இல்லை. வெள்ளிக் கரண்டியின் உடைமை உணர்ச்சியிலிருந்து பகவத்கீதையின் கருத்தழகு வரையில் எதுவும் அவன் மனத்துக்கு இன்பம் தந்துவிடும்.
ஆனால், அந்த வெள்ளிக் கரண்டிக்காக அவள் உயிரையே விட்டுவிடுவதா? உணர்ச்சி கலங்கிவிட்டபோது, மனிதன் எனன அசட்டுத்தனமான காரியத்தையும் செய்துவிடுவான். ‘ஐயோ! அந்தப் போரிக் பவுடரை எடுத்துப் பெட்டியில் போட்டுப் பூட்டி வைக்காமல் வந்து விட்டேனே! அதை எடுத்துத் தின்றிருப்பாளோ? வேறு என்னவாவது அசட்டுக் காரியம் செய்திருப்பாளோ?” என்று திடீரென்று கோபாலசாமி எண்ணினார். அவர் உள்ளம் விதிர்த்தது.
மாலைவரைக்கும் இதே யோசனை தான். வீட்டிலே என்ன நடந்திருக்கிறதோ? பங்கஜம் என்ன செய்திருக்கிறாளோ? குழந்தைகள் எப்படிக் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கின் றனவோ? என்ன விபரீதம் நேர்ந்திருக் றதோ? எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பெரிய கவலை அவரைச் சட்டென்று வந்து பற்றியது. வீட்டிலே ஏதாவது மோசம் நடந்திருப்பதாக வைத்துக்கொள்வோம். அது சம்பந்தமான செலவுக்குப் பணம் வேண்டுமே? அதற்கு என்ன செய்வது?
இந்தப் பிரகாரமாகத்தானே மகத்தான பல கவலைக்ளுடன் வீட்டுக்குத் திரும்பினார் கோபாலசாமி. தெருக் கோடியை எட்டிவிட்டார். அங்கிருந்தபடியே வீட்டு வாசலைப் பார்த்தார். அவர் கவலைப்பட்டதற்கு ஏற்றாற்போல், அங்கே வீட்டுப் பக்கத்துச் சந்து முனையில் ஒரு சிறு கும்பல் நின்றது. அவர் மார்பு திக்குத் திக்கென்று அடித்துக்கொண்டது. விடுவிடென்று வீட்டுக்கு வந்தார். கும்பலில் உள்ளவர்கள் கசமுச கசமுச என்று தேர்வடம் பிடித்த ஜனங்களைப் போல ஆரவாரம் செய்துகொண் டிருந்தார்கள்.
அக்கம்பக்கம் பார்க்காமல் விர்ரென்று வீட்டுக்குள்ளே பாய்ந்தார் கோபாலசாமி. உள்ளே அவளைக் காணவில்லை. அவருக்கு வயிறு ‘பகீர்’ என்றது. ராமு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறான். கோமளம் நர்த்தன மாடிக்கொண்டிருக்கிறாள். முத்து குழாயடியில் பெரிய அண்டாவைப் போட்டுப் பரபரப்புடன் ஜலம் பிடித்துக்கொண் டிருக்கிறான். பேபி ஒரு தகரத்தை வைத்து ‘டொக், டொக்’ என்று அடித்துக்கொண்டிருக் கிறாள்.
அப்பாவைக் கண்டவுடனே, ‘”அப்பா – அ-ப்-பா-‘ என்று கத்திக்கொண்டே ஓடி வந்தாள் பேபி அவளைக் கையிலே தூக்கியபடி, “எங்கேடா அவள்? எங்கே?” என்று கேட்டார் கோபாலசாமி.
அதற்குப் பதில் சொல்லவில்லை யாரும். “அப்பா, அப்பா, வெள்ளிக்கரண்டி அகப்பட்டுவிட்டது” என்றாள் கோமளம்.
‘அது எப்படியாவது தொலையட்டும். எங்கே அம்மா ?”
“வாசலில் அவளை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று மெதுவாகக் கேட்டான் முத்து.
‘வாசலிலா? அவளை அதற்குள் அங்கே தூக்கிப் போட்டுவிட்டார்களா?” என்று எண்ணினார் கோபால சாமி. “நீ எதற்கடா ஜலம் பிடித்துக்கொண்டிருக் கிறாய்?” என்று கேட்டார். கழுவிக் குளிப்பாட்டுவதற்காக இருக்குமோ என்பது அவர் சந்தேகம். ஆனால், அதை வாய்விட்டுக் கேட்கப் பயம்.
“சாக்கடையில் கொட்டுவதற்கு?” என்றான் முத்து. கோபாலசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. “அங்கே ஏன் கொட்டுகிறாய்? அம்மா விழுந்துவிட்டாளா? காயம் பட்டதா? ரத்தமா ?” என்று படபடப்புடன் கேட்டார்.
“என்ன அப்பா உளறுகிறீர்கள்? சாக்கடையிலே யிருந்து கரண்டி வெளியே வரவேண்டாமா? அதற்காகத் தான் கொட்டுகிறேன்” என்றான் முத்து.
“அம்மா?”
“அவள் வாசலிலே நிற்கிறாள். அந்தக் கும்பலைக் கண்காணித்துக்கொண்டு நிற்கிறாள்” என்று விளக்கினான் முத்து.
‘அப்பாடா! இவ்வளவுதானா? என்னவோ ஏதோ என்று பயந்துவிட்டேன்’ என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார் அப்பா. பேபியைத் தூக்கிப் பிடித்து முத்த மிட்டுக்கொண்டார்.
“மூடிக் கட்டியிருக்கும் சாக்கடை யில்தான் கரண்டி புகுந்திருக்கிறது என்று எப்படிக் கண் டீர்கள்?” என்று கேட்டார்.
“பாதி தூரத்தில் உள்ள சாக்கடை ஓட்டையின் கல்லைத் தூக்கிப் பார்த்துக்கொண்டே தண்ணீரை விட் டோம். அங்கே கரண்டி வந்தது. பிடிக்கப் போகுமுன் தண்ணீரின் வேகம் அதை அடித்துக்கொண்டு போய்விட் டது. இப்போது கடைசி ஓட்டையைத் திறந்து வைத்து விட்டு எல்லாரும் ஜாக்கிரதையாகக் காவல் காத்துக் கொண்டு நிற்கிறார்கள். நான் தண்ணீர் விடப் போகிறேன் ” என்றான் முத்து.
விஷயம் இதுதான்; கச்சேரிக்குக் கோபாலசாமி போன பிறகு, பங்கஜம் குழந்தைகளை மேலும் நன்றாக விசாரித்திருக்கிறாள்: தீர்க்கமாக யோசித்துப் பார்த்திருக்கிறாள். கரண்டியைப்பற்றிய துப்புத் துலங்கிவிட்டது.பாத்திரங்களைத் தேய்த்த கோமளம் எங்கேயோ ஞாபக்மாகக் கரண்டியைச் சாக்கடை வாயில் போக விட்டுவிட் டாள்! அதை வெளியே எடுப்பதற்குத் தாயும் மகன் முத் துவுமாக இந்த யுக்தியைக் கடைப்பிடித்திருக்கிறார்கள். முதலில் தண்ணீரை மாத்திரம் விட்டபோது கரண்டி வரவில்லை. பிறகு ஒரு சிறிய செங்கல்லையும் உள்ளே உருட்டிவிட்டான் முத்து. அப்புறம் தண்ணீரை விட் டான். உருண்டோடிய கல், தனக்கு முன் போன கரண் டிக்கும் கல்தாக் கொடுத்துத் தள்ளிச் சென்றிருக்கிறது. ஆனால், சமயத்தில் இவர்கள் ஏமாந்துவிட்டார்கள். அடுத்த ஓட்டையில் கரண்டியைப் பிடிக்க இப்போது முயற்சி நடக்கிறது.
இந்தப் பிரமாதமான முயற்சியில் இப்போது கோபாலசாமியும் வெகு உற்சாகமாகக் கலந்துகொண் டார். கடைசியில் வெள்ளிக் கரண்டி அகப்பட்டுவிட்டது.
கல்மோதியதாலும் உருண்டு வந்ததாலும் நசுங்கி நெளிந்து நொந்திருந்தது அதன் ரூபம். தப்பியோடிய திருடனைத் துரத்தி அடித்துப் பிடித்தால் அவன் என்ன பரிதாபக் கோலத்தில் இருப்பானோ அப்படித் தோன்றியது. ஆனாலும், முப்பது ரூபாய் பெறுமானமுள்ள அந்த வெள்ளிக் கரண்டி அகப்பட்டுவிட்டது.
பங்கஜத்தம்மாளின் முகத்திலே புன்சிரிப்பு மலர்ந் தது. இனி அவளுக்கு உயிர் வாழ்க்கையிலே வெறுப்பு இல்லை. சாசுவதமாக நீடூழி காலம் வாழ்வாள். ஆனால், கோபாலசாமிக்குத்தான் இனி ஒரு ரதி வரப்போகிற ‘சான்ஸ்’ அடியோடு நழுவிவிட்டது.
தி.ஜ.ர/காக்கை ராஜ்யம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

அடிப்பட்ட திருடன் போல, பகவத் கீதை, சீதேவி மூதேவி வித்தியாசம் தெரியாத அம்மாள், அவளை இதற்குள் தூக்கிப் போட்டு விட்டார்களா என ஒரே சிரிப்பு நெடி , இல்லை, வெடிகள். கடைசி வரி அருமை, ” “ஆனால், கோபால சாமிக்குத்தான் இனி ஒரு ரதி வரப் போகிற ‘சான்ஸ்’ அடியோடு நழுவிவிட்டது”. ஹா ஹா ஹா
வணக்கம்
மிக நீண்ட காலத்திற்கு பிறகு படித்த நல்ல கதை.
ஒரு மத்தியதர குடும்பத்தின் வீட்டிற்குள் விருந்தாளியாக சென்று வந்த அனுபவம்.
சண்டை சச்சரவுகள் வாட்டம் வாடல் வாஞ்சையென நடுத்தர வாழ்க்கையில் அத்தனை அக்கப்போரும் இருக்கும். ஒவ்வொரு வரையும் விட்டுக்கொடுக்காத அந்த அன்பு கரிசனம் யாவும் மேட்டுமைக்குடியில் வாய்ப்பில்லை.
ஏழ்மையில் வாடும் எளிய குடும்பங்களில் மற்றும் நடுத்தர குடும்பங்களின் நசுங்களிலும் எத்தனை வாடலிலும் அன்பு பிரவாகமெடுக்கிறது எப்போதும்.
குடும்ப வாழ்வு சிதையாதது இந்தியாவின் பலம். அது கரையான் புற்றைப்போல கரைத்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் இக்கதை ஒரு நல்ல பதிவு.
நன்றி
வாழ்த்துகள்.
வாழிய நலம்.
சூழ.
நன்றி.
பேரன்புடன்
ரவி அல்லது.