தி.ஜ.ர /காளி தரிசனம்

5. கறுப்புப் பூனை

பூனையும் பேசுமோ என்றே எவருக்கும் தோன் றும். ஆனால் அந்தக் கறுப்புப் பூனை என்னோடு பேசியது. அடுத்த வீட்டு ராமாச்சார் பேசுவதுபோல் பேசவில்லை. மூன்றாம் வீட்டுச் சங்கரையர் பேசுவதுபோல் பேசவில்லை. நீங்களும் நானும் பேசுவதுபோலவே அது பேசவில்லை. பேச்சு என்றாலும் என்ன 2 அது பேசத்தான் பேசியது. என்றால் என்ன ? கருத்தைத் தெரிவிப்பது. ஸ்தூல மாகச் சொன்னால், உணர்ச்சித் திரளே கருத்து. பூனையின் கருத்து எனக்குத் தெள்ளத் தெளியப் பல சமயம் புலப்பட்டது.
“மியா!”
நாங்கள் புது வீட்டுக்கு ஜாகை வந்த சில நாளைக் கெல்லாம் பூனையின் குரல் கேட்டது. புதிய ஜாகை பழக யாருக்குமே சில நாள் ஆகத்தான் ஆகும். இது பூனைக்குத் தெரிந்திருக்கவேண்டும். அதனாலேயே இது வரைக்கும் என் நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு பொறுமையாக இருந்திருக்கிறது.
என் புத்தகங்களை எங்கே வைப்பது? படுக்கைக்கு வசதியான இடம் எது ? நாற்காலியும் மேஜையும் எங்கே கிடந்தால் சரியாயிருக்கும் ? இவைபற்றி நாலைந்து நாள் வரைக்கும் மாற்றி மாற்றிப் பலவித ஏற்பாடுகளைச் செய்து கடைசியாகப் பாந்தமான இடங்களைக் கண்டு பிடித்தேன். இத்தனை நாளும் அந்தக் கறுப்புப் பூனை என்னைக் கவனித்துக்கொண்டே இருந்திருக்கிறது. என் ஏற்பாடுகளின் மாறுதல்களை அநுசரித்து அதுவும் வெகு சாந்தமாக, மெளனமாக, தன் ஏற்பாடுகளை மாற்றிக்
கொண்டே வந்திருக்கிறது. மாடியில் வடவண்டை அறை யில் என் புத்தக பீரோவை வைத்தால், பூனை அங்கிருந்து புறப்பட்டுத் தென்னண்டை அறைக்குப் போயிற்று. அங்கே என் படுக்கையைப் போட்டால் கூடத்து மூலையில் ஜாதிக்காய்ப் பெட்டியில் போய் அது முடங்கியது. எனக்கு ஒவ்வொரு காரியத்துக்கும் உரிய இடங்கள் ஊர்ஜிதமாகும் வரையில் பூனை வெகு கஷ்டப்பட்டுத்தான் இருக்கவேண்டும். கடைசியில் ஒரு நாள் அது படுத்திருந்த மூலையில் என் நாற்காலி மேஜைகளைக் கொண்டு போய்ப் போட்டேன். பூனைக்குச் சலித்துவிட்டதுபோல் இருக்கிறது. அது எழுந்திருந்தது; ஆனால் ஓடவில்லை. நேரம் சோம்பல் முரித்துக்கொண்டது. என்னையே சற்று வெறித்து வெறித்துப் பார்த்தது. பிறகு நிமிர்ந்து நாற்காலி மேஜைகளை ஒரு கண்ணோட்டம் விட்டது.
“மியா!”
இப்போதுதான் பூனையை நன்றாகப் பார்த்தேன்; அழகான பூனை. ஏதோ மாய உலகத்திலிருந்து வந்ததுபோல் இருந்தது அதன் கன்னங்கரிய தோற்றம். யோக சமாதி யில் இருப்பவருக்குப் புருவ மத்தியிலே தெரியும் தேஜஸ் போல அதன் மூக்கிலிருந்து சின்னஞ்சிறு அரசிலை அளவு வெள்ளைப் பட்டை ஒன்று நெற்றிவரைக்கும் படர்ந்திருந்தது. அதன் குரலிலே பரம சாத்துவிகம் ததும்பியது. “மியா!”
அது என்னவோ சொல்லுவது என் மனத்துக்குத் தெளிவாகப் புலப்பட்டது. “என்ன தம்பி, என் வேதனை உனக்குத் தெரியவில்லையா? என்னை ஏன் ஒவ்வொரு மூலையிலிருந்தும் விரட்டுகிறாய் ? நான் சிறிது தலை சாய்க்க இடமில்லாது செய்கிறாயே ! ஏன்?” என்றுதான் அது கேட்கிறது.
ஐயோ பாவம்! வாயில்லாப் பிராணி ! என்னை அறியாமலே அதற்கு உபத்திரவம் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், கண்ட ஜீவனிடமெல்லாம் அநுதாபம் காட்டிக்கொண்டு உலகத்திலே வாழ முடியுமா? என் காரியம் எனக்கு ; அது அதன் காரியம் அது அதற்கு. தவிர, இந்த வீட்டுக்கு வாடகை கொடுக்கிறவன் நான். என் இஷ்டப்படி இதை ஆண்டு அநுபவித்துக்கொள்வதா? இந்தப் பூனைக்குப் பரிதாபப்பட்டுக்கொண்டு என் சௌக.ரியங்களை இழப்பதா?
“ம்ம்ம்மியா “
ஏக்கம் தொனித்த குரலில் கத்திக்கொண்டே, என்னை ஒரு முறை பார்த்துவிட்டு, வெளியே ஓடியது பூனை. அந்தக் குரல் என் மனத்தை உறுத்தியது. “குடிக்கூலி கொடுப்பதால் வீட்டிலே உரிமை கொண்டாடுகிறாயே! நான் இந்த வீட்டிலே வெகு காலமாக வாழ்கிறேன். இதில் எனக்கு அநுபவ பாத்தியம் இல்லையா ?” என்று அது கேட்டதோ ஒரு வேளை?
பூனை இந்த வீட்டிலே புழங்குவதற்குரிய நியாயமெல்லாம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்; இதை விட்டு அது சுலபத்தில் போகாது. பழகிய மனிதரைப் பற்றிப் பூனைக்குக் கவலை இல்லை; பழகிய வீட்டிலேதான் அதற்கு மிகவும் பற்றுதல். இதை நான் எங்கேயோ படித்திருக்கிறேன்.
சரி: பூனை போகாது. அது இங்கே எங்களோடு கூடவே இருந்தால், அதனால் எங்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்கள் என்னவாக இருக்கும் ? குடிக்கூலிக்கு இருக்கும் ஒவ்வொரு வீட்டிலுந்தான் ஏதாவது தொந்தரவு இருந்துகொண்டே இருக்கிறது. ஒண்டுகுடி இருந்தாலோ கேட்கவேண்டியதில்லை. எல்லாம் நாங்கள் அநுபவித்திருக்கிறோம். ‘இது என்னவோ தனி வீடாக இருக் கிறதே; வீட்டுக்காரர் எனக்கு மிகவும் வேண்டியவராக இருக்கிறாரே’ என்று நினைத்தேன். எங்கள் தனி ஜாகைச் சுகத்தை நாங்கள் சம்பூர்ணமாக அநுபவிக்கவொட்டாமல் இங்கேயும் ஒரு பூனை வந்து ஒண்டுகிறது ! பரவாயில்லை. முன்னே ஒரு வீட்டிலே மின்சார ‘ப்யூஸ்’ கம்பியை வீட்டுக்காரர் அடிக்கடி அறுத்தது மாதிரி இது அறுக்காது: ‘கால் குழாய் ஜலம் விடு; அரைக் குழாய் ஜலம் விடு’ என்று தகராறு செய்யாது; ‘விறகை அங்கே போடாதே; கரியை இங்கே வைக்காதே; துப்பாதே இங்கே’ என்றெல்லாம் கட்டளை பிறப்பிக்காது. ஆகவே பூனையும் ஒரு மூலையிலே இருந்துவிட்டுப் போகட்டுமே. அதனால் எங்களுக்கு ஒரு லாபங்கூட உண்டு. முந்திக் குடியிருந்த வீட்டில் என் மனைவியும் குழந்தைகுட்டிகளும் ஆளுக்கொரு விறகு கட்டையை வைத்துக்கொண்டு எலி வேட்டை ஆடினார்களே, அந்தத் தேவை இங்கே இராது. அதைக் கறுப்புப் பூனையே இந்த வீட்டில் பார்த்துக் கொள்ளும். ஆகவே, மாடியில் எப்போதும் இருள் சூழ்ந் திருக்கும் ஓர் அறையின் மூலை ஒன்றைப் பூனைக்கு விட்டு வைப்பது என்று தீர்மானித்தேன். அந்த இடத்தில் ஒரு ஜாதிக்காய்ப் பெட்டியைப் போட்டுப் பூனைக்கு வசதி செய்து வைத்தேன்.
பூனை என் புத்திசாலித்தனத்தைப் பாராட்டியது. மூலையையும் ஜாதிக்காய்ப் பெட்டியையும் அங்கீகரித்து வசப்படுத்திக்கொண்டு அநுபவித்து வரத் தொடங்கியது.
இதற்குமேல் பூனையுடன் நான் அதிக சல்லாபம் வைத்துக்கொள்ளவில்லை. இதென்ன, பட்டிக்காடா-பூனை. நாய், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர் எல்லாப் பிராணிகளோடும் உறவாடிக்கொண்டிருக்க ? பட்டணத்திலே அவர் அவர் தங்கள் தங்கள் பிரவிருத்திகளில் ஈடுபடுவது தானே இயற்கை ?
ஆனால் இரண்டொரு மாதத்துக்கெல்லாம் ஒரு புதிய நிலைமை ஏற்பட்டது; பூனை பிரசவித்துவிட்டது. நம் வீட்டுப் பெண்டுகளைக் கவனிக்க வரும் நர்ஸ், டாக்டர்களைப்போல யாரும் வரவில்லை. பிரசவ ஆஸ்பத்திரி எதற்கும் பூனை போய் வந்ததாகத் தெரியவில்லை. என்றாலும், பூனை பிரசவித்துவிட்டது. அந்த ஜாதிக் காய்ப் பெட்டியே அதன் பிரசவ அறை. அதிலேயே ரண்டு குட்டிகளைத் தன்னந்தனியே முந்திய நாள் இரவு யாரும் அறியாமல் அது ஈன்றெடுத்திருக்கிறது.காலையில் பெட்டியைப் பார்த்தால், எலிக்குஞ்சுபோல் இரண்டு குட்டிகள் கறுப்புப் பூனையிடம் பால் குடித்துக்கொண் டிருந்தன. ஆனால், அந்தப் பெட்டியில் ஒரு மாசு மறு இல்லை; துளிக் கறை இல்லை. குட்டிகளின் உடம்பும் சரி, பூனையின் உடம்பும் சரி, பெட்ரோலியம் சலவை செய்த பட்டுப்போல் சுத்தமாயிருந்தன. குட்டி போட்ட பூனை தானாகவே அத்தனையையும் சுத்தம் செய்திருக்கிறது! ஆஹா! இயற்கையில்தான் எத்தனை அற்புத சக்தி இருக்கிறது ! மனிதன் உடனே இயற்கைக்குத் திரும்பு து மெத்த அவசியம். ஏனென்றால், இந்தப் பிரசவ ஆஸ் பத்திரிக்குப் பணம் கொடுத்து நம்மால் கட்டவேயில்லை.
குட்டிகளை அன்புடன் நக்கிக்கொண்டு சீராட்டிப் பால் கொடுத்தபடி பூனை படுத்திருந்தது. அதைப் பார்க் கப் பார்க்க என் மனம் ஆனந்தத்தால் பூரித்தது. வீட்டில் உள்ள எல்லாரையும் – மனைவியையும் மக்களையுந்தான்- அழைத்து, “பாருங் “பாருங்கள்: பூனை குட்டி போட் டிருக்கிறது! பூனை குட்டி போட்டிருக்கிறது !” என்று காட்டினேன்.
எல்லாருக்குமே வெகு சந்தோஷம்.
“பூனைக்குத்தான் எவ்வளவு அறிவு !” என்றான் மனைவி. எதனாலோ? பையன்கள் மெல்ல மெல்லப் பூனையின் கிட்டக் கிட்ட நெருங்கிக் குட்டிகளைப் பார்த்தார்கள்.
“அடேடே! குட்டி போட்ட பூனை மகா கோபமாயிருக்கும். அதைத் தொட்டுவிடாதீர்கள். பழகிய பூனையே
குட்டிகளோடு இருக்கும்போது பிறாண்டிவிடும். இதுவோ பழகாத பூனை’ என்று நான் எச்சரித்தேன்.
பிறகு அவர் அவர் வேலையைக் கவனிக்கச் சென்றோம். மாலையில் ஜாதிக்காய்ப் பெட்டியைப் பார்த்தால், அதில் பூனையோ குட்டிகளோ இல்லை. ஆனால், என் புத்தக பீரோவுக்குக் கீழே ஒரு குட்டிக்குப் பால் கொடுத்துக்கொண்டு பூனை படுத்திருந்தது. இன்னொரு குட்டி கட்டிலின் கீழே கொலுப் பொம்மைப் பெட்டிக்குப் பின்னால் கிடந்தது. இதற்கப்புறமும் இப்படியே பல முறை தன் குட்டிகளை இடம் மாற்றிக்கொண்டிருந்தது பூனை குட்டிகளை நாங்கள் எடுத்துவிடுவோம் என்ற பயமோ? அல்லது வேறு சத்துருக்களுக்குத் தெரியலாகாது என்ற உணர்வோ ? எது காரணம் என்று புரியவில்லை.
ஆனால் நாங்களுந்தான் இரண்டு மூன்று நாளாகப் பார்க்கிறோம். நாங்கள் பார்க்கிறபோதெல்லாம் அது தன் குட்டிகளுக்குப் பால் கொடுத்துக்கோண்டே இருக் கிறது.
இது இப்படியே பால் கொடுத்துக்கொண் டிருக்கிறதே! எப்போது இரை தேடப் போகும்? தனக்கே தீனி இல்லாமல் குட்டிகளுக்குப் பால் கொடுக்க, பால் எங்கிருந்து வரும் ?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் மனைவி.
“இரவெல்லாம் போகுமோ, என்னவோ! அப்போது கூட அப்படிப் போவதாய்த் தெரியவில்லை. பூனை ஐந்து நிமிஷம் வெளியே போனால் பத்து நிமிஷம் இங்கே வந்து தங்குவதை நான் கவனித்திருக்கிறேன்” என்றேன்.
பூனையிடம் மனைவிக்கு இரக்கம் மிகுந்தது. அதற்கு ஒரு கிண்ணத்தில் பாலும் சோறும் கொண்டு வந்து வைத்தாள்.
அன்று முதல் பூனை எங்களிடம் வர வர அதிகமாய் நெருங்கிவரத் தொடங்கியது.
சில நாளைக்கெல்லாம் குட்டிகளில் ஒன்று திடீரென்று காணாமல் போயிற்று. பூனை வருத்தப்பட்டதோ இல்லையோ: எங்களுக்கு மகா வருத்தமாயிருந்தது.
மீதியிருந்த ஒரே குட்டி தன் தாயைப்போலவே கறுப்புத்தான். அதன் நெற்றியிலும் ஒரு வெள்ளைப் பட்டை இருந்தது; ஆனால் அவ்வளவு அழகான பட்டை அல்ல.
பூனை இல்லாதபோது குட்டியிடம் கொஞ்சங் கொஞ்சமாக நான் பழகினேன். பூனை வந்தால் குட்டி என்னை விட்டு அதனிடம் ஓடிப் போய்விடும். அதுவாகப் போகாவிட்டால், நானே குட்டியைப் பூனையிடம் விரட்டி விடுவேன். பூனை எங்கே மேலே வந்து விழுந்து பிடுங்கி விடுமோ என்று எனக்கும் பயந்தான்.
பூனைக்குப் பாலுஞ்சோறும் போடுகிறோம்; அதனி டம் அன்பாய் நடந்துகொள்கிறோம்; அதன் குட்டியோடு பழகுகிறோம். இத்தனை இருந்தும் பூனை எங்களிடம் அதைத் தொட எங்களுக்கும் நெருங்கி வருவதில்லை. தைரியமில்லை.
ஒரு நாள் பூனைக்குத் தீனி போட்டுக்கொண்டே துணிச்சலோடு அதன் முதுகைத் தடவிக் கொடுத்தாள் மனைவி.
”ஐயோ! தொடாதே; தொடாதே. பிறாண்டிவிடப் போகிறது. இதென்ன அசட்டுத் துணிச்சல்!” என்று நான் கத்தினேன்.
மனைவி சிரித்துக்கொண்டே, “அதெல்லாம் ஒன்றும் செய்யாது. நீங்களும் தொடலாம். வாருங்கள். தொடுங்கள்” என்று ஒயிலாகத் தலையை அசைத்தாள்.
‘பூனையைத் தொடுவது புண்ணியமா? புருஷார்த் தமா? போதும், போதும்; நீதான் இருக்கிறாயே ஓர் அதிகப்பிரசங்கி ” என்று கோபித்துக்கொண்டு நான் நகர்ந்துவிட்டேன்.
பிற்பாடு தனியாக இருக்கும்போது, எனக்கே பூனை யைத் தொட்டுப் பழக ஆசையாய் இருந்தது. மெல்லச் சீட்டி அடித்தேன். பூனை என்னை முதலில் வெறித்துப் அருகே வந்தது. மெதுவாக என் பார்த்தது. பிறகு தொட்டுவிட்டேன்!
பூனைக்கும் சரி, குட்டிக்கும் சரி; இப்போது பால் சோறு, அப்பளம், கருவடாம், பட்சண பலகாரங்கள் எல்லாம் வழங்கத் தொடங்கினோம்.
குட்டி கறுப்பாயிருந்தாலும் அதற்கு ரஞ்சிதம் என்று நான் பெயர் வைத்தேன். பூனைக்கு மிகவும் பொருத்தமான கறுப்பம்மாள் என்ற பெயரை மனைவி சூட்டினாள். இரண்டும் எங்கள் குடும்பத்திலே முழு அங்கத்தினர்களாகிவிட்டன. ஆனால், ரஞ்சிதத்தையும் கறுப்பம்மாளையும் ‘ரேஷன் கார்டி’லே சேர்க்க முடியாத ஒன்றுதான் என் குறை.
இந்த விதமாகச் சில நாள் சென்றன.
பிறகு –
பிறகு, இந்தப் பூனை, பூனைக்குட்டிகளின் உபத்திரவம் சகிக்க முடியாமல் போயிற்று. வீட்டிலே கண்ட கண்ட இடங்களையெல்லாம் அவை அசுத்தப்படுத்தின. நான் நாற்காலியில் உட்கார்ந்து ஓர் அருமையான கதை எழுதிக்கொண் டிருப்பேன்; குட்டி வந்து என் மடியிலே சுகமாய் உட்கார்ந்து உறங்க ஆரம்பித்துவிடும். எத்தனை தடவை விலக்கித் தள்ளினாலும் திரும்பத் திரும்ப ஓடி வந்து மடியைப் பற்றிக்கொள்ளும். இரவிலோ மகா மோசம். குட்டிக்குத் தாய்ப் பூனை, எலிக்குஞ்சுகளைக் கொண்டுவந்து தரத் தொடங்கியது.
ஒரு நாள் இரவு.
படுக்கையைப் போட்டு நான் படுத்த சிறிது நேர துக்கெல்லாம் கலவரமான ஒரு சத்தம் கேட்டது. ‘உர்ர்ர்’ என்ற ஒரே உறுமல்; ‘கறமுற’ என்ற சத்தம்.
விளக்கைப் போட்டுப் பார்த்தேன். என்ன பயங்கரம்! சுவர் ஓரமெல்லாம்… அப்பாடா! அதை நினைக்கவும் என் மனம் கூசுகிறது. தவிர, அதை அப்படியே – என் உள் ளத்திலே எழுந்த பதறல், அருவருப்பு இரண்டும் கலந்த உணர்ச்சியிலே தோன்றிய தோற்றப்படியே – இங்கே வர்ணிக்க எனக்குச் சொல்லே கிடைக்கவில்லை.
ஒரே ரத்த வெள்ளக்காட்டை அங்கே கண்டேன். அதிலே மரண வேதனையோடு, முரட்டு எலி ஒன்று அங்கும் இங் கும் ஓடிக்கொண் டிருந்தது. பூனைக்குட்டி அந்த எலியின் முதுகிலே உறுமலுடன் பாய்ந்து பாய்ந்து பிறாண்டியும் கடித்தும் குதறிக்கொண் டிருந்தது. காட்டெருமையை வேட்டையாடுகிற புலியை நான் பார்த்ததில்லை.
ஆனால், அது எப்படிப்பட்ட காட்சியாக இருக்கும் என்று புரிந்து விட்டது. எல்லாம் இப்படித்தான் இருக்கும். அப்போது அந்தப் பூனைக்குட்டியை நெருங்க எங்களுக்கே மிகவும் பயமாக இருந்தது. அவ்வளவு குரூரமாயிருந்தது அதன் கோலம். ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு குட்டியை விரட்டினேன். எலியை வெளியே தூக்கி எறிந்தேன். தரையின் ரத்தக்கறையை நீர் விட்டுக் கழுவி, துணியால் துடைத்துச் சுத்தம் செய்தாள் மனைவி. “நாளைக்கு இந்தக் குட்டியை வீட்டை விட்டுத் துரத்திவிட்டுத்தான் மறு காரியம்” என்று கூச்சலிட்டுவிட்டுப் படுத்தேன். மனைவி யும், “அதுதான் சரி” என்று சொல்லி உறங்கச் சென்றாள்.
மறுநாள் போது விடிந்தது. பூனைக்குட்டியிடம் என் கோபம் சிறிது தணிந்தது. ஆனால், மனைவியின் கோபம் தணியவில்லை. அவள் மகா உறுதியோடு இருந்தாள்.
‘பூனைக்குக் கொஞ்சம் சோறு போடு” என்று சிரித் துக்கொண்டே அவளிடம் நான் சொன்னேன்.
”பூனைக்கா! சோறா ! இந்த ‘ரேஷன்’ காலத்திலா ! மண்ணை வெட்டி அடிக்கவேண்டியதுதான்” என்று அவள் கர்ஜித்தாள்.
இதற்குமேல் என்ன வேண்டும் ? கடைசிப் பையனுக்குக் ‘குஷி’ பிறந்துவிட்டது. அவன் விரட்டு விரட்டு என்று பூனைக்குட்டியை நாள் முழுவதும் விரட்டினான். அது போய்விட்டது. எங்கே போயிற்றோ? வீதியிலே போகிற கார்ச் சக்கரத்திலே போய் மாட்டிக்கொண்டு செத்ததோ ? நாய் கடித்து அதைக் குதறியதோ? வேறு என்ன கதிதான் அது அடைந்ததோ ?
இரண்டொரு நாள் வரைக்கும் என் மனத்தில் மகா வருத்தமாயிருந்தது.
பூனையும் பல நாள் வரைக்கும் இரவிலே எலிக்குஞ்சுகளைத் தூக்கி வந்து, ‘மியா, மியா’ என்று பரிதாப ஓலக் குரலில் கத்திக்கொண்டு தன் குட்டியைத் தேடித் தேடித் தவித்தது.
யாருக்கும் எப்பேர்ப்பட்ட துக்கமும் காலக் கிரமத்தில் மறந்துபோவது சகஜந்தானே ? நான் வெகு சீக்கிரத் தில் குட்டியை மறந்தேன். பூனை இரண்டொரு வாரத் தில் அதை மறந்தது.
மீண்டும் இரண்டு மூன்று மாதங்கள் சென்றன. பழைய கதைதான். பூனை பழையபடி கருத்தரித்து விட்டது; குட்டியும் போட்டது. இந்தத் தடவையும் இரண்டு குட்டிகளே. ஒன்று கறுப்பு; மற்றது சாம்பல் நிறம்.
மறுபடியும் பூனையிடம் எங்களுக்குக் கருணை பிறந் தது. சோறு போடத் தொடங்கினோம். எல்லாக் காரி யங்களும் முன்போலவே திரும்பவும் நடந்தன. ஐந்தாறு வாரத்துக்கெல்லாம் நிலைமை சகிக்கமுடியாமல் போயிற்று. மாடியெல்லாம் ஆபாசம். இரவிலே எலிக்குஞ்சுகள் வந்து சேர்ந்தன பூனையின் வாயிலே.
‘இந்தக் குட்டிகளையும் தொலைக்கவேண்டியதுதான்” என்றேன்.
“இவற்றை மட்டும் தொலைத்து என்ன பிரயோஜனம் ? ஓயாமல் குட்டி போட்டுக்கொண்டிருக்கிற தாய்ப் பூனையையும் விரட்டினால்தான் நாம் பிழைக்கலாம். இல்லாவிட்டால், வேறு ஜாகை பாருங்கள்” என்றாள் மனைவி.
‘பூனை தனியே இருக்கும்போது நமக்குத் தொல்லை இல்லை. அது அடுத்த தடவை குட்டி போடச் சில மாதங்களாவது ஆகும். அதன் விஷயத்தைப் பின்னால் கவனித்துக்கொள்ளலாம். இப்போதைக்கு இந்தக் குட்டி களை அப்புறப்படுத்தினால் போதும்” என்று சொன்னேன்.
“அவைகளை வெளியேற்ற இதோ நான் தயார்” என்று துடிப்பாய் முன்வந்தான் கடைசிப் பையன்.
பூனைக்குட்டிகளைக் கொஞ்சுவதிலும் சரி, அவற்றை இப்போது வெளியேற்றுவதிலும் சரி, அடுத்த முறை பூனை குட்டி போடப்போகிற விஷயத்திலும் சரி, பள்ளிக்கூடப் பாடங்களைப் படிக்காமல் அறுபது நாழிகையும் விளை யாட்டு மைதானத்துக்குப் போவதிலும் சரி, அவனுக்கு வெகு குஷி.
இரண்டு குட்டிகளையும் வெகு லாகவமாய் எடுத்துக் கொண்டு அவன் வெளியே போனான். சில நிமிஷ நேரத்தில், “ஆச்சு” என்று சொல்லிக்கொண்டே திரும்பி வந்தான்.
“எங்கேயடா கொண்டுபோய் விட்டாய் ?” என்று அவனைக் கேட்டேன்.
“கோயில் மடைப்பள்ளி இருக்கிறது பார், மடைப்பள்ளி, அதிலே கொண்டுபோய் விட்டேன் ” என்று அவன் வெகு உற்சாகமாய்ச் சொன்னான்.
குட்டிகள் போன பிறகு இந்தத் தடவையும் எனக்குச் சிறிது வருத்தந்தான் உண்டாயிற்று. பூனையும் முன் போல்தான் சில நாள் வரைக்கும் தவித்தது.
இப்போது பூனையிடம் திடீரென்று ஒரு மாறுதலைக் கண்டேன். நான் எங்கேயோ படித்திருக்கிறேன் என் றேனே, அந்த இலக்கணத்துக்கே விரோதமான மாறுதல். எங்கள் கறுப்புப் பூனை அக்கம்பக்கத்துக் கூரைகளிலும் மச்சுகளிலும் ஓடியது. என்றாலும் எங்கள் வீட்டுக்குள்ளே மட்டும் அடியெடுத்து வைக்கவில்லை. இந்தப் பழகிய வீட்டை அது லட்சியமே செய்யவில்லை. என்னைப் பார்க்கும் சில சமயம். அப்போதெல்லாம் அது என்னி டம் ஏதோ சொல்ல விரும்பியதுபோல் தோன்றிற்று. என் பையன்களில் ஒருவனோ மனைவியோ அதை அடித்து விரட்டியிருக்கலாமோ என்று எண்ணினேன். ஆனால், அவர்களைக் கேட்டால், யாரும் ‘இல்லை’ என்று சாதித் தார்கள். உண்மை எப்படியானாலும் சரி, நாங்கள் அத்தனை பேரும் தன்னை வெறுக்கிறோம் என்று பூனைக்கு எப்படியோ தெரிந்துவிட்டது.
‘உலகம் பிரம்மாண்டமானது, தம்பி. நீ குடியிருக்கும் வீட்டுச் சுவருக்குள்ளே அது அடங்கிவிட்டதாக நினைக் காதே. நீ மட்டும் பிறக்கவில்லை; வாழவில்லை; சாகப் போவதில்லை. நானுந்தான் பிறந்தேன்; வாழ்கிறேன்: சாகப்போகிறேன். அன்புக்கு அன்பு: வெறுப்புக்கு வெறுப்பு: அலட்சியத்துக்கு அலட்சியம். இதைத்தான் நீ ஒரு பூனையிடங்கூட எதிர்பார்க்கலாம்” என்று அது சொல்லுவதுபோல் என் மனத்தில் பட்டது.
பிறகெல்லாம் பூனை என்னைக் கண்டாலும் காணாதது போலவே போய்க்கொண்டிருந்தது,
அந்தக் காலத்தில்தான் ஒரு நாள் இரவு, மனம் உருக் கும் ஒரு சம்பவம் நேர்ந்தது.
படுத்தபடியே ஏதோ படித்தேனோ, படிக்கவில்லையோ; நன்றாய் ஞாபகம் இல்லை. அப்போதுதான் சற்றுக் கண்னை மூடினேன்.
இதோ பாருங்கள், இதோ பாருங்கள் !” என்று மனைவி என்னைக் கூப்பிடும் குரல் கேட்டது.
‘என்ன?” என்று அலுப்புடன் சிறிது புரண்டு கொடுத்துக்கொண்டே கேட்டேன்.
”உங்களுக்குச் சத்தம் கேட்கவில்லையா? தொபீர் தொபீர் என்று வாசல் கிணற்றிலே ஏதோ சத்தம் ?” என்றாள் அவள்
“மண்ணாங்கட்டி! உனக்கே எப்போதும் இப்படித் தான் விசித்திரமான பயமெல்லாம் தோன்றும். சும்மாத் தூங்கு” என்றேன்.
அவள் பேசவில்லை.
ஆனால், எனக்கே இப்போது அந்தச் சத்தம் கேட்கத் தொடங்கியது. தூக்கம் வரவில்லை.
கிணற்றுக்குள்ளே திரும்பத் திரும்ப அந்தச் சத்தம் கேட்டது. அதில் விழுந்த ஜீவன் வெளிப்பட்டுத் தப்பச் சிறிது உயரம் ஏறி ஏறித் திரும்பத் திரும்பக் கை சலித்து கிணற்றில் விழுந்தது விழுவதுபோல் தோன்றியது. யாராயிருந்தால் என்ன, எதுவாயிருந்தால் என்ன ? முழு கிச் சாவது என்பது மகா வேதனை ! ஒரு ஜீவன் உயிருக்கு மன்றாடிக்கொண்டு இதோ தவிக்கிறது. இது தெரிந்தும் நான் பராமுகமாய்ப் படுத்திருப்பது சரியா? போது விடிந்தால் அந்த உயிரைக் காண முடியுமா? சவத்தைத் தான் காண முடியும்.
‘ஆமாம், எனக்குக்கூட அந்தச் சத்தம் கேட்கிறது. வா, போய்ப் பார்ப்போம்” என்று மனைவியை அழைத் தேன்.
என் டார்ச் விளக்கில் பாட்டரி இல்லை. ஒரு லாந்தரை கிணற்றண்டை ஏற்றிக்கொண்டு போனோம்.
அதைக்கொண்டு கிணற்றுக்குள்ளே எப்படிப் பார்ப்பது? லாந்தரைக் கவிழ்க்க முடியுமா?
எப்படி இருந்தாலும் சரி என்று தாம்புக்கயிற்றைக் கிணற்றுக்கு உள்ளே தொங்கவிட்டேன். உள்ளே இருக் கும் ஜீவன் திரும்பத் திரும்பக் கிணற்றுச் சுவரிலே தொற்றித் தொற்றிப் பிடி தவறி விழுகிற சத்தம் கேட் டதே தவிர, அந்தக் கயிற்றைப் பிடித்ததாகவே தெரிய வில்லை.
என்ன செய்வது?
இந்தச் சமயத்தில் நல்ல வேளையாக அடுத்த வீட்டுக் காரர் ஒருவர், தம் டார்ச் விளக்குடன் வந்து சேர்ந்தார். கிணற்றுக்குள்ளே பார்த்தோம். அடடா ! அது எங்கள் கறுப்புப் பூனை தான் !
கயிற்றில் ஒரு வாளியைக் கட்டிக் கிணற்றில் விட்டு, அதற்குள்ளே பூனை தொற்றிக்கொள்ளும்படி மெதுவாகச் சுழற்றினோம். எங்கள் முயற்சி பலித்தது. பூனை தொற்றிக்கொண்டது. மெல்ல மெல்லக் கயிற்றை இழுத்தோம். கைபிடிச் சுவரின் மேல் விளிம்புக்கு வருவதற்கு முன்பே, பூனை என் முகத்தையும் என் மனைவி முகத்தையும் பார்த்தது. உடனே என்ன நினைத்ததோ ! ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து எட்டிப் போய்க் குதித்தது. திரும் பிப் பார்க்காமலே எங்கேயோ ஓட்டமாய் ஓடிவிட்டது. பூனையின் செயல் எனக்கு மிகவும் விசித்திரமாய்த் தோன்றியது. “எதற்காக நீங்கள் வந்து என்னைக் காப்பாற்றினீர்கள்? நான் இருந்தால் என்ன, செத் தால் என்ன உங்களுக்கு ?” என்றதோ அது?
சத்துருக்களின் கையிலே உயிர் பிழைத்த பிழைப்பு, சாவையும் விடக் கேடானது என்று எண்ணி அவமானப்பட்டதைப் போல்தான் இருந்தது அதன் ஓட்டம்.
பைத்தியக்காரத்தனம் என்றே நீங்கள் மதித்துச் சிரிப்பீர்கள். அப்படிப்பட்ட ஓர் எண்ணங்கூட எனக்கு உண்டாயிற்று. “நான் பாட்டுக்குச் சிவனே என்று ஒரு மூலையில் வாழ்ந்தேன். எனக்குப் பால் ஆசை,சோறு ஆசை எல்லாம் உண்டாக்கினீர்கள். என்னைத் தொட்டுத் தடவிச் செல்லம் கொஞ்சினீர்கள். என் குட்டிகளையும் சீராட்டி னீர்கள். எனக்குப் பெருவாழ்வு வந்ததாக நானும் பூரித்து மகிழ்ந்து போனேன். பிறகு என் குட்டிகளை ஒன்றொன் றாக – பால் மறக்காத பருவத்திலேயே – என் கண் காணாமல் எங்கேயோ கொண்டு போய்த் தொலைத்தீர்கள். என்னையும் கரித்து ஓடச் செய்தீர்கள். வாழ்க்கையே எனக்கு வெறுத்துப் போய்விட்டது. கிணற்றில் விழுந்து சாகப் போனேன். என்னைக் கரையேற்றிக் காப்பாற்ற வந்துவிட்டீர்கள். ஏன்? எதற்காக? ஐயோ ! இந்த அவமானம் என்னால் தாங்க முடியவில்லை” என்று அது நினைத்ததோ என்ற எண்ணந்தான்.
இதே சமயத்தில், “அடடா ! என்ன பாவம் ! எப் படியெல்லாம் இதைச் சீராட்டினோம்! மனுஷர்களுக்குக் கஷ்டம் வந்தால் ஒன்றுக்கு மேல் ஒன்றாக வரும் என்பார்கள். இந்தப் பூனைக்குக்கூட அப்படித்தான் வந்திருக்கிறது” என்றாள் மனைவி.
அதைக் கேட்டு என் மனம் வேதனை அடைந்தது.
ஒன்றிரண்டு மாதங்கள் சென்றன. அண்டை அயல் கூரைகளிலும் மச்சுகளிலுங்கூடப் பூனை என் கண்ணில் இப்போது தென்படவில்லை. அது அப்படி வெட்கத்தால் ஒளிந்து திரிந்ததோ; அல்லது நவீன மனத்தத்துவ சாஸ் திரிகள் சொல்வது போல் என் உள்மனத்துள் புதைந்து கிடந்த கூச்சத்தால் நான்தான் பார்க்கவில்லையோ எனக் குத் தெரியாது.
மீண்டும் ஒரு நாள்–
மாடியில் தன்னந் தனியே உட்கார்ந்து ரேடியோ வைத் திருகிக்கொண்டிருந்தேன்.
நான் சற்றும் எதிர்பாராதபடி அந்தப் பூனை – எங்கள் கறுப்புப் பூனை – வாழ்வையும் தாழ்வையும் கண்ட பூனை கரும்பட்டுப் போன்ற மேனியை உடைய யோகினிப் பூனை- இதோ என் அருகே வந்தது.
“மியா”
அதே பழைய குரல்! பரிதாபக் குரல் !
“என்னை எவ்வளவுதான் நீங்கள் உதறித் தள்ளினாலும், அதையெல்லாம் நான் பாராட்டவில்லை. பகைமை என்பது பொய்; வெறுப்பு என்பது பொய்; சகியாமை பந்தந்தான் என்பது பொய்; நிக்கிரகம் என்பது பொய். இன்பம்; பாசந்தான் இன்பம்; வாழ்வுதான் இன்பம். வாழ வைப்பதுதான் இன்பம். தம்பி, இதை நான் உணர்ந்துவிட்டேன். நீயும் உணர்ந்துகொள். இங்கே இந்தக் கணத்தில் என்னைப் பார்க்கும்போது, உன் மனத் திலே ஆனந்தம் உண்டாகவில்லையா?” என்று அது கேட் பது போல் தோன்றிற்று – இல்லை, இல்லை; அது கேட்டது; நிச்சயமாய்க் கேட்டது. பாஷை என்ற சங்கேதத்தின் மூலம் கேட்காவிட்டால் என்ன? தன் கண் பார்வை, குரல் தொனி, உடல் அபிநயம் இவற்றின் மூலம் கேட்டது.
“மியா/ மியா!”
எனக்குத்தானா இன்பம்? பூனைக்கும் அப்போது இன்பந்தான் ! அது தன் உடம்பை வளைத்துக் குழைந்து குழைந்து என் காலைப் பல முறை உராய்ந்து உராய்ந்து சென்றது.
அதற்குச் சீட்டியடித்துக் கூடவே அழைத்துக் கொண்டு, கீழே ஓடினேன்.
“பூனை மறுபடியும் வந்துவிட்டது. கெஞ்சுகிறது. கொஞ்சம் பால் வார்” என்று மனைவியிடம் சொன்னேன். அவள் சிரித்துக்கொண்டே, “அதற்கு என்ன வேலை? உங்களுக்குத்தான் என்ன வேலை?” என்று சிடுசிடுப்பது
போல் பாவனை செய்தபடி, கொஞ்சம் பால் கொண்டு வந்து ஒரு கொட்டங்கச்சியிலே ஊற்றினாள். அதை நக்கி நக்கிப் பூனை குடிப்பதை, ஒரு தாயின் பரிவுடன் அவள் பார்த்துக்கொண்டே நின்றாள்.
அவள் குனிந்த தலை நிமிராமலே சில கணம் பார்த்து விட்டுப் புன்சிரிப்புடன், “சரிதான்: பூனை வந்திருக்கும் விஷயம் எனக்குத் தெரிந்துவிட்டது” என்றாள்.
எனக்குச் சட்டென்று புரியவில்லை. “என்ன அது என்றேன்.”
அதன் வயிற்றைப் பாருங்கள்” என்று சொல்லி அவள் உள்ளே போய்விட்டாள்.
அதைக் கேட்டதும் எனக்குச் சிரிப்பு வந்தது. “இருக்கலாம்; இருக்கலாம்” என்று சொல்லி நகர்ந்தேன். இப்படி எங்களிடம் சௌஜன்யம் செய்துகொண்ட பூனை, முன்போல் தினந்தோறும் பாலுக்கு எங்களிடம் வரும் என்று நான் நினைத்தேன். அது அப்படி வரவில்லை. ஆனால், சகஜமாக மாடிக்கு மட்டும் வந்து போய்க்கொண் டிருக்கத் தொடங்கியது.
மூன்றுநாள் கழித்துப் பார்த்தால், அந்த ஜாதிக்காய்ப் பெட்டியிலே எலிக்குஞ்சுபோன்ற இரண்டு குட்டிகளும் தாயுமாக அந்தப் பூனை படுத்திருந்தது.
“அப்பா, இந்தத் தடவை இந்தக் குட்டிகளை எங்கே கொண்டுபோய் விடப்போகிறேன், தெரியுமா ?” என்று இப்போதே வெகு குதூகலமாய்க் கேட்கத் தொடங்கினான் எங்கள் கடைசிப் பையன்.
“எங்கேயடா?”
“கோயிலுக்கு இந்தண்டைப் பக்கம் ஒரு பஜனை மடம் இருக்கிறது பார், அதிலே” என்றான் அவன்.
நியாயந்தானே: முதலும் முடிவுமற்றுப் பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்திலே, பகவந்நாம பஜனாவளியைத் தவிர வேறு உறுதுணை ஏது? அதுதான் ஜீவராசிகளின் திக்கற்ற ஓலம்! இந்தப் பூனைக்குட்டிகளின் வாழ்வுதான்
எங்களுக்குத் தொல்லையாயிருக்கிறது. இவை அங்கே போய் நற்கதியாவது அடையட்டுமே, அதில் எங்களுக்கு எந்த விதமான ஆட்சேபத்துக்கும் இ டம் இல்லை.

தி.ஜ.ர/மளிகை நிபுணர் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)