தி.ஜ.ர/மளிகை நிபுணர்

கருங்கோணத்திலேயே, முனா பனா நாவன்னா என்ற விலாசம் மகா பிரபலமானது. முனா பன நாவன்னாவில் ஒரு மாசம் வேலை பார்த்தவன் என்றால், எப்பேர்ப்பட்ட கோடீசுவர சௌராஷ்டிர முதலாளியானாலும் சரி, செட்டியார் முதலாளியானாலும் சரி, பரம சந்தோஷமாக வேலைக்கு அமர்த்திக்கொள்வார்கள்.
முனா பனா நாவன்னா ஒரு சாமான்ய மளிகைக் கடை தான்.என்றாலும் என்ன; அதன் அதிபர் நாகராஜையர், வியாபார விஷயத்தில் அசகாயசூரராம். சூரரோ இல்லையோ, அவரிடம் பயிற்சிபெற்ற பையன்கள் மட்டும் சோடை போவதே யில்லையாம். அதனால்தான், சுந்தரேச னின் ஒன்று விட்ட சிற்றப்பா, அவனை முனா பானா நா வன்னா கடையில் அமர்த்த விரும்பினார்.
சுந்தரேசன் பத்தாம் வகுப்பு வரையில்தான் படித்தவன். ஆனால் பி. ஏ. கணக்கு, இங்கிலீஷ் எல்லாம் அவனுக்குத் தெரியும். அவன் புத்தகதாசன். படிப்பிலே மகா ஆர்வம். மற்றவர்களைப் போல, வாழ்க்கையிலே, பெரியீ பெரிய டெபுடி கலெக்டர், திவான், மந்திரி உத்தி , யோக ஆசையால் அவன் படிக்கவில்லை.படிப்பதிலே புதிய புதிய ஞானத்தை அடைவதிலே, அரிய அரிய இலக்கியங்களின் உணர்ச்சி வெள்ளத்தில் புரள்வதிலே ஓர் ஆனந்தம் அவனுக்கு. விட்டில் பூச்சியை இழுக்கும் விளக் குப் போலப் புத்தகங்கள் அவனை இழுத்து விடுகின்றன. விளக்கு விட்டில் பூச்சியைக் கொல்லும். புத்தகம் அவன் ‘நான்’ என்ற கங்காரத்தைக் கொன்றுவிட்டது. உணர்ச்சியே அவனுக்குப் போய்விட்டது. உலகத்தை ஞானமயமாக அவன் கருதினான். தான் குடிப்பதற்காகவே சமுத்திரம் சிருஷ்டியாகியிருப்பதாக ஒரு குருவி கருதுவது போல, உலக ஞானமெல்லாம், தான் பருகுவதற்கே சூழ்ந்திருப்பதாக அவன் மதித்தான். அந்த இளம் பருவத்திலே. ஞானமும் மாயையும் ஒரு நாணயத்தின் இரண்டு புறங்கள்: அற்ப மானிடனுக்கு, ஞானத்தின் இன்பம் மாயையிலும் கிடைக்கும் என்ற ரசவாதம் அவன் அறியாதது. யாரும் ருசுப்பிக்காத மோட்சம் வேறாக இருக்கலாம். உணர்ச்சி அளவிலே, இன்பம் இரண்டிலும் ஒன்றுதானே? அது நாகாராஜையருக்குத் தெரியும்; தெரி யுமோ தெரியாதோ, அவர் அநுஷ்டானத்தில் இருக்கும் தத்துவம் அதுதான். ஞானமும் மாயையும் பலாபலம் பரீட்சை பார்ப்பது போல, சுந்தரேசனும் நாகராஜையரும் சந்தித்தார்கள்.
கிழவனார் சுந்தரேசனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார். அவருடைய நெரித்த புருவத்தையும், வயிற்று வலிக்காரன் மாதிரி சிடுத்த முகத்தையும் கவனித்த சுந்த ரேசன், “எந்தப் புத்தகத்தில் இவர்போன்ற பாத்திரத் தைப்பற்றிப் படித்தோம்?” என்ற யோசனையில் ஆழ்ந்து விட்டான்.
“தம்பி, உனக்கு அப்பா அம்மா இருக்காளா?”
‘இல்லை” என்று சுந்தரேசனின் உதடு சொல்லிற்று; “இருந்தால் இங்கே ஏன் வருகிறேன்?” என்று மனசு ஜபித்தது.
”உனக்கு என்ன தெரியும்?” என்றார் கிழவர்.
‘எனக்கு என்ன தெரியும்? – என்னதான் தெரி யும்?’ தனக்குத் தானே இந்தக் கேள்வியை முணு முணுத்துக்கொண்ட சுந்தரேசன் திடுக்கிட்டான். ஒன் றும் தெரியாதென்று சொல்லலாமா? சொன்னால். …?
“என்னடா முழிக்கிறே? அதோ கையிலெ வெச்சிருக் கயே, அதென்ன புத்தகம்?”
‘இங்கிலீஷ் நாவல்.”
இடி முழக்கம் கேட்ட சர்ப்பம் போல, “நாவலா?… அந்தக் குட்டி இப்படித்தான் நாவல் பித்துப் பிடிச்சு வீட் டுக்காரியமே பாக்கமாட்டேன்னு கழிசடையாப் போச்சு. அப்பா, வீட்டிலிருக்கிறது போரும். கடைக்கி வேறே வேண்டாண்டாப்பா. அதெ முதல்லெ உங்க சித்தப்பா கையிலே குடுத்து, கொண்டுபோகச் சொல்லு” என்று கண்டிப்பாய்க் கட்டளை இட்டார் கிழவனார்.
வேண்டா வெறுப்போடு, நாவலைச் சிற்றப்பா கையில் கொடுத்தான் சுந்தரம்.
“சரி;நீங்க போங்கோ. பையனை நான் பாத்துக்க றேன்” என்று சிற்றப்பாவை அனுப்பினார் கிழவர்.
பிறகு, சுந்தரேசனைப் பார்த்து, “இந்தா, ஒரு கணக் குப் போடறேன். அதைச் சொல்லு பார்க்கலாம். பாரம் 74 ரூபாயானால், 4 சேர் என்ன விலை?” என்று சொல்லி விட்டு, ஏதோ வேறு ஜோலியைக் கவனித்தார். இரண்டு நிமிஷம் கழித்துத் திரும்பவும் சுந்தரேசனை நோக்கி, “என் னப்பா, முழிச்சிண்டு நிக்கறே? கணக்குப் பாத்தூட் டியா?” என்று கேட்டார்.
”காகிதம், பென்ஸில் இல்லையே” என்றான் சுந்தரேசன்.
“அழகுதான் போ: காகிதம் பென்ஸில் வேறே வேணுமா இதுக்கு? ரொம்பப் புத்திசாலிதான் போலே ருக்கு.’
மறுபடியும் கிழவனார் வேறு பக்கம் திரும்பி விட்டார்
சுந்தரேசனுக்கு வெட்கம், துக்கம், ஆத்திரம், வெறுப்பு எல்லாம் மாறி மாறி வந்தன. “உன் வேலையு மாச்சு: நீயுமாச்சு” என்று சொல்லி, ஓடிவிடலாமா என்று கூட நினைத்தான். ஆனால், அங்கே போனால், சிற்றப்பா சும்மா இருந்தாலும், சின்னம்மாவின் கொனஷ்டை அம்பு கள் இருதயத்தைப் பிளக்குமே! கணக்கு ஒன்றும் கஷ்டமில்லை, எளிதிலேயே போட்டுவிடலாம். ஆனால்,”எப்ப டிப் போட்டாய்?” என்று கேட்டால், கிழத்துக்கு என்ன பதில் சொல்லுவது? தன் வழி கிழத்துக்குப் புரியாது. அதற்குத் தெரிந்த சுலப வழி ஏதோ இருக்க வேண்டும். அதையும் கண்டு பிடித்தாலொழியக் கிழத்துக்குத் தப்ப முடியாது.அதனால் வழியையே கண்டுபிடிக்கும் வேலையில் முதலில் இறங்கினான். பாரத்துக்கு 160 வீசை. ரூபாய்க்குப் பதினாறு அணா. பாரம் ஒரு ரூபாய் என்றால், வீசை 1/10 அணா. சேர் 1/50 அணா. எனவே, கிழத்தின் கணக்குக்கு விடை 74×4:50 அணா.
‘அஞ்சணா பதினொரு தம்படி” என்றான் சுந்தரேசன், இதைக் கண்டுபிடிக்க இத்தனை நாழியா? எப்பிடிக் கண்டுபிடிச்சே ” என்றார் கிழவனார்.
தான் வழியையே கண்டுபிடித்த சிரமத்தைச் சொன் னான் சுந்தரேசன்,
“ஊஹும்! பெரியவா காலத்திலேருந்து வரவழி யையே நீ கண்டு பிடிச்சுட்டையோ! பலே புரட்டனாயிருப்பே போலேருக்குகே.”
அருவருப்புடன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டான் சுந்தரேசன்.
“தம்பி, உனக்கு வேலெ சுலபத்திலே வராதுபோலேருக்கு. இந்த எழுத்தாணியெ வெச்சிண்டு,ஓலெலெ எழுதப் பழகிண்டிரு” என்றார் கிழவனார்.
கிரீச் கிரீச்! காலை முதல் சாயங்காலம் வரை இதே ஓலை எழுத்து. இப்படி நான்கு நாள் கழிந்துவிட்டது.
கடையிலோ புதிது புதிதாய்ப் பையன்கள் அமர்ந்த வண்ணமாயிருக்கிறார்கள். எல்லாம் ஒரே அமர்க்களந்தான்.
“ஏன்,அண்ணா, வர பையன்களையெல்லாம் அமர்த்திண்டே இருக்கியளே? உங்க கடை வந்ததெல்லாம் கொள்ளும் மகாராஜன் கப்பலா? இத்தனை பையன்கள் ஏதுக்கு?” என்று கிழவனாரை ஒரு சிநேகிதர் கேட்டார்.
“தீபாவளி சமயமோல்லியோ. பசங்க வேலெ செஞ்சுட்டுப்போறான். எவன் வந்தாலும் வாண்டாம்னு என் வாயாலே நான் சொல்லப் போறதில்லை. ஒரு மாசம் வெலெ செய்யறான். சம்பளமில்லேன்னு கையை விரிச்சா, தானே போயிடறான்” என்றார் வியாபார அசகாய சூரர். இதைக் கேட்ட சுந்தரேசன் திடுக்கிட்டான். இப்போதும் வீட்டுக்கு எழுந்தோடிவிடலாம். ஆனால்,சிற்றன்னை
”என்னப்பா,சும்மா இங்கெயெ ஒக்காந்திருக்கியே. உன் மாதிரி பையன்களெல்லாம் சிட்டு மாதிரி வேலெ செய்யறாளே; ஒனக்கு வெக்கமா இல்லே? உள்ளே போய், என்ன சாமான் வாங்கறாள்னு ஜாப்தாப் போடேன்.”
எப்போது பார்த்தாலும் இந்தச் சனியன் முகத்திலே விழித்துக்கொண்டிருப்பதைவிட உள்ளே போவது மேல் என்று நினைத்து உள்ளே போனான் சுந்தரம். ஆனால், எப் படி ஜாபிதா தயாரிப்பது ? உளுந்து என்கிறான், வெல் லம் என்கிறான், ஏழுபேர் சூழ்ந்துகொள்கிறார்கள். ஒரே கந்தரகோளமாயிருக்கிறது. ஒன்றும் புரியாமல் குறுக்நெடுக்குமாய்ப் போய்க்கொண்டிருந்தான்.
“சுந்தரம்!”
சுந்தரம் கிழவனாரிடம் ஓடினான். “இந்தா, இவாளுக்கு உளுந்து வேணுமாம். முதல் நெம்பர்ச் சரக்கு இரண்டாம் நெம்பர்ச் சரக்கு இரண்டிலேயும் சாம்பிள் கொண்டுவா” என்றார்.
சுந்தரம் உள்ளே சென்றான். ஒரே சரக்குத்தான் இருந்தது. ஸாம்பிள் எடுத்துவந்தான்.
“முதல் நம்பர்ச் சரக்கு எங்கே?”
“ஆகிவிட்டதாம்.”
வந்தவர் போய்விட்டார்.
கிழவனாருக்கு மகாகோபம். “அட மூடமே! இதே சரக்கைக் கொஞ்சம் இடது கையிலெயும், கொஞ்சம் ஊதிப்புட்டு வலது கையிலெயும் எடுத்துண்டுவந்தாப் போறது. இதுகூடவா சொல்லித் தரணும்?
சுட்டுப்போட்டாலும் ஒனக்கு வேலெ வராது போலே இருக்கேடா?” என்று கூச்சலிட்டார்.
வருத்தத்தோடு கண்ணை மூடினான் சுந்தரம். கண்ணிமைக்குள்ளே சின்னம்மாவின் ஆவேச உருவம்தான் தரிசனமளித்தது.
சுந்தரம் கண்ணைத் திறந்தபோது, சின்னம்மாவே நேரே வந்துவிட்டாள்.
“ஏண்டா சுந்தரம், இதானா நீ இருக்கிற கடை” என்று கேட்டாள் அவள்.
‘அதான் இருக்கேனே, தெரியலையா?”
“அடடே! பொஸ்தகப் புழுவாயிருந்த நோக்குப் பேசக்கூடத் தெரிஞ்சு போச்சே. எங்கேடா ஒன் முதலாளி?”
நாகராஜையரை நோக்கித் தலையை ஆட்டிச் சமிக்ஞை செய்தான் சுந்தரேசன்.
இந்த அம்மணியைப் பார்த்தவுடனே நாகாராஜையருக்கு என்னவோ விளக்கிச் சொல்ல முடியாத ஒரு திகில் ஏற்பட்டது. அவள் கேள்விகளின் தோரணையும், பார்வையின் பிரகாசமும், நடையின் கம்பீரமும் அவருக்கு ஒரு வித உதைப்பை உண்டாக்கின. அப்போது அவரை வெளிப்படையாய்ச் சுந்தரேசனைப்பற்றி யாராவது கேட் டிருந்தால், “அவன் பரம கெட்டிக்காரன். அவனுக்குச் சம்பளம் போட்டு வைத்துக்கொள்கிறேன். இந்த அம்மாளை மாத்திரம் கொஞ்சம் தயவு செய்து போகச் சொல் லுங்களேன்” என்று நிச்சயமாகவே கெஞ்சியிருப்பார். அவ்வளவு ஆர்ப்பாட்டமா யிருந்தது அவளுடைய நடப்பு.
சுந்தரம் சமிக்ஞை செய்த கிழவனாரை அவள் திரும் பிப் பார்த்தாள். அடக்கமுடியாத ஒரு புன்சிரிப்பு அவள் முகத்திலே பூத்தது. அது மல்லிகைப் பூவின் புன்சிரிப்பல்ல; ஊமத்தம்பூவின் புன்சிரிப்பு. இந்தத் தாத்தாவாடா? தலையெல்லாம் நரைச்சுப் போச்சே. ” ஏன் தாத்தா? எங்க சுந்தரம் இடிச்ச புளிமாதிரிதான் இங்கேயும் இருக்கானா? இல்லை, ஏதாவது வேலை செய்கிறானா? இவனெ நாங்க என்ன பண்றதூன்னு தெரியலே, அதான் உங்ககிட்ட அனுப்பிச்சோம். ரொம்பப் புத்திசாலின்னு பள்ளிக்கூடத்துலே பேரு. வாத்தியாரெல்லாம் தலெலெ வெச்சுண்டு கொண்டாடரா.
துரைமாதிரிதான் வளர்த்தா அவா அப்பா, அம்மா. குடுத்து வெச்சது அவ்வளவுதான். போயிட்டா” என்று கொஞ்சம் கண்ணைத் துடைத்துக்கொண்டாள். “எங்க கிட்ட வந்தான். வேலெ தான் ஒண்ணும் செய்யத் தெரியலே. ஆனா, மகா சத்தியசந்தன். தர்மபுத்திரன் மாதிரி தங்கக்கம்பி. லோகத்துக்கு இது சரிப்படுமோ? ரெண்டு பொய்தான் சொல்ல வேண்டியிருக்கும்…” இப்படியே கால்மணி நேரம் பேசி முடித்தாள்.
“அம்மா,உங்களெப்பார்த்தது ரொம்பச் சந்தோஷம். அதோ அந்தப் பெஞ்சி மேலே ஒக்காருங்கோ-யாருடா கந்தா ! ஒரு ஸோடா வாங்கிண்டு வாடா” என்றார் கிழவனார்.
‘அதெல்லாம் வாண்டாம், தாத்தா. அவசரமாகப் போகணும் நான். தீபாவளிக்குக் கடை சாமான் வாங்கணும். அதுக்காகத்தான் வந்தேன். சுந்தரம் இங்கே இருக்கச்சே, வேறே கடைக்குப் போக மனசு வரல்லே..
“அடாடா! போவாளோ அப்பிடி? சுந்தரம்,சித்தம மெயெக் கேட்டு ஒரு ஜாபிதா தயார்பண்ணு…” என்றார் முதலாளி.
சுந்தரம் ஓலை, எழுத்தாணியை எடுத்து முஸ்தீப்பாவதற்குள், அவனுடைய சின்னம்மா, “ஜாபிதா என்கிட்டெயே இருக்கு” என்று ஒரு கடிதாசுத் துண்டைநீட்டினாள். அரிசி பருப்பு முதல் கடுகு திப்பிலி வரையில் ஒரு வீட்டுக்கு ஒரு மாத காலத்துக்கு வேண்டிய சகல சாமான்களும் அதில் அடங்கியிருந்தன.
ஆனால், அந்தச் சாமான்கள் தயாராகும் போது, “சே! அரிசி கட்டி தட்டிருக்கு. ஹும்! இந்தச் சோத்தை நாய் கூடச் சாப்பிடாதே. உளுந்தென்ன உளுத்துக் கெடக்கறதே! பருப்பு முளைக்கட்டினதா, முளைக்கப் போட்டதா தெரியலையே! இதென்ன வெல்லம் இது! வெல்லமுன்னாத் தித்திக்கும் கண்டிருக்கேன்; இதென்ன ஒரே யடியாப் புளிக்கிறது. என்ன சளிப்பு…!” இப்படியே அவள் பல சாமான்களுக்கும் துசுக்குச் சொல்லி நிராகரித் தாள். சில சாமான்கள்தான் மிஞ்சின. ஒரு சிறு கூடை யில் அவை அடங்கிவிட்டன.
“தாத்தா, இதுக்கெல்லாம் ஒரு லிஸ்டு போடுங்கோ.”
“எல்லாம் நம்ப சுந்தரம் போட்டாச் சரித்தான். போடப்பா சுந்தரம்” என்று பல்லைக்காட்டினார் முதலாளி.
சுந்தரம் ஓலைமீது எழுத்தாணியை வைத்து, ‘கிரீச், கிரீச்’ என்று எழுத ஆரம்பித்தான்.
“இதென்னடா பித்துக்குள்ளித்தனமா இருக்கு! ஒரு கடிதாசு, பென்ஸிலை எடுத்து ஜாப்தா தயாரிடா” என் றாள் சின்னம்மா.
சுந்தரம் நாகராஜையரைக் கடைக்கண்ணால் பார்த்து, உதட்டைப் பிதுக்கினான்.
‘ஒரு கடிதாசு பென்ஸிலுக்கு வக்கில்லாத கடையா இது! ரொம்ப அழகுதான். திண்ணைப் பள்ளிக்கூடமா! இனிமே நீ அல்லி அரசாணி மாலை படிக்க வேண்டியதுதான் போலேருக்கு. அத்தனெ பணத்தைக் கொட்டி ஒன்னெ இங்கிலீஷ் படிக்கவெச்சதெல்லாம் இந்த உத்தியோகம் பண்றதுக்கா? நன்னாத்தான் இருக்கு. இன்னிக்குச் சாயங்காலம் அவர் ஆத்துக்கு வரட்டும் சொல்றேன்…
அம்மாள் இந்த ஸ்தாயியில் போய் எத்தனையோ தரம் பார்த்தவன் சுந்தரம். அவன் தலை நிமிராமல், ‘கிரீச், கிரீச்’ செய்துகொண் டிருந்தான். தாத்தாவுக்கு இந்த உபத்திரவத்தை எப்படியாவது கடையை விட்டுக் கழித்தால் போதும் என்றாகிவிட்டது.
“ஏண்டாப்பா, சுந்தரம். ஏதுக்கடா ஓலையில் எழுதறே? ஒரு கடிதாசு பென்ஸில் இல்லே? இல்லேன்னா எங்கிட்டச் சொல்லு; நான் குடுக்கறேன்” என்று தளுக்காய்க் கூறி, ஒரு கடிதாசு பென்சிலைச் சுந்தரத்திடம் நீட்டினார். சுந்தரமும் அதை வாங்கி ஜாபிதாவைத் தயாரித்து, விலை போட்டு, கூட்டி, சீட்டைக் கிழவனாரிடம் நீட்டினான். அவர் அதை ஒத்துப் பார்த்துவிட்டு, “சரி” சொல்லி அம்மாளிடம் நீட்டினார்.
அவள் ஜாபிதாவை வாங்கினாள். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. எண்களுக்குப் பதில் ஏதோ ‘க’, ‘உ’ என்று போட்டிருந்தது. கடைசியில் ஆக மொத்தம் ‘ரூ.அவ’ என்று எழுதியிருந்தது.
‘இதென்ன எழுத்து! துலுக்கெழுத்தா? என்னவோ மொத்தம் ‘அ’னா ‘வ’ ரூபாயின்னு போட்டிருக்கு. இதெல்லாம் என்ன பேத்துமாத்தல்?” என்றாள் அம்மாள்.
“இல்லையம்மா. அவை தமிழ் எண்கள். மொத்தம் எட்டேகால் ரூபாயின்னு போட்டிருக்கு” என்றார் கிழவனார்.
“எட்டேகால் ரூபாயா, அதெப்படி வந்தது? ஏழரை ரூபாய்தானே நான் வாயாலெ போட்ட கணக்கு? எங்கே ஒவ்வொண்ணாச் சொல்லுங்கோ, பாக்கலாம்.”
விவகாரத்தின் முடிவில் அம்மாள் கணக்குத்தான் சரியென்று முடிவாயிற்று.
சுந்தரம் செய்த தவறு, தமிழ்க் கணக்கின் தவறு என்று தீர்மானித்துவிட்டாள் அவன் சின்னம்மா.
“இந்தாமாதிரி மோசடி யெல்லாம் பண்ணறத்துக்குத்தான் தமிழ்க் கணக்கோ? சரித்தான்; எங்க புள்ளெயெ வெறே கெடுத்தூடுவக போலேயிருக்கே, ஓலெ, எழுத்தாணி, தமிழ்க்கணக்கு-நன்னாத்தான் இருக்கு. நீ உத்தியோகம் பார்த்தது போரும். வா, ஆத்துக்கு” என்று சொல்லி, சாமானை வண்டியில் வைத்து, சுந்தரத்தையும் கையோடு அழைத்துக்கொண்டு கிளம்பினாள் சின்னம்மா. “ரொம்ப நல்லது. அம்மா: பணங் கொடுக்கலையே, கொடுத்துட்டுப் போங்கோ” என்றார் கிழவனார்.
”பணமா? எங்க சுந்தரத்தின் சம்பளத்திலெ கழிச்சுக் குங்கோ” என்று சொல்லி, வண்டியைத் தட்டிவிடச் சொன்னாள் அம்மா.
“என்னது! சம்பளமா! சுந்தரத்துக்கா! நாலு நாளைக்கு ஏழரை ரூபாயா! அதிசயமா யிருக்கே” என்று முணு முணுத்துப் பெருமூச்சு விட்டார் கிழவனார். இரைந்து கத்தப் பயம். எங்கேயாவது அவள் திரும்பி வந்துவிட் டால் -?

தி.ஜ.ர/வெள்ளிக் கரண்டி – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

2 Comments on “தி.ஜ.ர/மளிகை நிபுணர்”

Comments are closed.